மேற்குலக நாடுகளின் காலனித்துவ ஆட்சியினைத் தொடர்ந்து காலனித்துவத்திற்குள் அகப்பட்டிருந்த நாடுகளில், மேற்குலகின் கைத்தொழில் புரட்சியின் பின்னர் உருவாக்கம் பெற்ற நவீன இயந்திரங்களும் அவை சார்ந்த உபகரணங்களும் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தன. இந்த அறிமுகப்படுத்துகையானது மிகப்பெரும்பாலும் மேற்குலகின் நவீன இயந்திர உற்பத்தித்துறையின் வணிக நோக்குடனேயே நடைபெற்றிருந்தது.
உதாரணமாக பாரம்பரியமான வேளாண்மை விவசாயத்தில் கால்நடைகள் செய்து வந்த நடவடிக்கைகளை மாற்றியமைப்பதற்கு ஏதுவாக அறிமுகப்படுத்தப்பட்ட உழவு இயந்திரமானது விவசாய விருத்திக்கானது எனக்கூறப்பட்டாலும் அதன் மிகப்பிரதான நோக்கம் உழவு இயந்திர வணிகத்துடன் சம்பந்தப்பட்டதாகவே இருந்துள்ளது. உழவு இயந்திரத்தின் வருகையால் பாரம்பரிய விவசாயத்தில் கடைப்பிடிக்கப்பட்டு வந்த சுழற்சி முறையிலான உற்பத்தி முறைமைகள் சீர்குலைக்கப்பட்டன இதன் நீட்சியாக ஒரு கட்டத்தில் அருவி வெட்டும் இயந்திரம் உள்நுழையும் வழிவகைகள் ஏற்படுத்தப்பட்டன.
நவீன இயந்திரங்களினதும், பொறிகளினதும் வருகையானது பாரம்பரியமான உற்பத்தி உறவுகளிலும் அதுசார்ந்த பண்பாடுகளிலும் பலமான தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக சுயசார்பான உள்ளுர் தொழில்நுட்பப் பொறிமுறைகள் மற்றும் அதுசார்ந்த பண்பாட்டு அம்சங்கள் வலுவிழந்து நுகர்வுப்பண்பாட்டிற்குள் தள்ளப்படுவதற்கான வழிவகைகளை இவை உருவாக்கியுள்ளன என விமர்சிக்கப்படுகின்றன.
இருந்த போதிலும் நவீன தொழில்நுட்பத்தினாலான இயந்திரங்களின் அறிமுகத்தையடுத்து அத்தகைய தொழில்நுட்பத்தை உள்வாங்கி அதனை உள்ளுர்த் தொழில்நுட்ப வல்லமையுடன் பயன்படுத்தும் போக்கு நமது நாட்டில் விருத்தியடைந்துள்ளமையினைப்பற்றி நாங்கள் அறிந்து கொள்ள முடிகின்றது. அதாவது ஒரு இயந்திரமோ பொறியோ வெளியிலிருந்து தருவிக்கப்பட்டதன் பின்னர் அதனைத் தொடர்ச்சியாகப் பல தசாப்தங்களுக்குப் பயன்படுத்தும் தொழில்நுட்ப வல்லமை கொண்ட நபர்கள் நமது நாட்டில் விருத்தி பெற்று வந்துள்ளார்கள்.
இன்றுங் கூட நம்மிடையே ஒரு சில விவசாயிகளிடையே அரைநூற்றாண்டைக் கடந்த உழவு இயந்திரங்கள் பாவனையில் இருப்பதனை நாம் காண்கின்றோம். இவ்வாறு வெளியிலிருந்து வரும் புதிய தொழில்நுட்பச் சாதனங்களைத் திருத்தஞ்செய்து மீளமீளப் புதுப்பித்து அவற்றிலிருந்து உச்சபட்ச பயனைப்பெறும் உள்ளுர்த் தொழில்நுட்ப வல்லுனர்கள் நமது பண்பாட்டில் வலுவாக்கம் பெற்று வந்துள்ளார்கள். இத்தகைய தொழில்நுட்ப வல்லுனர்கள் ஊரறிந்த நாடறியா வளமாகவே வாழ்ந்துள்ளார்கள், வாழ்ந்து வருகின்றார்கள்.
