பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான 3 நாள் தொடர் போராட்ட பேரணி இன்று (03) காலை காவல்துறையினாின் தடைகளை தாண்டி அம்பாறை – பொத்துவிலில் இருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
வட, கிழக்கில் இடம்பெறும் பௌத்த மயமாக்கல், தமிழர்களுக்கு எதிரான அடக்குமுறைகளை கண்டித்து பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான 3 நாள் தொடர் போராட்டம் மேற்கொள்ளப்படுகின்றது.
பொத்துவில் நகரில் போராட்டம் ஆரம்பமானபோது விசேட அதிரடிப்படையினரும் காவல்துறையினரும் இணைந்து போராட்டத்தினைத் தடுக்க முற்பட்டதுடன் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் ஏந்தியிருந்த பதாதைகளை அகற்ற முனைந்தனா்.
அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் மீது காவல்துறையினா் தாக்குதல் நடத்த முற்பட்டதை தொடர்ந்து முறுகல் நிலையேற்பட்டது.
எனினும் பாதுகாப்பு தரப்பினரின் எதிர்ப்பினையும் மீறி போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தொிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு, கிழக்கு சிவில் அமைப்புக்கள், பொது அமைப்புக்கள், தமிழ் தேசிய கட்சிகளின் ஒன்றிணைந்த ஏற்பாட்டில் ஆரம்பிக்கப்பட்ட இந்தத் தொடர் போராட்டத்தில் சிவில் அமைப்புகள், அரசியல் கட்சிகள், சர்வமதப் பிரதிநிதிகள், பொது அமைப்புகள் என பலரும் கலந்து கொண்டுள்ளனா்.
வடக்கு, கிழக்கில் நடைபெறும் பௌத்த மயமாக்கல், தமிழர்களின் நிலங்கள் அபகரிப்பு, அரசியல் கைதிகளை விடுதலை செய்தல், காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம், மலையக மக்களின் ஆயிரம் ரூபாய் சம்பளம், முஸ்லிம்களின் உடல்கள் தகனம் அடங்கலாக அரச அடக்குமுறைகள் போன்ற விடயங்களை முன்னிறுத்தி, அவற்றை கண்டித்தும், நீதி கோரியும், தீர்வு கோட்டும் இந்த போராட்டம் மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது
இதேவேளை குறித்த போராட்டத்தில் கலந்துகொள்வதற்குத் நீதிமன்றத்தின் ஊடாக தடைகள் வழங்கப்பட்டிருந்த போதிலும் அதனையும் மீறி போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது #தடைகள் #பொத்துவில் #பொலிகண்டி #போராட்டபேரணி #பௌத்தமயமாக்கல்