குருந்தூர் மலை பகுதிக்கு இன்றைய தினம் அகழ்வாராய்ச்சியில் ஈடுபடுகின்ற அதிகாரிகள் சென்றுள்ளதோடு, பணிக்கு தேவையான உபகரணங்கள் பலவும் கொண்டு செல்லப்பட்டு அங்கு இறக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கமைய, நாளைய தினம் (28.01.21) முதல் தொடர்ச்சியாக இந்த அகழ்வாராய்ச்சி பணிகளை செய்யப் போவதாக, குறித்த தொல்பொருள் திணைக்களத்தின் அகழ்வாராய்ச்சிக்கு பொறுப்பாக சென்றிருக்கும் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்
இதேவேளை, இன்றைய தினம் அவர்கள் கொண்டு சென்ற அகழ்வாராய்ச்சிகான பொருள்களில் கட்டிடங்கள் கட்டுவதற்கும், தூண்கள் போடுவதற்கும் பயன்படுத்துகின்ற தூண் பெட்டிகளும் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குருந்தூர் மலை ஆகிரமிப்பு: ரவிகரன் காவற்துறையில் முறைப்பாடு!
முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு, குருந்தூர் மலையில் இருந்த தமிழர்களுடைய வழிபாட்டு அடையாளங்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளன என, வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன், அப்பகுதி கிராம மக்களின் சார்பாக முல்லைத்தீவு காவல் நிலையத்தில், இன்று (27.01.21) முறைப்பாடு செய்துள்ளார்.
இதேவேளை, காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களின் வழிபாட்டு அடையாளங்கள் மீண்டும் அவ்விடத்தில் நிறுவவேண்டும் எனவும் தொடர்ந்தும் தமிழ் மக்கள் குருந்தூர் மலைக்குச் சென்று தமது வழிபாடுகளை மேற்கொள்ள அனுமதிக்கவேண்டும் எனவும், ரவிகரன் குறித்த முறைப்பாட்டினூடாக கோரியுள்ளார்.