சுமார் மூன்று தசாப்தங்களாகத் தொடர்ந்த உள்நாட்டுப் போர்க்காலத்தில் புதிய நவீன இயந்திரங்களினதும், பொறிகளினதும் வருகைகள் மட்டுப்படுத்தப்பட்டிருந்த போது ஏற்கெனவே தருவிக்கப்பட்டிருந்த இயந்திரங்களையும் பொறிகளையும் உச்சபட்சமாகப் பயன்படுத்தும் வல்லமையுள்ள தொழில்நுட்ப வளதாரிகள் நம்மிடையே இயங்கி வந்தார்கள். பாவனையில் அல்லாத பழைய வாகனங்களின் பயன்படுத்தக்கூடிய பாகங்களைப் பெற்று புதிய வாகனங்களைப் படைத்து போக்குவரத்திற்காகப் பயன்படுத்தும் நிலைமைகள் அத்தகைய காலத்தில் காணப்பட்டிருந்தன. இத்தகைய புதிய படைப்புக்களை மேற்கொள்ளத்தக்க நிபுணத்துவம் மிக்க தொழில்நுட்பவியலாளர்கள் பலர் நமது சூழலில் மிகவும் பிரபல்யம் பெற்றுத் திகழ்ந்தார்கள்.
இவர்கள் துறைசார்ந்து சிறப்புத் தேர்ச்சி மிக்கவர்களாகவும் விளங்கினார்கள் உதாரணமாக உழவு இயந்திரம் திருத்துனர், கனரக மோட்டார் வாகனங்களின் பொறிகளைத் திருத்தும் வல்லுனர்கள், மென்ரக மோட்டார் வாகனங்களின் பொறிகளைத் திருத்தும் வல்லுனர்கள், வாகனங்களின் மேல்பகுதிகளில் ஏற்படும் நெளிவு மற்றும் உராய்வுப் பழுதுகளைச் செம்மையாக்கஞ் செய்வோர், கனரக வாகனங்களுக்கான (லொறி, பஸ்) மேற்பகுதியினை உருவாக்குவோர், வாகனங்களுக்கான வர்ணங்களைக் கச்சிதமாக பூசுவோர், மோட்டார் வாகனங்களின் இலத்திரனியல் பழுதுகளைச் சரிபார்க்கும் வல்லுனர்கள், இரு சக்கர இயந்திரங்களைத் திருத்தஞ் செய்வோர், மிதி வண்டிகளைத் திருத்தஞ் செய்வோர், நீர் இறைக்கும் இயந்திரங்களைத் திருத்துவோர், மின்சக்தியில் இயங்கும் வீட்டு உபகரணங்களைத் (வானொலி, தொலைக்காட்சி, மின்விசிறி) திருத்துவோர், கணினி, தொலைபேசி திருத்துனர் என நமது சூழலில் நவீன இயந்திரத் தொழில்நுட்பவியலாளர்கள் பற்றிய வரலாறும் அத்தகையோருக்கான பண்பாட்டுப் பெறுமானங்களும், மரபின் தொடர்ச்சியும் ஆழஅகலங்களைக் கொண்டதாக அறியப்படுகின்றது.
இத்தகைய தொழில்நுட்ப வல்லுனர்கள் மிகப்பெரும்பாலும் சிறு பராயத்திலிருந்து தன்னார்வம் காரணமாக இத்தகைய செயற்பாடுகளில் துறைபோன தொழில்நுட்ப நிபுணர்களை நாடிச்சென்று அவர்களின் உதவியாளர்களாக ஆர்வத்துடன் ஈடுபட்டு வந்தமையினாலேயே ஒரு கட்டத்தில் துறைசார் நிபுணர்களாக பரிணாமமடைந்தார்கள் என்பதை அறிந்து கொள்ள முடிகின்றது.
இவர்கள் செயல்முறையில் கற்ற தளங்களான கராஜ், கம்மாளை, சைக்கிள் கடை என்பன செயல்முறைக்கல்வியை வழங்கிய இடங்களுக்கான எடுத்துக்காட்டுக்களாக உள்ளன. அத்துடன் இத்தகைய இடங்கள் கருத்துருவாக்கக் களங்களாகவும் விளங்கியுள்ளன அதாவது குறித்த களங்களில் பத்திரிகைகள் வாசித்தல், சேவை பெறுவதற்காக வருபவர்கள் நாட்டு நடப்புக்கள் இத்தியாதிகள் குறித்து உரையாடுதல், விவாதித்தல் எனக்கருத்துக்கள் உருவாக்கப்படும் வெளிகளாக இக்களங்களை இயங்கச்செய்துள்ளது.
