தாமும், தமது சகோதரரும் கைது செய்யப்படவுள்ளதாக தெரிவித்து நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதீன் ட்விட்டர் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
“என்னை எவ்விதமான ஆதாரங்களுமின்றி கைது செய்யும் வகையில், இன்று அதிகாலை 1.30 மணி முதல் பௌத்தாலோக மாவத்தையிலுள்ள எனது வீட்டின் முன்னால் சிஐடியினர் உள்ளனர். எனது சகோதரரை ஏற்கனவே கைது செய்துள்ளனர். நான் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர். இதுவரையில் சகல சட்டபூர்வ விசாரணைகளுக்கும் முழு ஆதரவை வழங்கியுள்ளேன். இது சட்டத்துக்கு முரணானது” என அந்த ட்விட்டர் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களுடன் தொடர்புடைய விசாரணைகளை முன்னெடுப்பதற்காக முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறைத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை
உயிர்த்த ஞாயிறு குண்டுதாரிகளுக்கு உதவியமை மற்றும் நெருங்கிய தொடர்பை பேணியமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் கீழ் இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும், காவற்துறை ஊடக பேச்சாளர் பிரதி காவற்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.