முல்லைத்தீவு மாவட்டத்தின் தண்ணி முறிப்பு குருந்தூர் மலையைச் சுற்றியுள்ள பிரதேசத்தில் மேலதிகமாக 400 ஏக்கர் காணியை, பௌத்த பூமியாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தொல்பொருள் திணைக்களம், கரைத்துறைப்பற்று பிரதேச செயலாளரிற்கு, அனுப்பி உள்ள எழுத்துமூல கடிதத்தில், குருந்தூர் மலையை சுற்றியுள்ள தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணிகள் அமைந்துள்ள பகுதிகளை தம்மிடம் ஒப்படைக்குமாறு பணிக்கப்பட்டுள்ளது.
இந்த 400 ஏக்கர் காணியில், ஏறத்தாள 150 ஏக்கர் காணி, தண்ணி முறிப்பு கிராமத்திற்கு உரிய தமிழ் மக்களுடையது எனவும், மிகுதி காணிகள் நாகஞ்சோலை வனப்பகுதியில் உள்ளடங்குவதாகவும் சுட்டி்காட்டப்பட்டுள்ளது.
இந்தக் காணிகளை தொல்பொருள் திணைக்களத்திடம் ஒப்படைக்குமாறு வடக்கு மாகாண ஆளுனர் திணைக்களத்திலிருந்து, கரைத்துறைப்பற்று பிரதேச செயலக அதிகாரிகளிற்கு தொடர் அழுத்தம் கொடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதேவேளை எதிர்வரும் முதலாம் திகதி இடம்பெறவுள்ள முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் 400 ஏக்கர் காணியை தொல்பொருள் திணைக்களம் கோரிய விடயம் குறித்து ஆராயப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.