மியான்மர் ராணுவத்தினரின் நடவடிக்கையால் சுமார் 100-க்கும் மேற்பட்ட ரோஹின்யா முஸ்லீம் மக்கள் உயிரிழந்திருக்கலாம் என ஐ.நா. தெரிவித்துள்ளது. மேலும், பெண்கள் பாலியல் சித்திரவதைக்கு உள்ளானதாகவும், பலியானவர்களில் கணிசமான குழந்தைகளும் உள்ளடங்குவதாகவும் ஐ.நாவினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.நா சபையின் மனித உரிமை ஆணையத்தினர் மியான்மர் ராணுவத்தின் இந்த நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன் , மியான்மர் அரசிடம் பல்வேறு கேள்விகளையும் எழுப்பியுள்ளனர். மேலும் மியான்மர் அரசு உடனடியாக ராணுவத்தின், மனித உரிமை மீறல் குறித்து உரிய விசாரணை நடத்திட வேண்டும் எனவும் அவர்கள் கேட்டுக் கொண்டனர்.
இதேவேளை ரோஹின்யா முஸ்லிம்களின் துன்பங்களை அலட்சியம் செய்துவிட முடியாது என்று தெரிவித்துள்ள மலேசிய பிரதமர் நஜிப் ரசாக் அவர்களுக்கான உணவு உள்ளிட்ட அவசர விநியோகப் பொருட்களுடன் நிவாரண உதவிக் கப்பல் ஒன்றையும் இன்று வெள்ளிக்கிழமை அனுப்பிவைத்துள்ளார்.
இது ஒரு வரலாற்று தருணம் எனத் தெரிவித்துள்ள மலேசிய பிரதமர் pயன்மாரில் அனைத்து ரோஹின்யா முஸ்லிம்களின் வலிகள் துன்பங்களை அலட்சியம் செய்துவிட முடியாது எனவும் அவர்கள் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்படுகின்றனர் எனவும் கொலை செய்யப்படுகின்றனர் மற்றும் உயிருடன் எரிக்கப்படுகின்றனர். எனவும் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஒக்டோபர் மாதம் முதல் ரக்கினே பகுதியிலிருந்து ரோஹிங்யா முஸ்லீம் மக்களை அப்புறப்படுத்தும் பணியில் மியான்மர் ராணுவத்தினர் ஈடுபட்டுவருகின்றனர். இந்த நடவடிக்கையின் போது மனித உரிமைகள் பெருமளவில் மீறப்படுவதாகவும், ராணுவம் இனஅழிப்பில் ஈடுபடுவதாகவும் புகார் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது