யாழ்ப்பாண பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நடாத்துவது தொடர்பில் சர்ச்சைகள் வெடித்துள்ளன. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் 35ஆவது பட்டமளிப்பு விழா எதிர்வரும் 24ஆம் மற்றும் 25ஆம் திகதிகளில் ஆறு அமர்வுகளாக நடைபெறவுள்ளது. அதில் 2ஆயிரத்து 608 மாணவர்கள் பட்டங்களை பெறவுள்ளனர்.
இந்நிலையில் பட்டமளிப்பு விழா நடத்தப்பட்டால் யாழில் புதிய கொரோனா கொத்தணி ஏற்படும் அபாயம் உள்ளதாக சர்ச்சைகள் கிளம்பியுள்ளன.
நாட்டில் உருமாற்றம் பெற்ற கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் பாடசாலை நிகழ்வுகள் உட்பட விழாக்கள் நிகழ்வுகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. நாட்டை முடக்குமாறு கூட கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றன.
அவ்வாறான நிலையில் யாழ்ப்பாண பல்கலை கழகத்தில் 2ஆயிரத்து 608 மாணவர்களுக்கு பட்டம் வழங்கும் நிகழ்வில் அவர்களை ஓர் இடத்தில் கூட்டுவது மிகவும் ஆபத்துக்களை ஏற்படுத்தும்.
இந்நிகழ்வில் மாணவர்கள் மட்டுமின்றி மாணவர்களின் பெற்றோர் உறவினர்கள் என பலரும் அன்றைய தினங்களில் வருகை தருவார்கள்.
நாட்டின் பல பாகங்களிலும் இருந்தும் பட்டமளிப்பு விழாவிற்கு பலர் வருகை தந்து ஓர் இடத்தில் கூடுவது மாத்திரமின்றி அவர்கள் யாழில் பல இடங்களிலும் தங்கி செல்வார்கள். அதனால் யாழ்.மாவட்டத்தில் புதிய கொரோனா கொத்தணி உருவாகும் அபாயம் உண்டு
இதேவேளை யாழ்.பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் வெளி மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் தமது கற்றல் செயற்பாடுகளுக்காக திரும்பிய வேளை அவர்களை தனிமைப்படுத்தி மேற்கொண்ட பி.சி.ஆர் பரிசோதனைகளின் போது மாணவர்கள் சிலர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருந்த சந்தர்ப்பங்களும் உண்டு.
இவ்வாறான நிலையில் பட்டமளிப்பு விழாவை பல்கலைக்கழக நிர்வாகம் பிற்போட வேண்டும் என கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவ கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவிக்கையில் , இது தொடர்பில் சுகாதார அமைச்சின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளதாகவும் , அது தொடர்பில் விரைவில் சுகாதார அமைச்சு தனது நிலைப்பாட்டை தெரியப்படுத்தும் என தெரிவித்தார்.
அதேவேளை இது தொடர்பில் யாழ்.மாவட்ட செயலர் க.மகேசன் தெரிவிக்கையில் , கொரோனா அச்சறுத்தல் காரணமாக விழாக்களுக்கு 150 பேருக்கே அனுமதி வழங்கியுள்ளோம். அதற்கு மேல் கூடுவது பிழையானது. கொரோனா தடுப்பு சுகாதார முறைப்படியே எந்த நிகழ்வையும் நடாத்த முடியும். பட்டமளிப்பு விழா தொடர்பில் யாழ்.பல்கலைக்கழக நிர்வாகமும் குழு ஒன்றை அமைத்து இது தொடர்பில் ஆராய்கின்றனர் என அறிகிறேன். அடுத்துவரும் நாட்களில் உரிய தரப்பினர்களுடன் கலந்துரையாடி பட்டமளிப்பு விழா தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும் என தெரிவித்தார்.
இதேவேளை நாம் சுகாதார நடைமுறைகளை பின் பற்றி , திட்டமிட்டவாறு பட்டமளிப்பு விழாவை நடத்துவோம் என யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் சிறிசற்குணராஜா கூறியுள்ளார். #யாழ்_பல்கலை #பட்டமளிப்புவிழா #பிற்போட #கோரிக்கை #கொரோனா #கேதீஸ்வரன் #துணைவேந்தர்