Home இலங்கை குருந்தூர் மலையும் இராணுவமயம் – படையினர் புடை சூழ, தொல்பொருள் அகழ்வு ஆரம்பம்!

குருந்தூர் மலையும் இராணுவமயம் – படையினர் புடை சூழ, தொல்பொருள் அகழ்வு ஆரம்பம்!

by admin


தமிழ் மக்களுக்கு சொந்தமான புராதன ஆதிசிவன் அய்யனார் ஆலயம் அமைந்துள்ள வயல் நிலங்கள் காணிகள், உள்ளடங்கிய குமுளமுனை தண்ணிமுறிப்பு குருந்தூர் மலை மற்றும் மணலாறு படலைக்கல்லு பகுதி ஆகிய இடங்களில் தொல்பொருள் அகழ்வு பணிகள் ஆரம்பித்துவைக்கப்பட்டன.

இரண்டு புராதன பௌத்த விகாரைகள் இருந்தமைக்கான தொல்லியல் சிதைவுகள் காணப்படுவதாக தெரிவித்து தொல்லியல் திணைக்களத்தால் அகழ்வு ஆராய்ச்சி பணிகள் இன்றையதினம் (18.01.21) ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளன .

இந்த அகழ்வு ஆராய்ச்சிப்பணிகளை இராணுவத்தினர் புடைசூழ தேசிய மரபுரிமைகள், அருங்கலைகள் மற்றும் கிராமிய சிற்பக்கலைகள் மேம்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க, மற்றும் தொல்லியல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் அனுர மானதுங்க மற்றும் தொல்லியல் அமைச்சின் செயலாளர், முல்லைத்தீவு பாதுகாப்பு படைகளின் தளபதி ஜெகத் ரத்நாயக்க ஆகியோர் பௌத்த ஆகம முறைப்படி பிரித் ஓதி ஆரம்பித்து வைத்தனர்.

இதன்போது புத்தர்சிலை ஒன்று குருந்தூர்மலை பகுதிக்கு கொண்டுவரப்பட்டு வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டு அகழ்வாராய்ச்சி நடவடிக்கை ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது.

மணலாறு படலைகல்லு என்னும் பகுதியிலும் கல்யாணிபுர என்னும் மற்றும் ஒரு விகாரை சிதைவுகள் காணப்படுவதாக தெரிவித்து இன்றையதினம் (18)அங்கும் தொல்லியல் அகழ்வாராச்சி பணிகள் முன்னெடுக்கபட்டுள்ளது.

இலங்கை இராணுவத்தின் 59 ஆவது படைப்பிரிவின் 591 ஆவது பிரிகேட்டினால் ஏற்பாட்டு பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன .

இராணுவத்தினரின் கொடிகள் குருந்தூர் மலை சூழ நாட்டப் பட்டு நூற்றுக்கணக்கான இராணுவம் மற்றும் காவற்துறையினர் பாதுகாப்பு கடமைகளுக்காக குருந்தூர் மலையிலிருந்து அருகிலுள்ள குமுளமுனை கிராமம்வரைக்கும் நிறுத்தப்பட்டு இந்த நடவடிக்கை முன்னெடுக்க பட்டது.

இதன் போது கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர் , “இந்த பகுதியில் குருந்தாசேவ புராதன விகாரை ஒன்று இருந்ததாக 1932 இல் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானியில் குறிப்பிட பட்டுள்ளது. இது ஒரு தொல்லியல் பிரதேசம் இங்கே இருக்கும் தொல்லியலை பாதுகாக்க வேண்டியது தொல்லியல் திணைக்களத்தின் கடமை இந்த நிலையில் இந்த தொல்லியல் சிதைவுகள் குறித்து அகழ்வு ஆராய்ச்சி நடவடிக்கைகளை மேற்கொண்டு மேலதிக நடவடிக்கைகளை தொல்லியல் திணைக்களம் முன்னெடுக்கவுள்ளது” எனக் குறிப்பிட்டள்ளார்.

இந்த நிலையில் குறித்த மலை பகுதியில் தமிழ் மக்கள் வழிபட்டுவந்த புராதன ஆதிசிவன் அய்யனார் ஆலயம் காணப்பட்ட நிலையில் அங்கு குமுளமுனை ,தண்ணிமுறிப்பு கிராம மக்கள் சென்று பொங்கல் பொங்கி வழிபாடுகளில் ஈடுபட்டு வந்திருந்தனர்.

ஆனால், நேற்றைய தினம் (17.01.21) குருந்தூர் மலை பகுதிக்குள் சென்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் அவ்வாறான ஆலயம் அங்கு இல்லாது உடைத்து அழிக்கப்ட்டுள்ளதாக தெரிவித்தனர். இந்த நிலையில் குருந்தூர் மலையில் இருந்த சூலம் ஒன்று இடம் தெரியாது உடைத்து எறியப்பட்டுள்ளது அங்கிருந்த ஆலய சின்னங்கள் அனைத்தும் காணாமல் செய்ய பட்டுள்ளன.

