ஒரு இளம் தொழிலாளர் தலைவரின் உயிரைப் பறித்த மற்றும் ஆயிரக்கணக்கானவர்களைத் துன்புறுத்திய பத்து வருடங்களுக்கு முன்னர் காவல்துறையினாின் தாக்குதலுக்குள்ளான எந்தவொரு தொழிலாளிக்கும் இதுவரை நீதி கிடைக்கவில்லை என தொழிற்சங்கத் தலைவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
அவர்களில் எவருக்கும் இதுவரை நியாயம் கிடைக்கவில்லை என சுதந்திர வர்த்தக வலய ஒத்துழைப்பு அமைப்பு குற்றஞ்சாட்டுகிறது.
“பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசாங்கம் இன்னும் நீதி வழங்கவில்லை. இந்த சம்பவம் குறித்து விசாரணை செய்யப்பட்ட மஹாநாம திலகரத்ன என்ற நபர் மாத்திரம் பிரதிநிதித்துவம்படுத்தும் குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்த அதிகாரிகள் தவறியுள்ளனர்.
மே 30, 2011ஆம் ஆண்டு, கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் பணியாற்றிய தொழிலாளர்கள் ஊழியர் சேமலாப நிதியத்தை பாதுகாக்க பாரிய போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர்.
போராட்டத்தில் காவல்துறையினா் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் காயமடைந்த மறுதினம், ரொஷேன் சானக்க, என்ற 22 வயது தொழிலாளி கொல்லப்பட்டார், மேலும் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான ஏழு தொழிலாளர்கள் நிரந்தரமாக முடக்கப்பட்டனர்.
இந்த தாக்குதலில் 400 தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதோடு, மேலும் 3,000 பேர் உடல் ஒவ்வாதைக்கு உள்ளானார்கள். ரொஷேன் சானக்கவின் கொலைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்னமும் நீர்கொழும்பு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்த வழக்கில் சாட்சியங்களை விசாரணை செய்வது இன்னும் நிறைவடையாத நிலையில், வழக்கின் தீர்ப்பை அறிந்துகொள்ள எவ்வளவு காலம் ஆகும் என்பது நிச்சயமற்றது என சுதந்திர வர்த்தக வலய ஒத்துழைப்பு அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
ஊழியர் சேமலாப போராட்டம் வெற்றி பெற்றமைக்கு சுதந்திர வர்த்தக வலயத் தொழிலாளர்களின் அர்ப்பணிப்பு முக்கிய காரணமாக அமைந்துள்ளதாக, அந்த அமைப்பு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தாக்கப்பட்ட தொழிலாளர்கள் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை பரிசீலித்த பின்னர், போராட்டத்தை கலைக்க காவல்துறையினர் தன்னிச்சையாக அதிகாரத்தை பயன்படுத்தியதாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பிரேசில் தூதுவர் பதவிக்கு அப்போதைய காவல்துறைமா அதிபர் மஹிந்த பாலசூரியவை நியமித்திருந்தார், பின்னர் அவரை சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சகத்தின் செயலாளராக நியமித்தார்.
தொழிலாளர்களின் உரிமை மீறல்களுக்கு இதுவரை இழப்பீடு கிடைக்கவில்லை என சுதந்திர வர்த்தக வலய ஒத்துழைப்பு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பதினாறு பேருக்கு இழப்பீடு
தொழிலாளர் தலைவரைக் கொன்ற காவல்துறையினாின் தாக்குதலில் காயமடைந்த 16 பேருக்கு இழப்பீடு வழங்குமாறு நாட்டின் உச்ச நீதிமன்றம் 2019 ஏப்ரலில் அரசுக்கு உத்தரவிட்டது.
காவல்துறையினரால் தாக்கப்பட்ட கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய ஊழியர்கள் தாக்கல் செய்த மனுவில் தீர்ப்பை அறிவித்த நீதிபதி விஜித் மலல்கொட, கருத்துச் சுதந்திரம் உட்பட 16 பேரின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.
காயமடைந்த மற்றும் தப்பிப்பிழைத்தவர்களுக்கு 50,000 முதல் 250,000 ரூபாய் வரை செலுத்துமாறு உச்ச நீதிமன்றம் 2019இல் அரசுக்கு உத்தரவிட்டது.
இப்பகுதியில் புதிய தலைமுறை
ஊழியர் சேமலாப நிதியை பாதுகாப்பதற்காக பத்து வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற உயிர்த்தியாகம் செய்து முன்னெடுத்த போராட்டம் தொடர்பில், சுதந்திர வர்த்தக வலய ஒத்துழைப்பின் புதிய தலைமுறையினரின் கவனக்குறைவு தொடர்பில் கவலை வெளியிடப்பட்டுள்ளது.
