இலங்கை பிரதான செய்திகள்

விலங்குவதைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை – காவல்துறைமா அதிபருக்கு எதிராக குற்றச்சாட்டு

தலைநகர் அருகே நன்கு அறியப்பட்ட ராஜமஹா விகாரையில் யானை குட்டி ஒன்று நீண்ட காலமாக கொடூரமாக சித்திரவதை செய்யப்படுவதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், காவல்துறை மாஅதிபருக்கு எதிராக  வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக முன்னாள் சட்டத்தரணி ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

“பெல்லன்வில விகாரையின் நாயக்க தேரரால் பர்மாவிலிருந்து பரிசளிக்கப்பட்ட ஒரு  யானை அடித்து கொல்லப்பட்ட பின்னர் யானை கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டது.” என்ற தலைப்பில், 2021 ஜனவரி 15ஆம் திகதி, காவல்துறை மாஅதிபருக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில், முன்னணியின் செயற்பாட்டாளரும், பொது உரிமை மேம்பாட்டு அமைப்பின் செயலாளருமான நாகானந்த கொடித்துவக்கு  இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.  

சட்டத் தொழிலுக்கு இணங்காத அறிக்கைகளை வெளியிடுவதன் மூலம் இரண்டு உச்சநீதிமன்ற விதிகளை மீறிய குற்றச்சாட்டின் பேரில் உச்சநீதிமன்றத்தால் மூன்று ஆண்டுகளுக்கு சட்டத்தரணி தொழிலில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட நாகானந்த கொடித்துவக்கு, காவல்துறைமாஅதிபருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில், இது குறித்து ஏற்கனவே முறைப்பாடு செய்யப்பட்டுள்ள போதிலும் நீண்ட காலமாக தொடர்ந்த சித்திரவதையில் இருந்து விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.  

குட்டி யானை எவ்வாறு சித்திரவதை செய்யப்படுகிறது என்பதை காணொளி ஆதாரங்களுடன் சட்டத்தரணி நாகானந்த கொடித்துவக்கு காவல்துறை மாஅதிபருக்கு விளக்கமளித்துள்ளார்.

 “யானைக் குட்டியின் பின்னங்கால்களை ஒன்றாகக் கட்டி, எழுந்து நிற்க முடியாதவாறு செயற்படுவது சித்திரவதைச் சட்டத்தைக் கொண்ட ஒரு நாட்டில் ஒருபோதும் நடக்காது.”

இது முற்றிலும் சட்டவிரோத, ஒழுக்கக்கேடான செயல் எனவும்,  விலங்குகள் மீது கொடூரமான மற்றும் மனிதாபிமானமற்ற செயற்பாடுகளை மேற்கொள்வது குற்றச் செயல் எனவும் முன்னாள் சட்டத்தரணி சுட்டிக்காட்டியுள்ளார்.

பௌத்தம் என்பது அரச மதம் என்றும், அதை வளர்ப்பதில் அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது எனக் குறிப்பிட்டுள்ள நாகானந்த கொடித்துவக்கு, யானை சித்திரவதைக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்துவதில் நாடு தொடர்ந்து தவறும் பட்சத்தில், பௌத்தம் என்ற பெயரில், குற்றவாளிகளைப் பாதுகாப்பதற்காக பதவியை துஷ்பிரயோகப்படுத்தியமைத் தொடர்பில் காவல்துறை மாஅதிபருக்கு எதிராக  வழக்குத் தாக்கல் செய்யப்போவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பெல்லன்வில ரஜமஹா விகாரையைச்  சேர்ந்த மியன் குமார என்ற யானை, ஒரு குளத்தில் படுத்துக் கொண்ட நிலையில், யானையை அதன் முன் மற்றும் பின் கால்களால் கட்டி, தடியால் அடித்தமையால் யானை வலியால் கத்திக் கொண்டிருக்கும் காணொளிகள் கடந்த வருடம் சமூக ஊடகங்களில் பரவியிருந்தன.

மியான் குமார என்ற 16 வயது குட்டி யானைக்கு பெல்லன்வில ரஜமகா விகாரைக்கு மியன்மார் அரசு பரிசாக வழங்கியதோடு, குட்டி யானை 2013இல் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டது.

பேராசிரியர் பெல்லன்வில விமலரதன தேரர் 2018இல் மியன் குமாரவால் தாக்கப்பட்டார். அந்த நேரத்தில் ஊடகங்கள் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும், குறிப்பாக விலா எலும்புகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், வைத்தியசாலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன.

எனினும், இதுபோன்ற தாக்குதல் நடந்ததளை விகாரை நிர்வாகம் மறுத்ததோடு, அந்த நேரத்தில் பேராசிரியர் விமலரதன தேரர் யானைக்கு உணவளிக்கச் செல்லும்போது விழுந்து காயத்திற்கு உள்ளானதாகவும் குறிப்பிட்டிருந்தது. #விலங்குவதை #காவல்துறைமாஅதிபருக்கு #குற்றச்சாட்டு #நாகானந்தகொடித்துவக்கு #பெல்லன்வில_விகாரை

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.