உயிர்த்த ஞாயிறு தின தொடர் குண்டுவெடிப்பில் அழிவடைந்த மூன்று தேவாலயங்களில் இரண்டு தேவாலங்கள் அரசாங்கத்தால் புனரமைக்கப்பட்டு, நினைவுகூரல் நிகழ்வுகள் இடம்பெற்ற நிலையில், கிழக்கில் உள்ள மக்கள் இரண்டு வருடங்களுக்கு முன்னர் அழிவடைந்த தேவாலயத்தில் பிரார்த்தனைகளை நடத்தியுள்ளனர்.
குண்டுவெடிப்பில் அழிக்கப்பட்ட கட்டுவாபிட்டிய புனித செபஸ்டியன் தேவாலயம் மற்றும் கொழும்பு – கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம் ஆகியவை கடற்படையால் விரைவாக புனரமைக்கப்பட்டன.
எனினும், மோசமான அழிவினை எதிர்நோக்கிய மட்டக்களப்பு சியோன் தேவாலயம் இரண்டு வருடங்கள் கடந்தும் இதுவரை புனரமைக்கப்படவில்லை என, பொது மக்களும், பக்தர்களும் கவலை வெளியிட்டுள்ளனர்.
பல தேவாலயங்கள் மற்றும் சுற்றுலா ஹோட்டல்களை குறிவைத்து 2019 ஏப்ரல் 21ஆம் திகதி நடத்தப்பட்ட தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதலில் 250ற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
இரண்டு வருடங்களுக்கு முன்னர் கட்டுவாபிட்டிய புனித செபஸ்டியன் தேவாலயம், கொழும்பு – கொச்சிகடை புனித அந்தோனியார் தேவாலயம், மட்டக்களப்பு சீயோன் தேவாலயம், தெஹிவலை மற்றும் கொழும்பு கிங்ஸ்பரி, ஷங்க்ரி-லா, சினமன் கிராண்ட் ஹோட்டல் ஆகிய இடங்களில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் குறைந்தது 268 பேர் கொல்லப்பட்டதோடு, 500ற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் இரண்டாம் வருட நிறைவைக் குறிக்கும், பல்வேறு மத விழாக்கள், நிகழ்வுகள் இலங்கை முழுவதும் நடைபெற்றதாக பிரதேச செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
நினைவுகூரல் நிகழ்வுகள் இடம்பெற்ற இடங்களைச் சுற்றி கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் நினைவாக நேற்று காலை நாடாளுமன்றத்தில் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி அனுஷ்டிக்கப்பட்டது.
தற்போதைய ஜனாதிபதி ஆட்சிக்கு வந்தபின் தேவாலயத்தின் புனரமைப்பு பணிகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளதாக, மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தின் அருட்தந்தை ரொசான் மகேஷன்தெரிவிக்கின்றார்.
“நவம்பர் 2019ஆம் ஆண்டுக்கு பின்னர், புனரமைப்பிற்கு அரசாங்கத்திடம் இருந்து பணம் கிடைக்கவில்லை. அதனாலேலேயே இது இவ்வாறு காணப்படுகின்றது.”
இடிந்து விழுந்த மற்றும் பூரணப்படுத்தப்படாத சுவர்களையும், தரையையும் காண முடிந்ததாக, தேவாலயத்திற்கு வருகைத் தந்த ஊடகவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கட்டி முடிக்கப்படாத சுவர்களுக்கு மத்தியில், தூசிகள் படர்ந்திருந்த தரையில் அமர்ந்து பெரும்பான்மையான தமிழ் பக்தர்கள் விசேட ஆராதனையில் பங்கேற்றனர்.
ஏப்ரல் 20, செவ்வாய்க்கிழமை, ஐக்கிய மக்கள் சக்தியின் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேவாலயத்தின் தற்போதைய நிலை குறித்து ஆராய்ந்துள்ளனர்.
குறித்த இரு நாடாளுமன்ற உறுப்பினர்களும் இருந்த சமயத்தில், தேவாலயத்தின் புனரமைப்பிற்காக திரைசேறியால் ஒதுக்கப்பட்டதாகக் கூறப்படும் நிதியில் ஆறில் ஒரு பங்கிற்கும் குறைவான தொகை கிடைத்துள்ளதாக, அருட்தந்தை ரொஷான் மகேஷன் ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தார்.
“இதனை புனரமைக்க 37 மில்லியனை ஒதுக்கியுள்ளதாக திரைசேறி அறிவித்தது. எனினும் இராணுவத்திற்கு சுமார் 6 மில்லியன் ரூபாய் மாத்திரமே கிடைத்துள்ளதாக நான் நினைக்கின்றேன்.”
உயிரிழந் பக்தர்களின் புகைப்படங்களைக் கொண்ட ஒரு பேனர் சியோன் ஆலயத்தின் முன் காட்சிக்கு வைக்கப்பட்டது. அவற்றில் 14 சிறுவர்கள் புகைப்படங்களும் காணப்படுகின்றன.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பலியானவர்களை நினைவுகூரும் வகையில் நேற்று காலை கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் நடைபெற்ற பிரதான ஆராதனைகளின் பின்னர் உரையாற்றிய கொழும்பு பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை, ”உண்மையை புதைத்து குற்றவாளிகளை திருத்துவதற்கான ஒழுங்கமைக்கப்பட்ட முயற்சியில் சேர ஒருபோதும் தயாராக இல்லை.” எனக் குறிப்பிட்டிருந்தார்.
68 சிறுவர்கள் உட்பட 269 பேரின் உயிரைக் கொன்ற குற்றத்தில் அப்போதைய அரசாங்கமும் தற்போதைய அரசாங்கமும் அலட்சியமாக இருப்பதை வலியுறுத்திய அவர், மந்தமான செயற்பாடுகள் குறித்து ஆழ்ந்த வருத்தத்தை வெளிப்படுத்தினார்.
மேலும் கொலைகளுக்குப் பின்னால் அரசியல் நோக்கங்கள் உள்ளன என்பது தெளிவாகிறது எனவும் அவர் கூறினார். ஆனால் அந்த உண்மைகள் என்ன என்பதை பேராயர் வெளியிடவில்லை.
உயிரிழந்தவர்களின் ஆத்ம சாந்திக்காக, வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள பல இந்து தேவாலயங்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரிகள் நாட்டுக்கு அம்பலப்படுத்தப்பட வேண்டும் எனக் கோரி, கிறிஸ்தவ மதகுருமார்கள், கன்னியாஸ்திரிகள், சிவில் சமூக அமைப்புகளின் உறுப்பினர்கள் மற்றும் பொது மக்களின் பங்கேற்புடன் நீர்கொழும்பில் போராட்டம் ஒன்றும் நேற்று நடத்தப்பட்டது.