இந்திய மத்திய, மாநில அரசுகள் மீண்டும் முழு ஊரடங்கை அமுல்படுத்துவது குறித்து தீவிரமாக பரிசீலிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்று பரவலின் வேகம் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டீட வருகின்ற நிலையில் ஒரே நாள் பாதிப்பு 4 லட்சத்தை கடந்துள்ளது. இந்த எண்ணிக்கையைக் குறைக்க வேண்டுமானால் கட்டாயம் ஊரடங்கு தேவை என மருத்துவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
ஒக்சிஜன் பற்றாக்குறை, மருத்துவமனைகளில் படுக்கை வசதி தட்டுப்பாடு உள்ளிட்டவை குறித்து உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்து வருகின்ற நிலையில் நேற்று (மே 2) நடந்த விசாரணையின்போது மத்திய, மாநில அரசுகளுக்குப் பல உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.
டெல்லியில் உள்ள ஒக்சிஜன் தட்டுப்பாட்டைப் போக்க இரண்டு நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநில அரசுகளுடன் இணைந்து கொரோனா தொற்றுள்ள அவசர காலத்தைச் சமாளிக்கும் அளவுக்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். மாநிலங்கள் போதிய அளவு ஒக்சிஜனை இருப்பு வைத்துக் கொள்வதற்கு, 4 நாட்களில் ஒக்சிஜன் விநியோகம் செய்யப்பட வேண்டும்
மருத்துவமனைகளில் யாருக்கும் அத்தியாவசிய மருந்துகள் மறுக்கப்படக் கூடாது. இதற்காக 2 வாரங்களுக்குள் மாநில அரசுகளுக்கான தேசிய கொள்கை வகுக்கப்பட வேண்டும்.
அடுத்த விசாரணைக்குள் ஒக்சிஜன், தடுப்பூசிகள் மற்றும் அத்தியாவசிய மருந்துகளின் விலை போன்றவை மறு ஆய்வு செய்யப்பட்டிருக்க வேண்டும். கொரோனா தொற்றின் தீவிரத்தை உணர்ந்து, அதிக அளவில் மக்கள் கூட்டம் கூடுவதைத் தவிர்க்க வேண்டும். இதனை மத்திய, மாநில அரசுகள் உறுதிப்படுத்த வேண்டும். பொதுமக்களின் நலனை கருத்தில்கொண்டும், கொரோனா என்ற சங்கிலியை உடைக்கும் நோக்கில் முழு ஊரடங்கு அமுல்படுத்த மத்திய, மாநில அரசுகள் பரிசீலிக்க வேண்டும்.
அதேநேரம் முழு ஊரடங்கை அமுல்படுத்தினால் பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்துமெனில், அதனை சமாளிக்க முழு ஊரடங்கை அமுல்படுத்துவதற்கு முன் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுங்கள் எனவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.