யாழ்ப்பாணத்தில் பயணத் தடையை மீறி செயற்படுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் யாழ் மாவட்ட அரச அதிபர் க. மகேசன் தெரிவித்துள்ளார். எதிர்வரும் மூன்று நாட்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ள பயண கட்டுப்பாடு தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில்…..
யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்பொழுது கொரோனா தொற்று நிலைமை அதிகரித்த நிலையில் காணப்படுகின்றது நேற்றைய தினம் மாத்திரம் 67 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது
இந்த நிலையில் தேசிய மட்டத்தில் அறிவுறுத்தப்பட்ட சில நிபந்தனைகளை கட்டுப்பாடுகளையும் யாழ்ப்பாண மாவட்டத்திலும் அமுல்படுத்த வேண்டிய நிலையில் உள்ளது அந்த வகையில் இன்று இரவு 11 மணி முதல் 17ஆம் திகதி அதிகாலை நான்கு மணி வரை கொரானா ஒழிப்பு மத்திய நிலையத்தினால் பயணதடை விதிக்கப்பட்டுள்ளது
இந்தப் பயணத் தடை காலத்தில் பொது போக்குவரத்து முற்றாக தடைபடும் கடைகள் மற்றும் ஏனைய பல்பொருள் அங்காடிகள் மூடப்பட்டு இருக்கும் ஆனால் அத்தியாவசிய சேவைகள் மாத்திரம் இடம்பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது ஆகவே பொதுமக்கள் எதிர்வரும் மூன்று நாட்களும் தங்களுடைய வீடுகளில் இருந்து இந்த செயற்பாட்டுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்
மேலும் இந்த பயணத் தடை காலத்தில் பலர் தமக்கு ஊரடங்கு அனுமதி தருமாறு கோரிக்கை விடுகின்றார்கள். பொதுமக்கள் ஒரு விடயத்தினை உணர்ந்து கொள்ள வேண்டும் இந்த பயணத்தடை என்பது பொதுமக்கள் இந்த நிலமையினை அனுசரித்து வீடுகளில் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த பயணத்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த மூன்று நாட்களும் விடுமுறை நாட்கள் என்பதனால் வெளியில் சகல நடவடிக்கைகளும் செயலிழந்து காணப்படும் எனவே பொது மக்கள் வெளியில் நடமாட வேண்டிய தேவை இருக்காது
அரசு அலுவலகங்கள் இயங்காது பொதுப் போக்குவரத்து சேவை இடம்பெறாது எனவே இந்த மூன்று நாட்களும் பொதுமக்களில் வீடுகளில் இருக்க வேண்டியது அவசியமாகும். அத்தோடு வைத்திய சேவை மற்றும் ஏனைய அத்தியாவசிய சேவைகள் மாத்திரம் செயற்படும் வைத்தியசாலைக்கு அல்லது அத்தியாவசியமான சேவைக்கு வெளியில் செல்வோர் பயண கட்டுப்பாட்டுடன் சென்று வர முடியும்.
மேலும் அத்தியாவசிய தேவைகளில் ஈடுபடுகின்ற வாகனங்கள் வெளி மாகாண போக்குவரத்தில் ஈடுபடுவோர் அதாவது உணவுப்பொருட்கள் , எரிபொருள், காஸ்,அவர்கள் ஏற்கனவே உரிய முறையில் விண்ணப்பித்து பெற்ற அத்தியாவசிய சேவைகளுக்கு என வழங்கப்பட்டுள்ள அனுமதியினை பயன்படுத்தி பயணிக்க முடியும். தற்பொழுதுள்ள இந்த இடர் நிலைமையினை எதிர்கொள்வதற்கு ஒவ்வொரு பிரதேச செயலர் மட்டத்திலும் பிரதேச செயலர்கள் பிரதேச குழுக்கள் ஊடாக தற்போதுள்ள நிலைமையினை எதிர்கொள்ள நடவடிக்கை எடுக்கிறார்கள்.
