(க.கிஷாந்தன்)
தலவாக்கலை, சென்கூமஸ் கிராம சேவகர் பிரிவு இன்று (7.5.2021) முதல் மறுஅறிவித்தல் விடுக்கப்படும் வரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளது – என்று லிந்துலை சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்தார்.
அத்துடன், அப்பகுதியில் உள்ள தேயிலை ஆராய்ச்சி நிலையத்துக்கு செல்வதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
தலவாக்கலை தேயிலை ஆராய்ச்சி நிலைய ஊழியர்களுக்கும், சென்கூமஸ் தோட்டத் தொழிலாளர்கள் 40 பேருக்கும் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளில், சுமார் 30 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையிலேயே தனிமைப்படுத்தல் விதிமுறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
மேற்படி தோட்டப்பகுதியில் உள்ள நபரொருவருக்கு வைரஸ் தொற்று உறுதியானதையடுத்து அவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதிலும் சிலருக்கு வைரஸ் தொற்று இருந்துள்ளது. இதனையடுத்தே பி.சி.ஆர் பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இதன் அடிப்படையிலேயே தேயிலை ஆராய்ச்சி நிலைய ஊழியர்களுக்கும் வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ள நிலையில் இவ்விரு பகுதிகளுக்கும் வருவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதுடன் அனைத்து பாதைகளும் மூடப்பட்டுள்ளன
இதேவேளை நுவரெலியா மாவட்டத்தில் நேற்று (06.05.2021) 43 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி கினிகத்தேன சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவருக்கும், கந்தபளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் நால்வருக்கும், கொத்மலை சுகாதார வைத்திய அதிகாரி நால்வருக்கும், லிந்துலை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவருக்கும் வைரஸ் தொற்றியுள்ளது.
அத்துடன், நோர்வூட் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இருவருக்கும், நுவரெலியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 16 பேருக்கும், பூண்டுலோயா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 15 பேருக்கும் வைரஸ் பரவியுள்ளது.