Home இலங்கை வடமராடசி கிழக்கு மக்களை அப்பகுதியிலிருந்து வெளியேற்ற அரசு முயல்கின்றதா?

வடமராடசி கிழக்கு மக்களை அப்பகுதியிலிருந்து வெளியேற்ற அரசு முயல்கின்றதா?

by admin


மாற்று ஏற்பாடுகள் எதுவுமின்றி மருதங்கேணி வைத்தியசாலை கொறோனா சிகிச்சை நிலையமாக மாற்றப்பட்டுள்ளது.
கொறோனோ பாதிப்பு ஏற்படும் என்று பிரதேச மக்கள் மத்தியில் பெரும் பீதி எழுந்துள்ளது.

மண்டைதீவில் கடற்படையினருக்காக சுவீகரிக்கப்படவிருந்த காணிகள் பொது மக்களிடம் மீளவும் கையளிக்கப்படல் வேண்டும்.

பரந்தன் கொக்குளாய் பிரதான வீதியில் இராணுவத்தினரால் அமைக்கப்பட்டுள்ள ஒன்பது சோதனைச் சாவடிக்களும் உடனடியாக அகற்றப்படல் வேண்டும்.

இந்த உயர்வான சபையில் வரிகளைக கூட்டுவதும் குறைப்பதும் தொடர்பாக விவாதங்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்த வரிகளை கூட்டுவதும் குறைப்பதும் அனைத்துமே மக்களுடைய வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கும் அதன் மூலம் நாட்டைக் கட்டியெழுப்புவதனையும் பிரதான நோக்கமாகக் கொண்டே மேற்கொள்ளப்படுகின்றது. அதற்காகவே பெறுமதிமிக்க பலர் இந்த விவாதங்களில் கலந்து கொண்டு இந்த விடயங்கள் ஆழமாக விவாதிக்கப்படுகின்றது.


அவ்வாறாயின் இந்த வரிகள் உயர்த்தப்படுவதன் ஊடாக இந்த நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்வடைகின்றதா என்பது பற்றியும் கவனம் செலுத்தப்படல் வேண்டும். நாட்டின் அபிவிருத்தியில் சுகாதாரம் என்பதும் மிகவும் அடிப்படையான ஒன்று. அனைத்து மக்களுக்கும் அடிப்படை சுகாதார வசதிகள் கிடைக்க வேண்டும். அது மிகவும் முக்கியமான ஒன்றாகும்.

அவ்வாறிருக்கும் நிலையில் யாழ்பாணம் மாவட்டத்தில் வடமராட்சி கிழக்கு என்னும் பிரதேசம் உள்ளது. அந்தப் பிரதேசம் ஒடுங்கிய நீண்ட ஒரு பிரதேசமாகும். ஒரு பக்கம் கடலும் மறுபக்கம் களப்பும் கொண்டதும் மூன்று கிலோ மீற்றர் அகலமும் 39 கிலோ மீற்றர் நீளமும் கொண்ட பிரதேசத்திலே 12130 அங்கத்தவர்களைக் கொண்ட 4458 குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றார்கள். இந்த மக்களுடைய பிரதானமான ஜீவனோபாயம் கடற்தொழிலாகும், ஒரு பகுதியினர் விவசாயத்திலும் ஈடுபடுகின்றார்கள். யுத்தம் முடிவடைந்து பத்து ஆண்டுகள் கடந்துள்ளபோதும் கடற்தொழிலை அபிவிருத்தி செய்வதற்கான உதவிகள் எதுவும் இந்த அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை. மாறாக அந்த மக்கள் தமது சொந்த முயற்சியினால் கடற்தொழிலில் ஈடுபடுகின்றபோது கடற்தொழில் அமைச்சினது அனுமதியுடனும், கடற்படையினரின் துணையுடனும், பொலிசாரின் ஒத்துழைப்புடனும் அங்கு அத்து மீறி மீன்பிடியில் ஈடுபட வருகின்ற தென்னிலங்கை பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த மீனவர்களின் சட்ட விரோத மீன்பிடி நடவடிக்கைகள் காரணமாக இப்பகுதி மீனவர்களின் வாழ்வாதாரம் முற்றாக தொடச்சியாக அழிக்கப்பட்டுவருகின்றது. இதனால் அவர்கள் வாழ வழிதெரியாது தவித்துக் கொண்டிருக்கின்றார்கள். அத்துடன் இப்பகுதியில் விவசாயத்தை ஜீவனோபாகமாகக் கொண்ட மக்களின் தொழிலை அபிவிருத்தி செய்வதற்கும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டிருக்கவில்லை. ஆதனால் அங்குள்ள ஒட்டுமொத்த மக்களதும் வாழ்க்கைத்தரம் என்பது தொடர்ந்தும் அடிமட்டத்திலேயே இருந்துகொண்டிருக்கின்றது.


