நூற்றுக்கணக்கான(188) யானை கூட்டம் அறுவடை செய்யப்பட்ட வயல்களில் வைக்கப்பட்ட தீ காரணமாக மக்கள் குடியிருப்புகளை நோக்கி நடமாடுவதனால் அவற்றை விரட்டுவதற்காக வனவிலங்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அம்பாறை மாவட்டத்தில் வியாழக்கிழமை(18) மாலை திடிரென சம்மாந்துறை ஊடாக காரைதீவு ,மாவடிப்பள்ளி, நிந்தவூர் ,பகுதிகளை ஊடறுத்து ஊருக்குள் பிரவேசிக்க முயன்ற சுமார் 188 க்கும் அதிகளவான யானைகளை கட்டுப்படுத்தி அவ்விடத்தில் இருந்து அகற்றுவதற்காக துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
மாலை முதல் இரவு வரை குறித்த யானைகள் நகர்ந்து செல்லாமல் ஒரு இடத்தில் கூடி நிற்கின்றமை மற்றும் கலவரப்பட்டமை தொடர்பில் வனவிலங்கு அதிகாரிகளுக்கு பொதுமக்களால் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதன் போது குறித்த யானைகளை அவ்விடத்தில் இருந்து அகற்றுவதற்காக வனவிலங்கு அதிகாரிகள் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக யானைக்கூட்டத்தின் நகர்வுகளை அவதானித்து நடவடிக்கை எடுத்திருந்தனர்.
இதனால் யானைக்கூட்டத்தை பார்வையிட மாவடிப்பள்ளி பாலம், காரைதீவு ,நிந்தவூர் ,சம்மாந்துறை, பகுதிகளில் பொதுமக்கள் குவிந்து நின்று யானைக்கூட்டத்தை அவதானிப்பதை காணமுடிகிறது.யானை கூட்டத்தினை பார்வையிட வரும் மக்களால் போக்குவரத்து நெரிசல் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றதை அவதானிக்க முடிகின்றது.
இது தவிர குறித்த நிலைமைகளை ஆராய்ந்து வனஜீவராசிகள் வளங்கள் இராஜாங்க அமைச்சர் விமலவீர திசாநாயக்கவும் உடனடியாக நடவடிக்கையை மேற்கொண்டிருந்தார்.மேலும் இப் பிரதேசத்தில் அண்மையில் வேளாண்மை அறுவடை மேற்கொள்ளப்பட்ட நிலையில் தீ வைக்கப்படுவதனாலும் அங்கு கொட்டப்படும் குப்பைகளை தினந்தோறும் 100க்கும் மேற்பட்ட யானைகள் உண்ணுவதற்கு வருகை தருவதுடன் அருகில் உள்ள பொதுமக்களின் உடமைகளுக்கும் சேதம் விளைவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை கல்முனை மற்றும் சவளக்கடை காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் அண்மைக்காலமாக யானை கூட்டங்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.கடந்த இரு தினங்களாக காலை முதல் இரவு வரை மேற்குறித்த பொலிஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் யானைக்கூட்டம் திடிரென உட்பிரவேசித்து அப்பகுதிகளில் உள்ள அறுவடை செய்யப்பட் வேளாண்மை நிலங்களை சேதப்படுத்துவதுடன் காடுகளை அண்டிய குடியிருப்புகளையும் சேதப்படுத்தி செல்கின்ற நிலைமை தொடர்கதையாக உள்ளது. #மக்கள்குடியிருப்பு #அறுவடை #யானைக்கூட்டம்