ஒரு சமூகத்தினுடைய ஓர் ஆற்றுகைக் கலை வடிவமாகக் காணப்படும் புலிக்கூத்தில் பிரதேசங்களுக்கு பிரதேசம் வேறுபாடுகள் காணப்பட்டாலும் அவை பொதுவாக ஒரு சமூகத்தினுடைய பாரம்பரியத்தையும் பண்பாட்டையும் சுட்டிக்காட்டும் கலைப்படைப்பாக விளங்குகின்றது.
ஆதிக் குடிகளாகக் காணப்படும் வேடுவர் சமூகமானது கவனத்தில் கொள்ளப்படாத சமூகங்களாகவே காணப்படுகின்றது. அத்தோடு இனம், மொழி, வர்க்கம் ரீதியான குறிப்புகளால் வகைப்படுத்தப்பட்டு தற்காலத்தில் பெரும் நெருக்கடியில் வாழ்ந்து வருகின்றனர்.
இலங்கையில் தமிழ், சிங்கள, ஆங்கில மொழிகளின் ஆதிக்கமும் சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் போன்ற இனங்களின் ஆதிக்கமும் பௌத்தம், இந்து, இஸ்லாம், கிறிஸ்தவர் போன்ற மதத்வர்களின் ஆதிக்கமும் காணப்படுகின்றது. இவர்கள் அனைவரும் இணைந்து தங்களுக்கு கீழ் உள்ள இனத்தினை அடக்கி ஆள எண்ணுகின்றனர். இதன்போது ஒரு சமூகம் அழிக்கப்பட வேண்டுமானால் மொழியை மாற்றினால் போதும் என்ற எண்ணப்பாடுகள் இந்த மேல் வர்க்கத்தினரிடம் காணப்படுகின்றது. இதனால் இவர்களுடைய இயல்பு வாழ்க்கை சிதைக்கப்படுவதுடன் உரிமையும் மீறப்படுகின்றது.
அடக்குமுறையில் பாதிக்கப்பட்ட, பாதிக்கப்படுகின்ற சமூகமாக வேடுவர் சமூகத்தினைக் கொள்ளலாம். வேடுவர் சமூகத்தினர் தாம் வேட்டையாடும் உணவுகளைக் கொண்டு இறைவனுக்கு பிரசாதமாகப் படைத்து தமது இறைவழிபாட்டினைச் செய்த நேரங்களில் வேட்டையாடும் முறைகளை தமது இளம் சமூகத்தினருக்கு கற்றுக் கொடுத்தனர். இச்சந்தர்ப்பத்தில் தங்களது கலை வடிவமான புலிக்கூத்தினை நிகழ்த்தினர். காட்டிற்கு வேட்டையாடச் செல்லும் போது வேடுவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளில் ஒன்று புலிகளினால் அவர்கள் தாக்கப்படுவதாகும்.
இது அவர்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை அடிப்படையாகக் கொண்டு புலியிடமிருந்து எவ்வாறு தம்மைப் பாதுகாப்பது, புலியை எவ்வாறு வசப்படுத்துவது போன்ற பல உத்தி முறைகளையும் கற்றுக் கொடுக்கும் கலையாக புலிக்கூத்து ஆற்றுகையை அவர்கள் மேற்கொண்டனர்.
இதனடிப்படையில் வந்தாறுமூலை புலிக்கூத்து ஆற்றுகைத் தன்மையினை எடுத்துக்கொண்டால் அச்சமூகத்திற்குப் பொருத்தமான வகையில் அவர்களது ஆற்றுகை அழகியல் காணப்படுகின்றது. இந்தப் புலிக்கூத்து வேடுவத்தலைவன் (பெரியவன்), வேடுவன் (சின்னவன்), வேடுவத் தலைவனின் மனைவிஇ புலி வளர்ப்பவன்இ புலி போன்ற பாத்திரங்களைக் கொண்டதாகக் காணப்படுகின்றது.
ஆற்றுகையின் போது வேடுவர்களின் வரவே முதலில் இடம்பெறும். மட்டக்களப்புப் பாரம்பரியக் கூத்தான வடமோடிக் கூத்தில் உள்ள தாளக்கட்டுக்கள் மற்றும் ஆட்ட முறைகளைக் கொண்டதாக இவர்களுடைய வரவு இடம்பெறும்.
‘திந்தின தினிதினனோ தினனானாதின னாதினனோ
திந்தின தினிதினனோ தினனானாதின னாதினனோ’
தாளத்துக்கு ஏற்ப வரவு முடிவடைந்ததும் சுற்றிவர ஆடுவதற்கு
‘வேடர் நாங்களே வனந்தன்னில் வாழும் நாங்களே
வேட்டையாடுவோம் – வனந்தன்னில்
வேட்டையாடுவோம் வனந்தன்னில் வேட்டையாடுவோம்
வேட்டையாடுவோம் வனந்தன்னில் வேட்டையாடுவோம்’ என்ற பாடல் பாடப்படும்.