இப்படிப்பட்ட நிலையிலுள்ள இப்பிரதேசத்தில் ஒரே ஒரு வைத்தியசாலை மட்டுமே உள்ளது. இந்த வைத்தியசாலையை நம்பி 3500 மாணவர்கள் உள்ளடங்கலாக 12130 பொது மக்கள் வாழ்கின்றார்கள். இந்த வைத்தியசாலை கொறோனோ சிகிச்சைக்காகவென பொறுப்பேற்கப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக அந்த மக்களது தேவைக்கு ஏற்ப பொருத்தமான வைத்தியசாலைகள் எதுவும் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கவில்லை. அவசர அவசரமாக அந்த வைத்தியசாலைக்கு அருகிலுள்ள 100 நீளமான ஒரு கட்டடத்தில் வெளிநோயாளர் பிரிவை இயக்குவதற்கான ஏற்பாடுகள் கடந்த 5 நாட்களுக்கு முன்னதாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. நூறு அடி நீளமுள்ள அந்தக் கட்டடத்தில் 15 அடி அளவுள்ள இரண்டு அறைகளும், அறுபது அடி அளவுள்ள ஒரு மண்டபமும் மட்டுமேயுள்ளது. அந்த மண்டபம் புறா எச்சங்கள் நிறைந்த நிலையில் அவர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அந்த சிறிய கட்டடத்தினுள் வைத்தியசாலையிலுள்ள அனைத்துப் பொருட்களும் அங்கு கொண்டு செல்லப்பட்டு நிறைக்கப்பட்டுள்ளது. அந்த மக்களுக்குரிய மருத்துவ வசதிகளை மறுத்து, அந்;த மக்களை திட்டமிட்டு அந்தப் பிரதேசத்திலிருந்து வெளியேற்றுவதற்கு அல்லது அந்த மக்களை கடலில் குதித்து தற்கொலை செய்து கொள்வதற்கு அரசு தள்ளுகின்றதா என்ற கேள்வி அந்தப் பிரதேசத்து மக்களிடம் எழுந்துள்ளது.


அந்தப் பிரதேசத்து மக்கள் கொறோனோ வைத்தியசாலை அங்கு வந்தால் தமக்கு கொறோனோ தொற்றிவிடுமோ என்று அஞ்சுகின்றார்கள். வடமராடசி கிழக்குப் பிரதேசம் முழுவதற்குமான மையமாக விளங்கும் மருதங்கேணிப் பகுதியில் வைத்தியசாலை உள்ளது, பிரதேச செயலகம் உள்ளது, பிரதேசசபை உள்ளது. தபாலகம் உள்ளது, கூட்டுறவுச் சங்கம் உள்ளது, கடற்தொழில் அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கம் உள்ளது, பனை அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கம் உள்ளது, இன்னும் பல முக்கிய நிலையங்கள் உள்ளன. இந்த இடத்திற்கு நாளாந்த பல ஆயிரம் பொது மக்கள் நாலாபுறமும் இருந்து வந்து செல்கின்றார்கள். இப்படிப்பட்ட மையமான இடத்தில் கொறோனோ சிகிச்சை நிலையத்தை அமைக்கும்போதும் அந்த மக்களுக்கு இயல்பாக ஏற்படக் கூடிய அச்சத்தைப் போக்குகின்ற வகையில் அந்த வைத்தியசாலையை கொறோனோ சிகிச்சைக்காக பொறுப்பேற்கும்போது அந்த மக்களுடன் கலந்துரையாடப்படவில்லை. அத்தோடு அந்த மக்களுக்கு மாற்றான எந்த வைத்திய வசதிகளைப் பெறுவதற்கான எந்த ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருக்கவில்லை.