” சேமலாப உரிமையாளர்கள் பலர் இதை மறந்துவிட்டார்கள், இந்த வெற்றிகரமான போராட்டம் மற்றும் இதனால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து சிறிய அளவிலேயே அவதானம் செலுத்துகின்றனர். 2011இல் தோற்கடிக்கப்பட்ட ஓய்வூதிய பிரேரணை மீண்டும் வேறு ஒரு வடிவில் அறிமுகப்படுத்தப்படுவதற்கான வாய்ப்பு காணப்படுகின்றது, இதுவே எமக்கான சவால். ஏனென்றால் தற்போதைய அரசாங்கம் அதை பல்வேறு சமயங்களில் சுட்டிக்காட்டியுள்ளது.”
தொழிற்சங்கங்களை உருவாக்குவது ஒரு தொழிலாளர் உரிமை, ஆனால் அவ்வப்போது இலங்கையில் ஆட்சியில் இருக்கும் ஆளும் கட்சி, அந்த சட்ட விதிகளை புறக்கணித்து வருவது வருத்தத்திற்குரியது என அந்த அமைப்பு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
“பிராந்தியத்தில் தொழிற்சங்கங்கள் அமைப்பதற்கான சட்டபூர்வமான இடத்தைக் கூட தடுக்க ஆட்சியாளர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்கின்றார்கள். இது பிராந்தியத்தில் உள்ள தொழிலாளர் நிறுவனத்தின் சுதந்திரத்தையும் உரிமைகளையும் தடுக்கிறது.”
“கொரோனா தொற்றுநோய் வேகமாக பரவுவதால் இப்பகுதியில் உள்ள தொழிலாளர்களும் வேலை இழக்கின்றனர். இதுபோன்ற சவாலான சூழ்நிலையில் என்ன செய்வது என்பது குறித்து தொழிலாளர்கள் உட்பட அனைவரையும் இன்னும் தீவிரமாக சிந்திக்க கட்டாயப்படுத்துகிறது. ”
தொற்றுநோய் மற்றும் வேலை பாதுகாப்பு
கொரோனா தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட சமூகங்களிடையே முதலீட்டு வலயங்களில் பணிபுரியும் உழைக்கும் சமூகத்தின் சுகாதார பாதுகாப்பு மற்றும் தொழில் பாதுகாப்பு குறித்து அவதானம் செலுத்தப்பட அவசியத்தை வலியுறுத்தியுள்ள, சுதந்திர வர்த்தக வலய ஒத்துழைப்பு நான்கு முக்கிய பிரச்சினைகளை எடுத்துக்காட்டுகிறது.
கொரோனா தடுப்பூசி திட்டத்தில் சுதந்திர வர்த்தக வலயங்களில் உள்ள தொழிலாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும், மேலும் பி.சி.ஆர் பரிசோதனையை விரைவுபடுத்துவது அவசியம்.
மேலும், தொழிற்சாலைகளில் உள்ள சுகாதார நடைமுறைகள் மேம்படுத்தப்பட வேண்டும் மற்றும் அடையாளம் காணப்பட்ட பாதிக்கப்பட்ட நபர்கள் சம்பந்தப்பட்ட தொழிற்சாலையின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் தனிமைப்படுத்தலுக்கு அனுப்புவதோடு அவர்களை விரைவில் பணிக்கு அழைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கொரோனா வைரஸின் வெளிப்பாடு காரணமாக ஒரு தொழிற்சாலை மூடப்பட வேண்டுமானால், அதன் தொழிலாளர்களுக்கு மாத சம்பளம் வழங்கப்பட வேண்டும் மற்றும் தொழிற்சாலை மூடப்படாவிட்டால் தனிமைப்படுத்தப்பட்ட தொழிலாளர்களுக்கு தனிமைப்படுத்தப்பட்ட காலத்தில் அதன் நிர்வாகம் ஊதியத்துடன் விடுமுறை வழங்க வேண்டும்.
மனிதவளம் மற்றும் தற்காலிக தொழிலாளர்களுக்கு மாதாந்தம் 5,000 ரூபாய் நிவாரணம் வழங்கப்பட வேண்டும்.
மார்ச் 2020 மற்றும் 2021 பெப்ரவரி மாதங்களுடன் ஒப்பிடுகையில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதிகள் கணிசமாக உயர்ந்த மட்டத்தில் காணப்படுவதால், இந்த கோரிக்கைகள் நியாயமானது எனவும், சுதந்திர வர்த்தக வலய ஒத்துழைப்பு வலியுறுத்தியுள்ளது.