இந்தியாவின் கிழக்கு மாநிலமான ஒடிஷாவில் 1999ஆம் ஆண்டு நிகழ்ந்த ஒரு மோசமான கும்பல் பாலியல் வல்லுறவு சம்பவத்தில் தேடப்பட்டு வந்த ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
அவர் குற்றம் சாட்டப்பட்டவர், தனது சொந்த ஊரிலிருந்து 1,700 கிலோ மீட்டர் தொலைவில், இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக தலைமறைவாக வாழ்ந்து வந்தார்.
கடந்த வாரம் மேற்கு மாநிலமான மகாராஷ்டிராவில் புனே மாவட்டத்தில் உள்ள பிபேகானந்தா பிஸ்வாலின் வீட்டை போலீசார் அடைந்தபோது, அவர் தப்பித்து ஓட முயன்றதாக அவர்கள் கூறுகிறார்கள்.
“போலீஸ் குழு வருவதைக் கண்ட அவர் தப்பிக்க முயன்றார். அவர் பிடிபட்டபோது, ‘என்னை இங்கிருந்து அழைத்துச் செல்லுங்கள், எல்லாவற்றையும் நான் உங்களுக்குச் சொல்கிறேன்’ என்று கூறினார்,” என ஒடிஷா காவல்துறையின் மூத்த அதிகாரி சுதான்ஷு சாரங்கி பிபிசியிடம் தெரிவித்தார்.
1999 ஜனவரி 9ஆம் தேதி இரவு 29 வயதான ஒரு பெண்ணை கொடூரமாக பாலியல் வல்லுறவு செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேரில் பிபேகானந்தா பிஸ்வாலும் ஒருவர். ஆனால் தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை அவர் மறுக்கிறார்.
பிரதீப் குமார் சாஹு மற்றும் திரேந்திர மொஹந்தி ஆகிய இருவர் கைது செய்யப்பட்டு, விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். குற்றம் நிரூபிக்கப்பட்டு அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. சாஹு கடந்த ஆண்டு சிறையில் இறந்தார்.
22 ஆண்டுகளுக்கு முன் என்ன நடந்தது?
அந்தப் பெண் மாநில தலைநகரான புபனேஸ்வரில் இருந்து அதன் இரட்டை நகரமான கட்டாக்கிற்கு ஒரு பத்திரிகையாளர் நண்பர் மற்றும் ஓட்டுநருடன் காரில் சென்று கொண்டிருந்தபோது, ஸ்கூட்டரில் பயணித்த மூன்று ஆண்களால் வழிமறிக்கப்பட்டார்.
துப்பாக்கி முனையில் ஒரு ஒதுக்குப்புறமான பகுதிக்கு ஓட்டுமாறு அந்த நபர்கள் ஓட்டுநரை கட்டாயப்படுத்தினர். அங்கு அந்தப்பெண் நான்கு மணி நேரத்திற்கும் மேல் பல முறை பாலியல் தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்டார் என்று நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
அந்தப் பெண்ணும் அவரது நண்பரும் அச்சுறுத்தப்பட்டு அடித்து நொறுக்கப்பட்டனர். அவர்களின் பணம் மற்றும் மதிப்புமிக்க பொருட்கள் பறிக்கப்பட்டன.
இந்த குற்றம் தலைப்புச் செய்தியாக அமைய தாக்குதலின் மிருகத்தனம் மட்டுமே காரணமாக இருக்கவில்லை. அப்போதைய ஒடிஷா முதல்வர் ஜே.பி.பட்நாயக் உட்பட சில முக்கியமான நபர்கள் மீது தாக்குதலுக்கு உள்ளான பெண் கடுமையான குற்றச்சாட்டுகளை சுமத்திய நிலையில் இது மாநிலத்தை உலுக்கியது.
இந்த சம்பவம் நடந்ததற்கு 18 மாதங்களுக்கு முன்னர் பாலியல் வல்லுறவு செய்ய முயன்றதாக தாம் புகார் அளித்த ஓர் அதிகாரியை அவர் பாதுகாக்க முயன்றதாக அந்தப்பெண் குற்றம் சாட்டினார். “அதிகாரிக்கு எதிரான எனது குற்றச்சாட்டுகளை திரும்பப் பெறச்செய்யும் பொருட்டு என்னை பயமுறுத்துவதற்காக நடத்தப்பட்ட கும்பல் பாலியல் வன்முறையில் அவர்கள் இருவருக்கும் பங்கு இருப்பதாக,” அவர் குற்றம் சாட்டினார்.
