யாழ்.மாநகர சபையை கலைத்து மத்திய அரசிற்கு தாரை வார்ப்பதற்காக 50 இலட்ச ரூபாய்க்கு மேல் செலவழித்துள்ளார்கள் என யாழ். மாநகர முதல்வர் சட்டத்தரணி வி. மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
யாழ்.மாநகர சபையில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்த அவர்,
எனக்கு எதிராகவும் எனக்கு ஆதரவளித்தவர்களுக்கு எதிராகவும் செயற்பட்டு எம்மை மாநகர சபை உறுப்பினர் பதவிகளில் இருந்து நீக்குவதன் ஊடாக மாநகர சபையை கலைத்து மத்திய அரசிடம் கையளிக்க சிலர் எத்தனிக்கின்றனர். அதற்காக அவர்கள் இது வரைக்கும் சுமார் 50 இலட்ச ரூபாய் க்கும் மேல் செலவழித்து உள்ளனர்.
எமது சபையை கலைப்பது என்பது ராஜபக்சே தரப்பினர் விரும்புகின்ற செயற்பாடு. யாழ்ப்பாண பண்பாட்டு மையத்தை மத்திய அரசாங்கம் கையகப்படுத்த முனைகின்ற நிலையில் நாம் அதற்கு தடையாக உள்ளமையால் எம்மை சபையில் இருந்து நீக்குவதன் ஊடாக சபை கலைக்கப்படும். அதன் பின்னர் அவர்கள் நேரடியாக தமது செல்வாக்கை செலுத்தி , பண்பாட்டு மையத்தை கையகப்படுத்த முனைகின்றனர்.
இதற்காக அவர்கள் கோடிக்கணக்கான பணத்தை செலவழிக்க தயாராக உள்ளனர். அதற்கு அவர்கள் தங்களுக்கு ஆதரவானவர்களை கொண்டு எமக்கு எதிரான வழக்குகளை நடத்துகின்றனர்.
எமது கட்சியில் உள்ள அவர்களின் விசுவாசிகளை கொண்டு, ராஜபக்சேக்கள் எமக்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுக்கின்றார்கள். என தெரிவித்துள்ளார்.