அம்பாறை மாவட்டம் கல்முனை பிராந்தியத்தில் உள்ள இறக்காமம் பிரதேசத்தில் மேலும் இரு கொரோனா தொற்றாளர்கள் இன்று இனங்காணப்பட்டுள்ளதாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டாக்டர் ஜீ. சுகுணன் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய இறக்காமம் பகுதியில் இருந்து தொழில் நிமிர்த்தம் கொழும்பின் புத்தக கடை ஒன்றில் பணிபுரிந்து மீண்டும் தமது இல்லங்களுக்கு திரும்பியிருந்த நிலையில் இறுதியாக அடையாளப்படுத்தப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று உள்ளவரின் தந்தையருக்கும் அவரின் சகோதரருக்கும் கடந்த 4ஆம் திகதி பெறப்பட்ட பி.சி.ஆர் மாதிரிகளின் முடிவுகள் நேற்று இரவு வெளியாகி இருந்தன.
இந்த முடிவின் படி பொசிட்டிவாக இருவரின் முடிவுகள் கிடைக்கப் பெற்றதை அடுத்து இறக்காமம் பகுதியில் மேலும் இரு நோயாளிகள் என இவ்விருவரும் அடையாளப்படுத்தப்பட்டு இன்று காலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு அனுப்ப தயார் படுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் கல்முனைப் பிராந்தியத்தில் இதுவரை மினுவாங்கொடை பேலியகொடை திவுலப்பிட்டிய கொத்தணியில் 20 பேர் கொவிட்19 உள்ளவர்களாக உறுதிப்படுத்தப்பட்டிருப்பதுடன் அம்பாறை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்கு உட்பட்ட பகுதியில் ஏற்கனவே இருவர் அடையாளப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் அம்பாறை மாவட்டத்தில் மொத்தமாக 22 பேர் இதுவரை அடையாளப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்த்ககது. #கல்முனை #கொரோனா #தொற்றாளர்கள்