பின்னர் புலி மற்றும் புலி வளர்ப்பவனுடைய வரவு இடம்பெறும்.
‘தானா தனதத்த தானா தன னாதந்த னாதந்த னானா தன
தானா தனதத்த தானா தன னாதந்த னாதந்த னானா’
பாட்டு
‘தனதத்தம் புலிக்கூத்து தனதத்தம் புலிக்கூத்து
நந்தவனத்தில் ஓர் ஆண்டி அவன் – நாலாறு
மாசமாய் குயவனை வேண்டி
இஞ்சுக்கு ஏலம் கொண்டாட்டம் – அந்த
எலுமிச்சம் பழத்திற்கு புளிப்புக் கொண்டாட்டம்
கஞ்சுக்கு களனி கொண்டாட்டம் – நல்ல
கடைகட்ட மூளிக்கு கோபம் கொண்டாட்டம்
கஞ்சிகளால் ஒரு கோட்டை – அந்த
ஆனந்தக் கோட்டைக்கு அறுபது வாசல்
தானா தனதத்த தானா தன னாதந்த னாதந்த னானா தன
தானா தனதத்த தானா தன னாதந்த னாதந்த னானா’
எனப் பாடி புலியின் வரவானது வடமோடிக் கூத்தின்; சாயலைக் கொண்ட தாளக்கட்டு அமைப்பையும் துள்ளல் ஆட்டத்தினையும் உடையதாக இடம்பெறும். அதன்போது வேடுவர்கள் காட்டிற்குள் சென்று தேன் எடுப்பது போன்று பாவனை செய்துகொண்டு வருவர்கள். உணவினைத் தேடிக்கொண்டு காட்டிற்குள் செல்லும் புலியும் புலிவளர்ப்பவனும் எல்லா இடமும் அழைந்து திரிந்து பின்னர் வேடுவர்கள் தேனெடுக்கும் பகுதியினை வந்தடைவர்.
வேடுவர்கள் இச்சந்தர்ப்பத்தில் தமது காடு பற்றிய உரையாடல்களையும் தேன் எடுக்கும் முறைகள் பற்றிய உரையாடல்களையும் பேசிக் கொண்டு செல்லுவர். இவர்கள் செல்லும் வழியில் புலி வளர்ப்பவன் புலியை விட்டுவிட்டு தூங்கிவிடுகின்றான். அதன்போது புலி வேடுவனின் மனைவியின் காலைக் கடித்து விடுகின்றது. வேடுவர்கள் இருவரும் புலி சென்ற தடத்தில் சென்று புலியைக் கொன்று விடுகின்றார்கள். அப்போது புலி வளர்ப்பவன் வந்து ‘இது நான் வளர்த்த புலி எனது புலியினால் எந்த ஆபத்தும் வராதுஇ நான் இந்தப் புலியை வைத்துக்கொண்டு அதன் மூலமே உழைத்து வாழ்கின்றேன். எனது வாழ்க்கைச் செலவினை இதனால்தான் நடாத்திவருகின்றேன்’.
அதனால் எனது புலியியை உயிர்ப்பித்துத் தாருங்கள் என வேடுவர்களிடம் கேட்கின்றான். இவனின் வேண்டுதலுக்கு அமைவாக வேடுவர்கள் தெய்வம் வரப்பெற்று குறிபார்த்து தெய்வத்திடம் வாக்குக்கேட்டு புலியை உயிர்ப்பித்துக் கொடுப்பதாக இந்த புலிக்கூத்து ஆற்றுகையானது அமைகின்றது.
இவ் ஆற்றுகையானது மானிடர்கள் மிருகங்கள் மீது கொண்டுள்ள அளவில்லா பாசத்தினையும் அன்பினையும் புலி வளர்ப்பவன் மீது ஏற்படுத்தி புலி இறந்த பின்னர் அவன் படும் வேதனைகளைக் காட்டி அதற்கூடாக அவனது ஆதங்கத்தினையும் வெளிப்படுத்திக் காட்டுகின்றது.
‘எனது புலி யாருக்கும் எந்தத் தீங்கும் விளைவிக்காது. இனி நான் யாரிடம் கையேந்தி நிற்பேன்’ என்ற அவனது புலம்பல் இதற்கான எடுத்துக்காட்டாக அமைகின்றது.
இவ் ஆற்றுகையில் வேடுவர்கள் தேன் எடுக்கும் முறையையும் தேன் இருக்கும் இடத்தினை இனங்காணும் விதத்தினையும் வேடுவத் தலைவன் சின்னவனுக்கு சொல்லிக் கொடுப்பதாகக் காட்ப்பட்டுள்ளது. இச் செயற்பாடு வேடுவர்கள் தங்களது எதிர்காலத் தலைமுறையினர் வாழ்வதற்கான வழிகாட்டலை அவர்களுக்குச் சொல்லிக்கொடுப்பதாக அமைந்துள்ளது. இதன் மூலம் அவர்கள் தொழில் புரியும் விதத்தினைத் தெளிவாக விளக்குகின்றனர். அத்தோடு அவர்களது கடவுள் நம்பிக்கையும் இங்கு வெளிப்படுத்தப்பட்டுள்ளது. தங்களது சடங்கின் ஊடாக இறந்த புலியை உயிர்ப்பித்துக் காட்டுகின்றனர்.