தற்போது தொழில்நுட்பக்கல்வி குறித்து அதிக அக்கறை காட்டப்படும் சூழலில் தன்னார்வங் காரணமாக தொழில்நுட்பக் கல்வியைச் செயல்முறையாகப்பெற்று துறைசார் நிபுணர்களாகத் தங்களை நிரூபித்துவரும் மேற்படி தொழில்நுட்பவியலாளரின் அனுபவங்கள் உரையாடலுக்குக் கொண்டுவரப்படுதல் இன்றியமையாததாக உள்ளது. நாடக அரங்கக்கற்கையில் பாரம்பரியமான அண்ணாவிமார்கள் வருகைதரு கலைஞர்களாக உயர்கல்வி நிலையங்களுக்குள் உள்வாங்கப்பட்டதைப் போல் தொழில்நுட்பக் கற்கையிலும் இத்தகைய தொழில்நுட்ப வல்லமையாளர்களின் வழிப்படுத்தலுக்கான வாய்ப்புக்கள் ஏற்படுத்தப்படுவது ஆக்கபூர்வமானதாக அமைந்திருக்கும்.
இவர்கள் ஒவ்வொருவரும் தத்தமக்கான நிரந்தரமான வாடிக்கையாளர்களைப் பெற்றவர்களாகவும் மிளிர்ந்து வருகிறார்கள். தமது வாடிக்கையாளர்களுக்கு முழுத்திருப்தியை வழங்கும் தொழில்நுட்ப வளவாளர்களாக செயற்படுகின்றார்கள். வாடிக்கையாளர்களின் வாகனங்களுக்கான இராசியுள்ள திருத்துனர்களாக வாடிக்கையாளர்களால் இவர்கள் முத்திரை குத்தப்பட்டுள்ளார்கள் இதன்காரணமாக இவர்களில் மிகவும் அதிகமானவர்கள் தொழிலைத் தேடுபவர்களாகவன்றி தொழில் தேடிவரும் வல்லமையுள்ளவர்களாக செல்வச் செழிப்புடன் வாழும் நிலை வாய்க்கப்பெற்றுள்ளார்கள். இத்தகைய தொழில்நுட்ப வல்லுனர்கள் ஆர்வத்துடன் தம்மை நோக்கி வரும் இளந்தலைமுறையினரை உள்ளீர்த்து அவர்களுக்கு உள்ளுர்த் தொழில்நுட்ப அறிவையும், திறனையும் அதற்கான மனப்பாங்குகளையும் வலுப்படுத்தும் ஆசிரியர்களாகவும் செயலாற்றிய அதேவேளை உள்ளுர்த் தொழில் வழங்குனர்களாகவும் காரியமாற்றினர்.
சேவை வழங்குனர், வாடிக்கையாளர் என்பதையுங் கடந்த தொழில் கண்ணியத்தை மையப்படுத்திய நட்புறவு இத்தகைய தொழில்நுட்பவியலாளர்களுக்கும் அவர்களுடைய வாடிக்கையாளர்களுக்குமிடையே வலுப்பெற்றுத் திகழ்ந்தது. அதாவது தனது வாடிக்கையாளரின் வாகனத்தைத் தனது வாகனமாகக்கருதி திருத்தஞ் செய்யும் மனப்பாங்கு இங்கு மேலோங்கியது. கொடுக்கல் வாங்கல்களிலும் பேரம் பேசுதல், மனக்கசப்புக்கள் அல்லாத மனப்பூர்வமான மகிழ்ச்சிகரமான தன்மையே நிறைந்திருந்தது.