இந்த குற்றச்சாட்டுகள் ” அரசியல் சதித்திட்டத்தின்” ஒரு பகுதி” என்று பட்நாயக் தெரிவித்தார். ஒரு மாதம் கழித்து முதலமைச்சர் பதவி விலகியபோது, இந்த வழக்கு தவறாக கையாளப்பட்டது இதற்கான ஒரு முக்கிய காரணம் என்று செய்தித்தாள்கள் கூறின. ஓர் ஆண்டுக்குப் பிறகு அந்த அதிகாரி பாலியல் வன்முறை முயற்சியில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு மூன்று ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார்.
கும்பல் பாலியல் தாக்குதல் வழக்கை விசாரிக்க இந்தியாவின் மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) அழைக்கப்பட்டது.
ஆனால் நீதிமன்ற உத்தரவில் “முக்கியமாக குற்றம் சாட்டப்பட்டவரும், திட்டம் தீட்டியவர் என்றும் பாதிக்கப்பட்டவரை இரக்கமின்றி பாலியல் வல்லுறவு செய்து, பாதிக்கப்பட்ட பெண்ணிடம் கொள்ளையடித்தார்” என்றும் விவரிக்கப்பட்ட பிபேகானந்தா பிஸ்வால், ஒரு தடயமும் இல்லாமல் மாயமாக மறைந்துவிட்டார்.
வழக்கின் சூடு மெல்ல தணிய ஆரம்பித்தது. கட்டாக்கில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் இந்த வழக்கின் கோப்புகள் மீது தூசிபடிய ஆரம்பித்தது.
‘ஒப்பரேஷன் சைலண்ட் வைப்பர்’
நவம்பர் மாதம், காவல் ஆணையர் சாரங்கி மற்றொரு வழக்கின்பொருட்டு சவுத்வார் சிறைக்குச் சென்றார். அங்கு அவருக்கு பாலியல் வல்லுறவு செய்ததாக தண்டனை பெற்றவர்களில் ஒருவரான மொஹந்தியுடன் “தற்செயலான சந்திப்பு” ஒன்று நிகழ்ந்தது.
“அவருடன் பேசும்போது, அவரது சக குற்றவாளிகளில் ஒருவர் இன்னும் பிடிபடவில்லை என்பதை நான் கண்டுபிடித்தேன். அடுத்த நாள், நான் எனது அலுவலகத்திற்கு திரும்பி வந்தபோது, வழக்கு குறித்த கோப்புகளை மீண்டும் என்னிடம் கொண்டுவருமாறு கூறினேன்,” என்று சுதான்ஷு சாரங்கி கூறினார்.
“வழக்கின் விவரங்களை நான் படித்தபோது, இது மிகவும் கொடூரமான குற்றம் என்பதால் அவர் கண்டிப்பாக பிடிக்கப்பட வேண்டும் என்று நான் உணர்ந்தேன்,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.
மாநில தலைநகரான புபனேஸ்வர் மற்றும் அதன் இரட்டை நகரமான கட்டாக்கின் காவல் ஆணையராக இருக்கும் சாரங்கி, வழக்கை மீண்டும் திறந்து அதற்கு ஒரு குறியீட்டுப் பெயரைக் கொடுத்தார் – அதுதான் “ஆபரேஷன் சைலண்ட் வைப்பர்”.
“ஒரு வைப்பர்(விரியன் பாம்பு) அதன் சுற்றுப்புறங்களுடன் எளிதில் கலக்க முடியும். கண்டறிவதைத் தவிர்ப்பதற்கு ஒலி எழுப்பவும் செய்யாது. ஆகவே குற்றவாளி 22 ஆண்டுகளாக பிடிபடாததால் இந்த நடவடிக்கைக்கு இது சரியான பெயர் என்று நான் நினைத்தேன்,” என்று அவர் கூறுகிறார்.
நான்கு பேர் கொண்ட போலிஸ் குழு அமைக்கப்பட்டது – “எந்தவொரு தகவல் கசிவையும் தவிர்ப்பதற்காக” இந்த வழக்கைப் பற்றி அவர்கள் மட்டுமே அறிந்திருந்தனர்.
சந்தேக நபரை அவர்கள் கண்டுபிடித்தது எப்படி?
“பிப்ரவரி 19 மாலை 5:30 மணி, நாங்கள் சந்தேகப்படும் நபர் அவர்தான் என்பதை நாங்கள் உறுதிசெய்தோம். இரவு 7 மணி தாண்டிய சிறிதுநேரத்தில் எனது மூன்று அதிகாரிகள் புனேக்கு செல்லும் விமானத்தில் இருந்தனர்,” என்று சுதான்ஷு சாரங்கி கூறுகிறார்.
“ஒடிஷா மற்றும் மகாராஷ்டிரா காவல்துறையினரின் கூட்டுக் குழு , மறுநாள் சோதனை நடத்தியது, அவர் கைது செய்யப்பட்டார்.”
