உலகம் பிரதான செய்திகள்

பிரித்தானியாவில் 4 கட்டத் தளர்வு -சர்வதேச பயணங்களுக்கு மே வரை தொடர்ந்து தடை!

பிரித்தானியாவில் கடந்த சுமார் ஒன்றரை மாத கால பொது முடக்கக் கட்டுப்பாடுகளை மிக மெதுவாக – படிப்படியாக-நான்கு கட்டங்களில் தளர்த்துகின்ற அறிவிப்பை அந்நாட்டின் பிரதமர் பொறிஸ் ஜோன்சன் நேற்று வெளியிட்டிருக்கிறார்.

தற்போது அமுலில் இருக்கின்ற பொது முடக்க கட்டுப்பாடுகள் (lockdown) மார்ச் 8,மார்ச் 29, ஏப்ரல் 12, மே17, ஜூன் 21 ஆகிய திகதிகளை உள்ளடக்கிய நான்கு கட்டங்களில் படிப்படியாக – மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் – முடிவுக்குக் கொண்டுவரப்படும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.

அதன்படி பாடசாலைகள் அனைத்தும் எதிர்வரும் எட்டாம் திகதி திறக்கப்படு கின்றன. பிரித்தானிய மக்கள் உடனடியாக வெளிநாடுகளுக்கான உல்லாசப் பயணங்களை மேற்கொள்ள முடியாது. அதற்காக அவர்கள் மே மாதம் நடுப்பகுதி வரை காத்திருக்க வேண்டும்.

உணவகங்கள், அருந்தகங்கள் (Pubs and restaurants) என்பனவும் மே17 ஆம் திகதிக்கு பிறகே முழுமையாகத் திறக்க அனுமதிக்கப்படும். டவுணிங் வீதி அலுவலகத்தில் நேற்றிரவு நடத்தப்பட்ட செய்தியாளர் மாநாட்டில் பிரதமருடன் இங்கிலாந்தின் தலைமை மருத்துவ அதிகாரி பேராசிரியர் Chris Whitty, அரசுக்கான பிரதம அறிவியல் ஆலோசகர் Patrick Vallance ஆகியோரும் பங்குபற்றினர்.

“கட்டுப்பாடுகளை முடிவுக்குக் கொண்டுவருகின்ற நடவடிக்கை களுக்குச் சமாந்தரமாகத் தடுப்பூசி ஏற்றும் திட்டமும் ஒன்றாக முன்னெடுக்ககப்படவுள்ளதால் நாங்கள் சுதந்திரத் துக்கான ஒரு வழிப்பாதையில் முன்னோக்கிப் பயணிக்க இருக்கிறோம்” என்று பொறிஸ் ஜோன்சன் தெரிவித்தார்.

பிரதமர் அறிவித்துள்ள நான்கு கட்டத் தடை தளர்வுகளில் முதலாவது கட்டமாக மார்ச் 8ஆம் திகதி முதல் பாடசாலைகள் திறக்கப்படுவதுடன் வீடுகளுக்கு வெளியே இருவர் உரையாடிக் கொள்வதற்கு அனுமதிக்கப்படுகிறது.

*மார்ச் 29 ஆம் திகதி தொடக்கம் பொது இடங்களில் ஆறு பேர் சந்தித்துக் கொள்வதற்கு அல்லது இரண்டு வீடுகளைச் சேர்ந்தோர் ஒன்றாகச் சந்திப்பது அனுமதிக்கப்படும். “வீடுகளில் தங்கியிருங்கள்” (“Stay at Home”) என்ற உத்தரவும் அந்தக் கட்டத்தில் நீக்கப்படும்.

*வெளிப்புற விளையாட்டுகள், குறிப்பாக உதைபந்தாட்டம், ரென்னிஸ் போன்றவை மார்ச் 29 முதல் அனுமதிக்கப்படவுள்ளன. *ஏப்ரல் 12 ஆம் திகதி தொடங்கவுள்ள இரண்டாவது கட்டத் தளர்வுகளில் அத்தியாவசியமற்ற வர்த்தக நிலையங்கள், சிகை அலங்கரிப்பு நிலையங்கள், உடற்கட்டுப் பயிற்சி மையங்கள்(gyms)என்பன திறக்கப்படும்.

வெளிப்புறப் பொழுது போக்கு மையங்களான உயிரியல் பூங்காக்கள் (zoos) கருத்தியல் பூங்காக்கள்(theme parks) என்பனவும் அன்று முதல் படிப்படியாகத் திறக்கப்படும்.*மூன்றாவது கட்டத் தளர்வுகள் மே 17 ஆம் திகதி ஆரம்பமாகும். பொதுமக்களுக்கு இடையிலான சந்திப்புகள், ஒன்று கூடல்கள் தொடர்பான கட்டுப்பாடுகள் அச்சமயம் தளர்த்தப்படும்.*ஜூன் 21 ஆம் திகதி தொடங்கவுள்ள நான்காவது இறுதிக் கட்டத்தில் மக்கள் நடமாட்டத்துக்கு சட்ட ரீதியாக எந்தத் தடையும் இருக்க மாட்டாது என்று நம்புவதாக பிரதமர் பொறிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.

அதன் பிறகே திருமணம் போன்ற கொண்டாட்டங்கள், இரவுக் களியாட்டங்கள் வழமையைப் போன்று நடத்தப்படலாம். வெளிநாடுகளுக்கான உல்லாசப் பயணங்கள் பெரும்பாலும் மே 17 ஆம் திகதிக்குப் பின்னரே அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

அதுவரை அத்தியாவசிய வெளிநாட்டுப் பயணங்களை மட்டுமே மேற்கொள்ள முடியும். பிரித்தானியாவில் கொரோனா வைரஸின் திரிபு காரணமாக நாடு பெரும் தொற்று நெருக்கடியைச் சந்திக்க நேர்ந்ததால் அங்கு கடந்த ஜனவரி 5முதல் மூன்றாவது பொது முடக்கம் மிகக் கடுமையான முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டுவருவது தெரிந்ததே. #பிரித்தானியா #தளர்வு #பொறிஸ்ஜோன்சன் #முடக்க_கட்டுப்பாடுகள்

——————————————————————

குமாரதாஸன். பாரிஸ்

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link