அத்துடன் குறிசொல்லுதல்இ கட்டுச்சொல்லுதல் என்ற முறைகளினூடாக தமக்கான பாரம்பரியங்கள் இருப்பதனை உணர்த்துகின்றனர். வேடுவத் தலைவன் தெய்வம் வரப்பெற்று ஆடுவதும் வழிபாடு நிறைவேறிய பின்னர் புலி உயிர்த்தெழுவதும் இதற்கான எடுத்துக்காட்டுக்களாக அமைகின்றன. இதன்போது அவர்களது தொழில்இ சமயம்இ சடங்கு முறைகள்இ சம்பிரதாயம்இ மிருகங்கள் மீதான அன்பு என பல உணர்வு ரீதியான விடயங்களினை வெளிப்படுத்தும் வகையில் இந்த ஆற்றுகை அமைகின்றது.
ஆதிக்குடிகளின் தொன்மங்கள்இ அடையாளங்களைச் சிதறடிக்கச் செய்யும் செயற்பாடுகள் இருந்த போதும் உரையாடல்களும் சமூகப்பண்பாட்டு அரசியல் சார்ந்த எழுத்துருக்களும் அவர்களுடைய கலை வெளிப்பாடுகளைக் கேள்விற்குட்படுத்தி சமூகங்கள் மத்தியில் பரவலடையச்செய்யும் நோக்கோடும் பல்கலைக்கழகம் மற்றும் கலைக்குழு நிறுவனங்களும் அவர்களுடன் இணைந்து அச் சமூகம் பற்றிய புரிதலை அறிவு சார்ந்தும்இ சமூகப் பண்பாடு சார்ந்தும் அதனை கற்றுக்கொள்ளும் நோக்கோடும் அந்தச் சமுதாயதுடன் இணைந்து ஆற்றுகையில் ஈடுபடுகின்றனர்.
இதனடிப்படையில் இவ்வாறான ஆற்றுகைசார் செயற்பாடுகளை முன்னெடுக்கும் நிறுவனங்களில் கிழக்குப்பல்கலைக்கழக நுண்கலைத்துறையும்இ சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகம்இ மூன்றாம் கண் அரங்க செயற்பாட்டுக்குழுவும் குறிப்பிடத்தக்கது. இவர்களுடைய அரங்கச் செயற்பாடானது அச் சமூகத்தினுடைய கலை வடிவங்களை தனியாகப் பிரித்தெடுத்து ஆற்றுகை செய்வதல்ல. அம் மக்களின் தொன்மங்கள் மாறாது அம்மக்களை மையப்படுத்திக் காட்டும் வகையில் அனைத்து இடங்களிலும் அந்தச் சமூக மக்களைக் கொண்டு அவர்களது ஆற்றுகையை முன்னெடுப்பதாகும். இதில் ஈடுபடும் மாணவர்கள் சுய கற்கை மூலமாக தெளிவினைப் பெற்று அச் சமூகம் பற்றிய விளக்கத்தினை ஆக்கப்பூர்வமாகப் பயின்று அவர்களோடு சகமனிதர்களாகக் கைகோர்து தோளோடு தோள்நின்று பயணிக்கும் சந்தர்ப்பத்தினை ஏற்படுத்தும் செயற்பாடாகவே அமைகின்றது.
சமூக மட்டத்தில் காணப்படும் ஆற்றுகை வடிவத்தினை அதன் அடிப்படை அம்சங்கள் அழகியல் தன்மை என்பன மாறாது அந்த சமூகத்திற்கே சென்று பயின்று அதில் பங்குபற்றி அவர்கள் மத்தியில் ஆற்றுகையாக மேற்கொண்டு அவ் ஆற்றுகையை பரவல் அடையச் செய்வதே உயர்கல்வி நிறுவனங்களின் அடிப்படை நோக்கமாகும். கலையாக்க செயற்பாடுகளில் ஆதிக்குடிகளின் தனித்துவமான கலைகளை அழிக்கும் வகையில் செயற்படாது ஏனைய சமூகங்களில் இருந்து அவற்றைப் பாதுகாக்கும் வகையில் பல்கலைக்கழகங்கள் தொழிற்பட வேண்டும். இவ்வாறு உயர்கல்வி நிறுவனங்கள் செயற்படும்போதும் பதிப்பிற்கும் போதும் பாரம்பரியத்தைக் கவனத்தில் கொள்வதும் அவர்களைக் கொண்டு அதனை பரிசீலனை செய்வதும் சிறந்த பதிப்பாக அமையக்கூடும். #புலிக்கூத்து #ஆற்றுகை #ஆதிக்குடி #வேடுவர்வினாயகமூர்த்தி_கிருபானந்தம்
வினாயகமூர்த்தி கிருபானந்தம்