அரக்கோணம் அருகே சோகனூர் எனும் கிராமத்தில் இரு தலித் இளைஞர்கள் கொடூரமாக அடித்து கொலை செய்யப்பட்டிருப்பதற்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து பாப்புலர் ஃப்ரண்ட் மாநில தலைவர் முஹம்மது சேக் அன்சாரி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சாதிய வன்மத்தோடு நடைபெற்றுள்ள இப்படுகொலை சம்பவத்தில் மேலும் சில இளைஞர்கள் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தாக்குதலுக்கு உள்ளான அரக்கோணத்தை அடுத்த சோகனூர் கிராமத்தைச் சார்ந்த அர்ஜீன், சூர்யா, மதன், வல்லரசு, சவுந்தரராஜன் ஆகிய தலித் இளைஞர்களுக்கும் அருகே உள்ள மற்றொரு கிராமத்தை சேர்ந்தவர்களுக்கிடையில் சில பிரச்சனைகள் இருந்ததன் தொடர்ச்சியாகவே சாதிய வன்மத்துடன் இந்தப் படுகொலை நடந்துள்ளது.
தமிழகத்தில் இதுபோல் அவ்வப்போது நடைபெறும் ஆணவப்படுகொலைகள் மற்றும் சாதிய வன்ம படுகொலைகள் மீது உரிய விரைவான கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாததன் விளைவே தொடர்ச்சியாக நடைபெறும் இத்தகைய அதிர்ச்சியளிக்கக்கூடிய சாதிய வன்மத்தோடு நடைபெறும்படுகொலைகள். எனவே படுகொலை செய்யப்பட்டவர்களுக்கும் தாக்குதலில் காயமுற்றுஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கும் தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்குவதோடுசாதிய வன்மத்தோடு தாக்குதலில் ஈடுபட்டு படுகொலை செய்த குற்றவாளிகள், குற்றச்செயலில்ஈடுபட தூண்டியோர் உட்பட அனைவரின் மீதும் கடுமையான பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து உடனடியாக கைது செய்ய வேண்டும் என பாப்புலர் ஃப்ரண்ட் வலியுறுத்துகிறது என தெரிவித்துள்ளார்.