வரலாற்றுச் சிறப்புமிக்க மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயம், கீரிமலை நகுலேஸ்வரம் ஆலயம் உட்பட காங்கேசன்துறை காவற்துறை பிரிவில் மாவீரர் நாள் நினைவேந்தலை நடத்த தடைவிதிக்கக் கோரி மல்லாகம் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனு நாளை பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
“நாட்டில் பயங்கரவாத அமைப்பாகத் தடை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் மாவீரர் நாள் நிகழ்வுகள் வரும் 27ஆம் திகதி நடைபெறவுள்ளன. அந்த நிகழ்வுகளைத் தடுப்பதற்கான கட்டளையை வழங்கவேண்டும்” என்று மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் காங்கேசன்துறை காவற்துறையினர் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.
இலங்கை தண்டனைச் சட்டக்கோவை 106ஆம் பிரிவின் கீழ் இந்த விண்ணப்பம் செய்யப்பட்டது.
இந்த விண்ணப்பம் இன்று நீதிமன்றால் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.
எதிர் மனுதாரர்களாக வரலாற்றுச் சிறப்புமிக்க மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயம், கீரிமலை நகுலேஸ்வரம் ஆலயம் ஆகியவற்றின் நிர்வாகம், பூசகர் ஆகியோர் உள்பட்டோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
இந்த மனு அழைக்கப்பட்ட போது மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தலைமையிலான 6இற்கு மேற்பட்ட சட்டத்தரணிகள் தோன்றினர்.
“பொலிஸாரின் விண்ணப்பதில் உள்ள விடயம் தொடர்பில் மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் நாளை அழைக்கப்படவுள்ள நிலையில் காவற்துறையினர் இந்த விண்ணப்பத்தை தாக்கல் செய்துள்ளனர். அதனால் மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யபட்ட எழுத்தாணை மனுவின் முடிவை வைத்து இந்த விண்ணப்பதை விசாரணைக்கு எடுக்கவேண்டும்” என்று சட்டத்தரணி வி.மணிவண்ணன் மன்றுரைத்தார்.
அதனால் வழக்கை நாளை பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைத்த மல்லாகம் நீதிவான் நீதிமன்றம், பிரதிவாதிகளுக்கு அறிவித்தலை சேர்ப்பிக்க உத்தரவிட்டது. #மாவீரர்நாள் #நினைவேந்தல் #காங்கேசன்துறை #மனுஒத்திவைப்பு