ஊடக அறிக்கை
நேற்று முன்தினம் நாடாளுமன்றில் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ச தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் வெளியிட்டுள்ள விசேட அறிவித்தலானது எமக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது.எமது உறவுகள் மீதான குற்றத்தண்டனைக்கும் அதிகமான காலத்தை சிறையில் கழித்த பின்பும் அவர்களை தொடர்ந்து தடுத்து வைத்திருப்பது முறையல்ல என்பதையும் தெரிந்தோ தெரியாமலோ சந்தர்ப்பச் சூழ்நிலைகளால் செய்திருக்கக் கூடிய செயற்பாடுகளுக்காக அவர்களது பாதி வாழ்க்கை வீணடிக்கப்பட்டு விட்டது என்பதையும் ஏற்றுக் கொண்டு தமிழ் அரசியல் கைதிகளை புனர்வாழ்வுக்கு உட்படுத்தியேனும் நியாயத்தை பெற்றுக்கொடுக்க வேண்டும் என அமைச்சர் நாமல் ராஜபக்ச நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார.
வரலாற்றில் முதற்தடவையாக ஆளும் அரசாங்கத்தின் பொறுப்புமிகு அமைச்சர் ஒருவர் இவ்வாறு கூறியிருப்பது எமது உறவுகளின் துரித விடுதலைக்கான நல்லெண்ண சமிக்ஞை என்றே நம்புகிறோம். அது மட்டுமன்றி ஆளும் கட்சியை சேர்ந்த உறுப்பினர்களும் எதிர்த் தரப்பு உறுப்பினர்களும் அமைச்சர் நாமல் ராஜபக்சவின் வேண்டுகோளையும் அதற்கு சாதகமாக பதிலளித்த நீதி அமைச்சரின் கருத்தையும் முழு மனதோடு ஏற்றுக்கொண்டு கைதிகளின் விடுதலை விவகாரத்தை ஆதரித்திருந்தமை முக்கியமான விடயம்.
இது தொடர்பில் உயர் சபையின் சபாநாயகரும் கூட முக்கியமானதொரு விடயத்திற்க்கு அனைத்து உறுப்பினர்களும் எந்தவொரு எதிர்ப்பையும் காட்டாது உடன்பட்டிருந்ததையிட்டு நன்றி தெரிவித்துள்ளார்.
நிச்சமயமாக நீண்ட நெடுங்காலம் சிறையில் வாடும் எமது பிள்ளைகளின் உண்மை நிலையினை சகோதர சமூகத்தின் மக்கள் பிரதிநிதிகள் உணர்ந்திருக்கின்றமையானது எமது உறவுகளின் விடுதலைக்கு தீர்வினை தருகின்ற முதற் புள்ளி என்றே கருதுகின்றோம்.
நடந்து முடிந்த போராட்டத்தின் பெயரில் நீண்ட காலமாக சிறைப்படுத்தப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை இனிமேலும் விளக்கமறியல் கைதிகள், தண்டனைக்கைதிகள், மேல் முறையீட்டு கைதிகள் என வகைபிரித்து பார்க்காமல் ‘புனர்வாழ்வளித்தல்” போன்ற ஏதேனும் ஒரு பொதுப்பொறிமுறையினூடாக தடுத்த வைக்கப்பட்டுள்ள அனைவருக்குமான விடுதலையை பெற்றுக்கொடுப்பதே தர்மம் ஆகும் நிச்சயமாக சமூகங்களுக்கிடையில் புரையோடிப்போயுள்ள இன முரண்பாடுகளுக்கு தீர்வினை அடைய இதனை விடப் பொருத்தமானதொரு நல்லெண்ணச்செயற்பாட்டை அடையாளம் காண முடியாது எனவே நடப்பு அரசாங்கம் இத்தருணத்தை சரியான முறையில் பயன்படுத்துவதன் மூலம் இனச்சமூக முரண்பாடுகளற்ற இலங்கைத்தேசத்தை சமாதான பூமியாக மாற்றி அனைவரும் இன்புற்று வாழ முடியும் என பொறுப்புடன் நிச்சயப்படுத்துகின்றோம்
கனிந்துள்ள இந்த பொன்னான தருணத்தின் பொறுப்புணர்ந்து இனம், மதம், மொழி, கட்சி, கொள்கை , அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் அனைவரும் சிந்தித்து செயலாற்றுமாறு பிள்ளைகளை பிரிந்து வாழும் தாயுள்ளங்களான நாம், பிராத்தனையோடு வேண்டுகோள் விடுக்கிறோம்.
நன்றி
தமிழ் அரசியல் கைதிகளின் பெற்றோர், உறவினர்கள்