மூன்று மாத தகவல் சேகரிப்பு மற்றும் துல்லியமான திட்டமிடலுக்குப் பிறகுதான் போலீஸ் குறிவைத்த ஆளை கண்டுபிடித்தது.
“நாங்கள் விசாரணை செய்யத் தொடங்கியதும், அவர் தனது குடும்பத்தினருடனும், தனது மனைவி மற்றும் இரண்டு மகன்களுடனும் தொடர்பு கொண்டிருந்தார் என்று கேள்விப்பட்டோம். குடும்பத்தினர் அவரது பெயரில் இருந்த ஒரு நிலத்தை விற்க முயன்றபோது அவர் பிடிபட்டார்” என்று சாரங்கி பிபிசியிடம் தெரிவித்தார் .
இந்த சிறிய நிலம், கட்டாக் மாவட்டத்தில் உள்ள நரன்பூர் கிராமத்தில் உள்ள அவர்களின் வீட்டிற்கு அருகில் உள்ளது . இந்தப்பகுதி வேகமாக நகரமயமாக்கப்பட்டு வருகிறது . இந்த விற்பனை மூலம் சிறிது பணம் ஈட்ட குடும்பம் முயன்றது என்று சாரங்கி மேலும் கூறினார்.
காவல்துறையினர், குடும்பத்தின் நிதிவிவரங்களை உன்னிப்பாக கவனித்தபோது ஒரு திருப்புமுனை ஏற்பட்டது.
சந்தேக நபரின் மனைவி மற்றும் மகன்களுக்கு வேலை அல்லது நிலையான வருமான ஆதாரம் இல்லை என்றாலும் கூட, புனேயில் உள்ள ஜலந்தர் ஸ்வைன் என்ற ஒருவரிடமிருந்து அவர்களின் கணக்கில் தொடர்ந்து பணம் வந்து கொண்டிருப்பதை அவர்கள் கண்டுபிடித்தனர் . கடந்த 22 ஆண்டுகளில் தனது குடும்பத்திற்கும் அவருக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று பிபேகானந்தா பிஸ்வாலின் மனைவி கீதாஞ்சலி கூறிவருகிறார்.
“அவர் பாலியல் வல்லுறவுக்குப் பிறகு தலைமறைவாகிவிட்டார், அவர் எங்களை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவில்லை அல்லது எங்கள் வீட்டிற்கு ரகசியமாக வரவும் இல்லை ,” என்று அவர் டைம்ஸ் ஆப் இந்தியாவிடம் தெரிவித்தார்.
அவரிடமிருந்து பணம் எதையும் தான் பெறவில்லை என்றும் அவர் கூறினார். ஆனால் ஜலந்தர் ஸ்வைன் யார் அல்லது அவர் ஏன் தனது குடும்பத்திற்கு பணம் அனுப்பி வந்தார் என்ற கேள்விகளுக்கு பதிலளிக்க கீதாஞ்சலி மறுத்துவிட்டார் என்று போலீசார் கூறுகின்றனர்.
பிஸ்வால் எங்கே மறைந்திருந்தார்?
“இந்தியா ஒரு பெரிய நாடு. பிஸ்வாலுக்கு ஒரு வேலை கிடைத்தது. அவருக்கு ஒரு வங்கி கணக்கு, ஒரு பான் அட்டை [வரி செலுத்த அனைத்து குடிமக்களுக்கும் கட்டாயம்] மற்றும் ஓர் ஆதார் அட்டை [இந்தியாவின் தேசிய அடையாள அட்டை ] ஆகியவை இருந்தன, “என்று சுதான்ஷு சாரங்கி கூறுகிறார்.
2007ஆம் ஆண்டு முதல் அவர் புனே மாவட்டத்தில் உள்ள ஆம்பி பள்ளத்தாக்கில் உள்ள தொழிலாளர்களின் குடியிருப்புப்குதியில் வசித்து வந்தார். ஆம்பி பள்ளத்தாக்கு இந்தியாவின் சில பெரும் பணக்காரர்கள் இருக்கும் பகுதி. இது அவரது சொந்த கிராமத்திலிருந்து 1,740 கி.மீ (சுமார் 1,080 மைல்கள்) தொலைவில் உள்ளது.
“அவர் அங்கு பிளம்பர் வேலை செய்து கொண்டிருந்தார். மேலும் ஒரு புதிய அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டார்” என்று சாரங்கி கூறுகிறார். “ஆம்பி பள்ளத்தாக்கின் 14,000 ஊழியர்களில் அவர் ஒருவராக இருந்தார். நேரடி பார்வையிலேயே சந்தேகமே இல்லாமல் மறைந்திருந்தார், ஒரு விரியன் பாம்பைப்போல,” என்று அவர் குறிப்பிட்டார்.
