இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவப் படகு ஒன்று நெடுந்தீவு கடற்பரப்பில்
கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் உயிரிழந்த மீனவர்கள் இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
காங்கேசன்துறை காவல்நிலையத்துக்கு கடற்படையினரால் இந்த தகவல் இன்று புதன்கிழமை மாலை அறிவிக்கப்பட்டுள்ளது.
காங்கேசன்துறை கடற்பரப்பில் இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டன.
நேற்று நெடுந்தீவு கடலில் மூழ்கிய மீனவப் படகிலிருந்த மீனவர்களுடைய சடலமே அவை என கடற்படையினரால் நம்பப்படுகிறது.
நேற்றுமுன்தினம் (ஜன. 18) பின்னிரவில் நெடுந்தீவிலிருந்து சுமார் 8 கடல் மைல் தொலைவில் இந்த விபத்து இடம்பெற்றது.
இந்தியாவிலிருந்து இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் படகுகள் வருகைத் தந்தன. இவ்வாறு இலங்கை கடற்பரப்பிற்குள் சட்டவிரோதமான முறையில் வருகைத் தந்த படகுகளையும்,
மீனவர்களையும் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
இதன்போது, இலங்கை கடற்படையிடமிருந்து தப்பிக்கும் நோக்குடன், இந்திய மீனவர்கள் தமது படகுகளை செலுத்த முயற்சித்தன.
தப்பிச் செல்ல முயற்சித்த வேளையில், குறித்த இந்திய மீனவர் படகு ஒன்று கடலில் கவிழ்ந்தது.
கடற்படையின் சூழியோடிகள் குழு, கடற்படை படகுகள் மற்றும் கப்பல்கள் இணைந்து படகில் பயணித்த மீனவர்களை தேடும் நடவடிக்கைகளை முன்னெடுத்தது.
இந்த நிலையில் இந்திய மீனவர்கள் இருவரது சடலங்கள் காங்கேசன்துறை கடற்பரப்பில் மீட்கப்பட்டுள்ளன என்று காவல்துறையினா் தெரிவித்தனர். #காங்கேசன்துறை #இந்திய_மீனவர்கள் #சடலங்கள் #விபத்து