ஊழியர் சேமலாப நிதியத்தின் பிரதி பலன்களைப் பெற்றுக்கொள்வதற்காகவும், அதற்கான விண்ணப்பப் படிவங்களை ஒப்படைப்பதற்காகவும் கொழும்பு – நாரஹென்பிட்டி தொழிலாளர் செயலகத்துக்கு வருவதைத் தவிர்க்குமாறு, தொழில் ஆணையாளர் நாயகம் பொது மக்களைக் கேட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக கூடுதலான மக்களை பிரதான அலுவலகத்துக்கு வருவதைத் தவிர்ப்பது இதன் நோக்கமாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஊழியர் சேமலாப நிதியத்தின் (EPF) கொடுப்பனவுகளுடன் சம்பந்தப்பட்ட அனைத்து நடவடிக்கைகளையும் நாடு பூராகவும் உள்ள மாவட்ட மற்றும் வலய அலுவலகங்களில் மேற்கொள்ள ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாவட்ட மற்றும் வலய மட்ட தொழிலாளர் அலுவலகங்களில் சமர்ப்பிக்கப்பட்ட ஊழியர் சேமலாப நிதியத்தின் பிரதி பலன்களைப் பெற்றுக்கொள்வதற்கான விண்ணப்பங்கள் அந்த அலுவலகங்கள் ஊடாக இலங்கை மத்திய வங்கியில் நேரடியாக சமர்ப்பிக்க வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக அரச தகவல் திணைக்களம் செய்தி வெளியிட்டுள்ளது.
ஆகவே விண்ணப்பங்களை மாவட்ட அல்லது வலய அலுவலகங்களில் சமர்ப்பிப்பதன் ஊடாக, சலுகைகளைப் பெறுவதில் தாமதம் ஏற்படாது எனவும் தாமதம் அல்லது பீதியை ஏற்படுத்திக்கொள்ள வேண்டாம் என தொழில் ஆணையாளர் நாயகம் சட்டத்தரணி பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார்.
எனினும், கொழும்பு பகுதியில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்த ஒருவர் பிரதி பலன்களை பெற்றுக்கொள்ள விரும்பினால் அந்த நிறுவனம் இப்போது மூடப்பட்டிருந்தால் மாத்திரம் அவர் நேரடியாக தொழிலாளர் செயலகத்திற்கு வருகைத்தந்து விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
களுத்துறை, கம்பஹா, கண்டி, காலி, யாழ்ப்பாணம், இரத்தினபுரி, அப்புத்தளை, காலி, கம்பளை, ஹம்பந்தோட்டை, திருகோணமலை, நுவரெலியா, ஜா-எல, பாணந்துறை தெற்கு, , கஹவத்தை, கேகாலை, குருநாகலை, மாத்தளை, பொலன்னறுவை, வவுனியா, புத்தளம்,மஹவ, மற்றும் வென்ணப்புவ ஆகிய பிரதேசங்களில் அமைந்துள்ள மாவட்ட மற்றும் வலய அலுவலகங்களில் ஊழியர் சேமலாப நிதியத்தின் பிரதி பலன்களைப் பெற்றுக்கொள்வது தொடர்பிலான சேவைகளைப் பெற்றுக்கொள்ள முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது. #EPF #கொழும்பிற்கு #ஊழியர்சேமலாபநிதி #கொரோனா