இத்தகைய தொழில்நுட்ப வல்லுனர்களில் சிலர் பழுதுபார்த்தல், திருத்தஞ்செய்தல் என்பதற்கும் மேலாக புத்தாக்கங்களை உருவாக்குவதிலும் ஆர்வத்துடன் ஈடுபட்டு வந்துள்ளார்கள். சிறியரக வாகனங்கள்;,முச்சக்கர வண்டி எனப் புதிய படைப்புக்களை இருக்கின்ற கிடைக்கின்ற வளங்களைக்கொண்டு ஆக்குவதிலே ஈடுபட்டுள்ளார்கள். இவர்களுடைய இத்தகைய முயற்சிகள் பொதுத்தளத்தில் தட்டிக்கொடுத்து ஊக்குவிக்கப்பட்டதாக அறியமுடியாதுள்ளது. பெரும்பாலும் இத்தகைய முயற்சிகள் நகைப்புக்குரியதாகவே கவனிக்கப்பட்டு வந்துள்ளன. அதாவது நவீன இயந்திர உபகரணங்களின் படைப்பாக்கமானது மேலைத்தேயத்தவருக்குரியது என்கின்ற காலனிய மனோநிலையால், நாம் நமது சூழலில் அரும்பிய தொழில்நுட்ப புத்தாக்குனர் பற்றி அக்கறை செலுத்த முடியாதவர்களாக வாழத்தலைப்பட்டுள்ளோம். நமது சூழலில் புதிய தொழில்நுட்பங்கள் விருத்தி பெறாமைக்கு இத்தகைய காலனிய மனோநிலை பெருந்தடையாக இருந்து வருகின்றது.
இன்றைய சூழலில் இத்தகைய உள்ளுர்த் தொழில்நுட்பவியலாளர்களின் உருவாக்கம் பல சவால்களை எதிர்நோக்கியதாக மாறி வருவதனை அவதானிக்க முடிகின்றது. தற்போதைய நிலையில் வாகனங்களைப் பழுது பார்த்தல், அதனைத் திருத்தஞ் செய்தல் என்னுந் தன்மை மெது மெதுவாக இல்லாமலாக்கப்பட்டு பழுதடைந்த இடத்தில் புதியதைப் பொருத்துதல் என்பதாக மாற்றமடைந்து வருகின்றது.
இது வாகன உதிரிப்பாகங்களின் வணிகத்துடன் சம்பந்தப்பட்டதாக காணப்படுகின்றது. வாகன உதிரிப்பாக வணிகமானது அங்கீகாரமளிக்கப்பட்ட முகவர்களையும், சேவை வழங்குனர்களையும் பரிந்துரைக்கின்றது.
இதன்காரணமாக உள்ளுர்த்தொழில்நுட்ப வல்லமையாளர்களும் அவர்களின் வாகனப் பழுதுபார்த்தல் திறனும் அந்த உள்ளுர்த்தொழில்நுட்ப மரபும் பலவீனமடைவதனை அவதானிக்க முடிகிறது. இதனால் உள்ளுர்த் தொழில்நுட்பவியலாளர்களின்றி உதிரிப்பாகங்களைப் பொருத்துனர்களே பிரபல்யமாகி வருகின்றார்கள். இதனாலேயே இளம் வயதிலேயே (போதிய நிபுணத்துவமின்றி) தனியாக மோட்டார் வாகனம் திருத்தும் நிலையங்களை உருவாக்கும் துணிவும் தைரியமும் வலுவடைவதனை அவதானிக்க முடிகிறது. இது நாம் மேலே பார்த்த உள்ளுர்த் தொழில்நுட்பவியல் துறையின் வரலாற்றிலும் அதன் பண்பாட்டிலும் ஏற்படும் பாரிய தாக்கமாக உணரப்படுகின்றது. காலனிய ஆதிக்கம் உள்ளுர் நிபுணத்துவங்களை பாமரத்தனமானது, மூடத்தனமானது, அங்கீகாரமற்றது எனக்கூறிப் புறக்கணித்து அதனிடத்தில் தனது ஆதிக்கத்திற்கான சந்தைப்படுத்தல்களை மேற்கொண்ட செயற்பாட்டின் தொடர்ச்சியாக தற்போதைய நிலையில் உள்ளுர்த் தொழில்நுட்ப வல்லமைகளைப் புறக்கணித்து பாகங்களைப் பொருத்தும் நிலைமையினை வலுப்படுத்தி வருகின்றது.
எனவே நம்மத்தியில் இயங்கிக் கொண்டிருக்கும் ஊரறிந்த நாடறியா தொழில்நுட்ப வல்லமைகள் குறித்தும் அவர்களின் இன்றைய முக்கியத்துவங்கள் பற்றியும் அக்கறை செலுத்தி சமகாலத் தேவைகளுக்கேற்ப இத்தகைய நிபுணத்து மரபை மேம்படுத்துவது குறித்து சிந்திப்போம்.
ஆக்கம் – கலாநிதி சி.ஜெயசங்கர், து.கௌரீஸ்வரன்