கொரோனாவின் தற்போதைய உலகளாவிய பரவலை எதிர்கொள்ளவும், எதிர்கால தொற்றுநோய்களை சட்டப்பூர்வமாக எதிர்த்துப் போராடவும் உதவும் வகையில், பொதுச் சுகாதார அவசர சட்டம் இயற்ற தனிநபர் சட்ட வரைபை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் சபையில் சமர்ப்பித்துள்ளார்.
பிரித்தானியர் ஆட்சிக்கால சட்டத்தைப் பயன்படுத்தி இலங்கை இராணுவம் இரண்டாவது கொரோனா அலையை கையாள்வது மனிதாபிமானமற்றது என்ற முறைப்பாட்டுக்கு மத்தியில், இது ஒரு தனிநபர் பிரேரணையாக வர்த்தமானியில் வெளியிடப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு, இந்த வரைவு நாடாளுமன்ற பொதுச்செயலாளருக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இது பொது சுகாதாரப் பாதுகாப்பின் நிலையை அறிவிக்கவும், பொது சுகாதாரத்திற்காக சிறப்பு நடவடிக்கைகளை எடுக்கவும், அது தொடர்பான விடயங்களைச் சமாளிக்கவும் பயன்படுத்தக்கூடிய ஒரு சட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த மசோதா நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை பொது சுகாதார அவசரநிலையாக அறிவிக்கவும் சிறப்பு அவசர குழுவை நியமிக்கவும் அனுமதிக்கும்.
சுகாதார அவசரக் குழுவில் ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், சுகாதார, சமூக நலன் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட பல அமைச்சுக்களைப் பொறுப்பானதாக் கொண்டிருக்கும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், சபாநாயகர் எதிர்க்கட்சித் தலைவருடன் கலந்தாலோசித்து எதிர்க்கட்சியின் ஐந்து உறுப்பினர்களை நியமிக்க முடியும்.
அவசரகால நடவடிக்கைகளின் போது தேவைப்படுபவர்களுக்கு இலவசமாக அல்லது சலுகை விலையில் அல்லது நிவாரணம் வழங்க சமூக நல அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொது சுகாதார அவசரநிலை ஏற்பட்டால் பொதுக் கூட்டங்கள், மத அனுஷ்டானங்கள், அத்தியாவசியமற்ற வேலைகளுக்கு செல்லுதல் மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் பணிப்புரைக்கு அமைய பொது இடங்களுக்கான அணுகலை 14 நாட்களுக்கு மேற்படாமல் கட்டுப்படுத்தவும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. #பொதுச்சுகாதார #சட்ட வரைபு #சுமந்திரன் #கொரோனா #வர்த்தமானி