அவரது ஆதார் அட்டையில், சந்தேக நபரின் பெயர் ஜலந்தர் ஸ்வைன் என்றும் அவரது தந்தை பூர்ணானந்த பிஸ்வாலின் பெயர் பி ஸ்வைன் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அவரது கிராமத்தின் பெயர் சரியாக இருந்தது. ஜலந்தர் ஸ்வைன் என்ற பெயரில் எந்த கிராமவாசியும் இல்லை என்று போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. .
பிபெக்கானந்தா பிஸ்வால் பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். ஆனால் தனது உண்மையான அடையாளத்தை அவர் மறுக்கவில்லை என்றும் சுதான்ஷு சாரங்கி தெரிவித்தார்.
“அவரது குடும்ப உறுப்பினர்கள் உட்பட பல சாட்சிகளால் அவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளுக்காக அவரை இப்போது சிபிஐயிடம் ஒப்படைத்துள்ளோம்.”என்றும் அவர் குறிப்பிட்டார்.
திங்களன்று, புபனேஸ்வரில் சந்தேக நபர் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டபோது, உள்ளூர் தொலைக்காட்சி சேனல்களைச் சேர்ந்த குழுவினரின் கூட்டம் அங்கு அலைமோதியது.
போலீஸார் அவரை அழைத்துவந்த்போது நீல நிற சட்டை மற்றும் சாம்பல்நிற கால்சட்டை அணிந்து வெறுங்காலுடன் அவர் இருந்தார். அவரது முகம் கட்டம்போட்ட துணியால் மூடப்பட்டிருந்தது.
பிபேகானந்தா பிஸ்வாலின் தோற்றத்தைப் பற்றிய ஒரே விளக்கம் சாரங்கியிடமிருந்து வந்தது: “அவர் கிட்டத்தட்ட 50 வயதானவர் , நடுத்தர உடல் கட்டமைப்பும், வழுக்கை தலையும் உடையவர். உடல் ரீதியாக மிகவும் வலுவானவர் அல்ல, அவர் உண்மையில் மிகவும் சாதாரணமானவர்.” என்று அவரது வர்ணனை தெரிவிக்கிறது.
அடுத்து என்ன நடக்கும்?
பல கேள்விகளுக்கு பதில்கள் தெரியவேண்டும். அவர் எப்படி தப்பித்தார்? 2007க்கு முன்பு அவர் எங்கே இருந்தார்? இவ்வளவு காலமாக அவரை ஏன் கண்டுபிடிக்கமுடியவில்லை? அவருக்கு எப்படி வேலை கிடைத்தது? யாராவது அவருக்கு உதவி செய்தார்களா? என்று பல பதில் தெரியாத கேள்விகள் இருப்பதாக காவல் ஆணையர் சாரங்கி குறிப்பிடுகிறார்.
குறிப்பாக, தாக்குதலுக்கு உள்ளான பெண் சில செல்வாக்குமிக்க நபர்கள் மீது சுமத்திய கடுமையான குற்றச்சாட்டுகளின் காரணமாக இந்தக் கேள்விகள் முக்கியத்துவம் வாய்ந்தவை என்று அவர் மேலும் கூறுகிறார்.
கூடவே நிறைய சவால்களும் உள்ளன. குற்றம் நடந்து பல ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் தாக்குதலுக்கு உள்ளான அந்தப் பெண் முதலில் அவரை அடையாளம் காண வேண்டும். பின்னர் நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கும். அவருக்கு தண்டனை கிடைக்கக்கூடும் அல்லது கிடைக்காமலும் போகக்கூடும்.
“இந்த வழக்கில் அவருக்கு கண்டிப்பாக தண்டனை கிடைப்பதை உறுதிசெய்ய நாங்கள் முழு முயற்சி செய்வோம்,” என்று சாரங்கி கூறுகிறார். “அவர் தனது வாழ்நாள் முழுவதையும் சிறையில் கழிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அவர் இறந்த பிறகுதான் அவரது உடல் சிறையிலிருந்து வெளியேற வேண்டும்,”என்கிறார் அவர்.
தனக்கு நீதி வழங்கியதற்காக சாரங்கி மற்றும் அவரது குழுவினருக்கு, தாக்குதலுக்கு உள்ளானவர் நன்றி தெரிவித்தார். தன்னை தாக்கியவருக்கு மரண தண்டனை விதிக்கப்படவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
“பிஸ்வால் கைது செய்யப்படுவார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. அவர் இறுதியாக பிடிபட்டதால் இப்போது “நிம்மதியும் மகிழ்ச்சியும்” அடைந்துள்ளேன்,” என்று ஓர் உள்ளூர் தொலைக்காட்சியிடம் அவர் தெரிவித்தார்.
- கீதா பாண்டே
- பிபிசி நியூஸ், டெல்லி