கடந்த 10 வருடங்களாக அடிப்படை வசதிகள் எதுவும் அந்தப் பிரதேச மக்களுக்கு செய்து கொடுக்கப்பட்டிருக்கவில்லை. அவ்வாறான நிலையில் வைத்தியசாலை விடுதியில் நோயாளர்கள் தங்கியிருந்து சிகிச்சை பெறுவதில்லை என்று காரணம் கூறப்பட்டு அந்த வைத்தியசாலை பொறுப்பெடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஐந்து நாட்களாக அங்கு வெளிநோயாளர் பிரிவு இயங்கவில்லை. அப்படியானால் இந்த மக்களின் கதி என்ன. அந்த கரையோரத்தை முழுமையாக கபளீகரம் செய்யும் நோக்கம் இந்த அரசாங்கத்திடம் இருக்கின்றதா. அந்த நோக்கத்தை அடைந்து கொள்வதற்காக அங்கிருந்து தாமாக வெளியேற வேண்டுமென்று இந்த அரசு எதிர்பார்க்கின்றதா என்று கேள்வி எழுகின்றது.


அடுத்து மண்டைதீவில் கடற்படையினருடைய தேவைக்காக காணிகளை சுவீகரிப்பதற்கு கடந்த 28.08.2020 அன்று மேற்கொள்ளப்பட்ட முயற்சிக்கு எதிராக பொது மக்கள் திரண்டு எதிர்ப்புப் போராட்டம் நடாத்தினார்கள். அதனால் சுவீகரிப்பு நடவடிக்கை அன்று நிறுத்தப்பட்டது. ஏனினும் இன்று வரை அந்தக் காணிகளை உரியவர்களிடம் கையளிக்கும் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை. சோமசுந்தரம் குகதர்சன், தியாகராசா இராசேந்திரன், சுப்பிரமணியம் இராசையா ஆகிய மூவரதும் காணிகளே இவ்வாறு சுவீகரிக்கப்படவிருந்தது. அந்தக் காணிகள் அந்த மக்களிடம் கையளிக்கப்படல் வேண்டும்.


அத்துடன் பரந்தனில் இருந்து கொக்குளாய் செல்லும் 88 கிலோ மீற்றர் நீளமான வீதியில் ஒன்பது இடங்களில் இராணுவச் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றது. இச் சோதனை நடவடிக்கைகளால் மக்களது வாழ்க்கை வேண்டுமென்றே சீரழிக்கப்படுகின்றது. மேற்படி சோதனை சாவடிகளில் நீண்டநேரம் பொது மக்கள் காத்திருக்க வேண்டியுள்ளது. நோயாளர் அம்புலன்ஸ் வண்டிகள் கூட அந்த இடங்களில் தாமதிக்கப்பட்டே செல்ல அனுமதிக்கப்படுகின்றன. கற்பிணித்தாய்மார்கள், பாடசாலை மாணவர்கள் என யார் சென்றாலும் படையினர் ஈவிரக்கமில்லாமல் அனைவரையும் கெடுபிடிகளுக்கு உள்ளாக்கியே அனுப்புகின்றனர். எனவே இந்த சோதனைச் சாவடிகள் அனைத்து உடனடியாக அகற்றப்படல் வேண்டுமென்பதனை இவ்விடத்தில் வலியுறுத்துகின்றேன்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More