முன்னதாக நேற்றைய தினம்(17.01.21) கிராம மக்களின் முறைப்பாட்டின் பேரில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் , செல்வராசா கஜேந்திரன் , செல்வம் அடைக்கலநாதன் , வினோ நோகராதலிங்கம் ஆகியோர் இந்த பகுதிக்கு பார்வையிடுவதற்க்காக சென்றிருந்த நிலையில் இராணுவத்தினரும் தொல்லியல் திணைக்களத்தினரும் தடைகளை ஏற்படுத்தியிருந்தனர். மிக நீண்ட வாய்தர்க்கத்தை அடுத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரம் உட்செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

அந்த இடத்துக்கு செய்தி சேகரிக்க சென்ற பிரதேச ஊடகவியலாளர்களுக்கு நேற்று (17.01.21)அனுமதி மறுக்கட்டிருந்தது. இந்த நிலையில் இன்றையதினம் (18.01.21) கொழும்பிலிருந்து வருகைதந்திருந்த ஊடகவியலாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இந்த விடயத்தை சுட்டிக்காட்டி பிரதேச ஊடகவியலாளர்கள் தொல்லியல் திணைக்களத்திடம் கேள்வி எழுப்பினர். அதன்பின்னர், பிராந்திய ஊடகவியலாளர்களும் இறுதியில் அனுமதி வழங்கப்பட்டது.

இருந்த போதிலும் அகழ்வாராய்ச்சி பணி இடம்பெறும் மலையில் உள்பகுதியில் காணப்பட்ட படையினர் பிரதேச ஊடகவியலாளர்களை ‘நீங்கள் தமிழா’ என கேட்டு வெளியே செல்லுமாறு பணித்ததோடு ஊடகவியலாளர்களை புகைப்படங்களையும் எடுத்தனர்.

அகழ்வு பணிகளுக்காக குருந்தூர் மலையில் நின்ற பல நூற்றுக்கணக்கான காட்டு மரங்கள் அறுத்து வீழ்த்த பட்டுள்ளன. அமைச்சரின் வருகைக்காக பல மாதங்களாக குன்றும் குழியுமாக காணப்பட்ட தண்ணிமுறிப்பு குளத்துக்கு செல்லும் வீதி, வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் மாகாண பொறியியலாளரின் உத்தரவின் பேரில் இரண்டு நாட்களில் அவசர அவசரமாக செப்பனிட பட்டிருந்தது.

பல வருடங்களாக இந்த வீதியை செப்பனிட்டு தருமாறு தண்ணிமுறிப்பு குளத்தின் கீழ் விவசாயம் செய்துவரும் விவசாயிகள் அரசாங்கத்திடம் கோரிக்கைவிடுத்தும் செப்பனிட படாத வீதி அமைச்சர் வருகைதந்து விகாரையின் தொல்லியல் பணிகளை ஆரம்பித்து வைப்பதற்காக அவசர அவசரமாக செப்பனிடபட்டதாக கிராம மக்கள் குற்றம் சாட்டினார் .

குறித்த குருந்தூர்மலை இடம் தொடர்பில் ஒட்டுசுட்டான் காவற்துறையினரால் தாக்கல்செய்ய வழக்கில் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றால் 2018 இல் ஆக்கபட்ட கட்டளை ஒன்றில் அங்கே உள்ள தமிழ் மக்களுக்கு சொந்தமான ஆலயத்தில் மக்கள் வழிபடலாம் என்றும் எந்தவிதமான கட்டுமானங்களையும் இரு சாராரும் செய்ய முடியாது என்றும் தொல்லியல் திணைக்களம் மாத்திரம் ஆய்வுகளை செய்யலாம் என்றும் வேறு தரப்பினர் ஆய்வுகளை செய்ய முடியாது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதுவும், தொல்லியல் ஆய்வுகளைச் செய்வதாக இருந்தால் யாழ். பல்கலைக்கழக தொல்லியல் துறையின் பங்களிப்போடு மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் கூறபட்டிருந்தது.

இந்நிலையில் இராணுவத்தினர் நூற்றுக்கணக்காக குவிக்கப்பட்டு இராணுவமே தொல்லியல் ஆய்வுகளை செய்வதுபோல தமது கொடிகளை நாட்டி தொல்லியல் ஆய்வு என்ற பேரில் பௌத்த விகாரையை நிர்மாணித்து குறித்த தமிழ் மக்களுக்கு சொந்தமான பிரதேசத்தை சிங்கள மயபடுத்த தீவிர முயற்சி மேற்கொள்ளப்டுகின்றதா என பிரதேச தமிழ் மக்கள் கவலையும் அச்சமும் வெளியிட்டுள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More