மர்மங்கள் நிறைந்த சிவப்புக் கிரகமாகிய செவ்வாயில் தரையிறங்கிய நாஸாவின் மினி ஹெலிக்கொப்ரர் ட்ரோன் அங்கு வீசும் காற்றின் ஓசையைத் துல்லிய மாகப் பதிவு செய்து(First Audio Recording) பூமிக்கு அனுப்பி உள்ளது.
‘Perseverance robot’ என்கின்ற தானியங்கி ஊர்தியுடன் இணைக்கப்பட்ட அந்தச் சிறிய ஹெலியில் பொருத்தப்பட்ட நுண் கமெராக்கள் உலகம் இதுவரை கண்டி ராத செவ்வாயின் தரைத் தோற்றப்படங் களையும் பூமிக்கு அனுப்பி வைத்துள்ளன.
கடந்த வியாழனன்று (பெப்ரவரி 18) விண்கலம் செவ்வாயில் தரையிறங்கிய போது பதிவு செய்யப்பட்ட புதிய வீடியோ, ஓடியோ பதிவுகளை நாஸா விஞ்ஞானி கள் குழு நேற்று வெளியிட்டிருக்கிறது.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அந்த தரையிறக்கத்தின் போது எழுந்த இரைச்சலையும் செவ்வாயில் சாதாரண மாகக் கேட்கும் காற்றின் ஓசையையும் நாஸா தனித்தனியே ஓடியோப் பதிவுகளாக வெளியிட்டிருக்கிறது.
அங்கு வீசும் காற்றொலியை பூமியில் மனிதர்கள் செவிமடுப்பது இதுவே முதல் முறையாகும். பல ஆண்டுகளாக உலகம் கண்ட கனவின் நிஜங்கள் இவை என்று நாஸா விஞ்ஞானி Allen Chen தெரிவித்திருக் கிறார்.
செவ்வாயில் தரையிறங்கிய நாஸா விண்கலத்துடன் புத்திக் கூர்மை மிகுந்த சிறிய ஹெலி (Ingenuity helicopter) ஒன்றும் இணைந்துள்ளமை தெரிந்ததே. மிக நவீன தொழில் நுட்பம் ஊட்டப்பட்ட அந்த சிறிய வான் ஊர்தியே மனிதர்கள் வேற்றுக்கிரகம் ஒன்றுக்கு வெற்றி கரமாக அனுப்பிய முதலாவது விமானம் என்ற பெருமையைப் பெறுகிறது.
ரோவர் விண்கலத்தின் பிந்திய நிலைவரத்தையும் அதன் மின் சக்தி சேமிப்பு தொடர்பான விவரங்களையும் மினி ஹெலிக்கொப்ரர் அமெரிக்காவில் உள்ள நாஸா தரைக்கட்டுப்பாட்டு நிலையத்தை தொடர்பு கொண்டு அறிவித்துள்ளது. வரலாற்றில் இரண்டு கோள்களுக்கு இடையிலான முதலாவது தொலைபேசிப் பரிவர்த்தனை இது என்று நாஸா விஞ்ஞானிகள் அதனைப் பெருமையுடன் குறிப்பிட்டிருக்கின்றனர். #செவ்வாயில் #காற்றின்ஒலி #பூமி #நாஸா #வீடியோகாட்சி
———————————————————————-
குமாரதாஸன். பாரிஸ்.23-02-2021