குறிப்பாக அத்தியாவசிய சேவைகளை பொதுமக்களுக்கு பெற்றுக் கொடுப்பதற்குரிய ஏற்பாடுகளை முன்னெடுத்து ள்ளார்கள். அந்த வகையிலே பிரதமர் அலுவலகம் ஒரு விசேட வேண்டுகோளை விடுத்துள்ளது. கடந்த முறை ஊரடங்கு நேரத்தில் பின்பற்றிய நடைமுறையை போன்று இந்த நிலைமையிலும் அதனை பின்பற்றுமாறு அறிவுறுத்தியுள்ளது அதன்படி பிரதேச மட்டங்களில் அந்த நிலைமை செயற்படுத்தப்படும். இந்த நிலையிலே போக்குவரத்து அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது
அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய போக்குவரத்திற்கு பொதுமக்கள் அனுமதி கோருவதை நிறுத்திக் கொள்ளுங்கள் எதிர்வரும் மூன்று நாட்களுக்கு பயணங்களை மட்டு படுத்தி கொள்ளுங்கள் அத்தோடு எதிர்வரும் 31ஆம் திகதி வரை அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரம் அடையாள அட்டை இலக்கங்களை பயன்படுத்தி அவர்கள் தமது சேவையினை பெற்றுக் கொள்ளலாம் அத்தோடு அலுவலகங்களுக்கு செல்வோர் தமது அடையாள அட்டையைக் காட்டி தமது பயணங்களைப் தொடரமுடியும்.
யாழில் மூன்று சிகிச்சை நிலையங்கள்
வட்டுக்கோட்டை தொழில்நுட்ப கல்லூரி அதேபோல் நாவற்குழி நெற்களஞ்சியம் போன்றன இடைத்தங்கல் சிகிச்சை நிலையங்களாக மாற்றுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது வட்டுக்கோட்டை சிகிச்சை நிலையத்தில் ஏற்கனவே தொற்றாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்
நாவற்குழி நெற்களஞ்சியத்தினை சிகிச்சை நிலையமாக மாற்றுவதற்குரிய ஏற்பாடுகள் மிக வேகமாக முன்னெடுக்கப்படுகின்றன நாவற்குழி நெற்களஞ்சியத்தை சிகிச்சை நிலையமாக மாற்றினால் அதில் 650க்கும் மேற்பட்ட தொற்றாளர்களுக்கு அங்கு சிகிச்சை அளிக்க முடியும் அத்தோடு வட்டுக்கோட்டையிலே 200 கட்டில்களைக் கொண்ட சிகிச்சை நிலையமாக மாற்றப்பட்டுள்ளது
இதனைவிட வடக்கு சுகாதாரப் பிரிவினர் 4 ஆதார வைத்திய சாலைகளை அதாவது தெல்லிப்பளை, பருத்தித்துறை, ஊர்காவற்துறை ,சாவகச்சேரி இந்த நான்கு ஆதார வைத்தியசாலைகளில் ஒரு விடுதியை கொரோனா சிகிச்சை நிலையமாக மாற்றுவதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது மேலும் மட்டுப்படுத்தப்பட்ட ஆளணியினருடன் சுகாதார பிரிவினர் வடக்கில் சேவையினை முன்னெடுத்து வருகின்றது இந்த நிலைமை ஒரு சவாலான நிலைமையாக காணப்படுகின்றது எனவே பொதுமக்கள் இந்த சுகாதார கட்டுப்பாடுகளை மிகவும் அனுசரித்து தற்போது உள்ள அபாய நிலையை உணர்ந்து செயற்பட வேண்டும்.
தமிழகத்திலிருந்து சட்டவிரோதமாக வருவோர் குறித்து விழிப்பாக இருங்கள்.
வட பகுதியை பொருத்தவரைக்கும் ஒரு பெரிய சவாலான விடயம் காணப்படுகின்றது. அதாவது சட்டவிரோதமான முறையில் எமது அயல் நாட்டிலிருந்து எமது பகுதிக்கு வருகின்ற நிலைமை காணப்படுகின்றது பொதுமக்களுக்கு மிகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டும் அந்த நிலைமை அனுசரிக்கப்படாத நிலைமை கவலை அளிக்கின்றது எனவே பொதுமக்கள் சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டு பாதிப்பினை ஏற்படுத்த முன்வராது தமது குடும்பத்தையும் சமூகத்தையும் எமது மாவட்டத்தினை தொற்றிலிருந்து பாதுகாக்க அனைவரும் முன்வர வேண்டும் அத்தோடு உங்களுடைய பகுதி கிராம சேவகர் மற்றும் அப்பகுதி அரச உத்தியோகத்தர்களின் உதவியுடன் தொற்றிலிருந்து உங்கள் பகுதியினை பாதுகாக்கவேண்டும். அரசாங்கத்தின் சுகாதார கட்டுப்பாடுகளை மீறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள், கைதுகள் இடம்பெற்றுவருகின்றன எனவே யாழ்ப்பாண மாவட்டத்திலும் அரசின் சுகாதார சட்ட திட்டங்களுக்கு எதிராக செய்யப்படுவோருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் எனவே பொதுமக்கள் தற்போதுள்ள நிலைமையினை அனுசரித்து தம்மையும் தமது மாவட்டத்தினையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.