Home இலங்கை எம் மக்கள் கஸ்ரப்பட்டுக்கொண்டிருக்கும் போது எங்களுக்கு என்ன சுதந்திரம் – வடக்கு முதலமைச்சா்

எம் மக்கள் கஸ்ரப்பட்டுக்கொண்டிருக்கும் போது எங்களுக்கு என்ன சுதந்திரம் – வடக்கு முதலமைச்சா்

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
நான் இன்று( 04-02-2017) நல்ல பணிகளையே செய்துகொண்டிருக்கிறன், தற்போது கேப்பாபிலவில்  கஸ்ரப்பட்டுக்கொண்டிருக்கும்   மக்களை காணச் செல்கின்றேன், ஆகவே  மக்கள் கஸ்ரப்பட்டுக்கொண்டிருக்கும்  போது எங்களுக்கு  என்ன சுதந்திரம், எனவே நான் கலந்துகொள்ளாதன் விசயம் அதுதான்  என வடக்கு    மாகாண முதலமைச்சா் க.வி விக்கினேஸ்வரன் அவா்கள் தெரிவித்துள்ளாா்.

இன்று 04-02-2017 கிளிநொச்சி பூநகரி வைத்தியசாலையில் சத்தியசாயிபாபா அமைப்பினரால்  வைத்தியசாலைக்கும்,பொது மக்களுக்குமாக அமைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் திட்டத்தை ஆரம்பித்து வைத்ததன் பின்னா்  இன்றை சுதந்திர தின நிகழ்வில் தாங்கள் ஏன் கலந்துகொள்ளவில்லை என ஊடகவியலாளா்கள் கேள்வியெழுப்பிய போதே முதலமைச்சா் இவ்வாறு தெரிவித்தாா்.
இதேவேளை மேற்குறித்த நிகழ்வில் முதலமைச்சா் உரையாற்றும் போது
பூநகரி பிரதேச வைத்தியசாலையின் குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்குவதற்காக குடிநீர் தினமும் தண்ணீர்பௌசர்கள் மூலமாக கொண்டு வந்து நிரப்பப்டுகின்ற போதும் பௌசர்கள் வரமுடியாத நாட்களில் இவ்வைத்தியசாலையில் குடிநீர் தட்டுப்பாடு காணப்பட்டு வந்தது. இந் நீர்த் தட்டுப்பாட்டை நீக்கும் நோக்கில் நீர் சுத்திகரிப்பு செயற்திட்டம் ஒன்றை கொழும்பு ஸ்ரீ சத்திய சாயி பாபா மத்திய நிலையத்தின் ஏற்பாட்டில் சத்திய சாயி பாபா (இலங்கை) அறக்கட்டளையகம் மற்றும் சீரடி சாயி பாபா (இலங்கை) மத்திய நிலையம் ஆகியன நடைமுறைப்படுத்த முன் வந்தன. அவர்களின் அனுசரணையுடன் சுழு Pடயவெ ஒன்று நிறுவப்பட்டுள்ளது. அது மணித்தியாலத்திற்கு 50 லீற்றர் என்ற வகையில் குடிநீர் தேவையைப் பூரணப்படுத்தக்கூடியதாக அமைந்துள்ளது. அவ்வாறான  நீர் சுத்திகரிப்பு செயற்திட்டத்தை இன்று திறந்து வைத்து உங்கள் முன் உரையாற்றுவதில் பெருமகிழ்வடைகின்றேன்.
வடமாகாணத்தைப் பொறுத்தவரையில் பூநகரிப் பிரதேசம் குடிநீர் தட்டுப்பாட்டைக் கொண்ட ஒரு பிரதேசமாக அடையாளங்காணப்பட்டிருந்தது. இப்பிரதேசத்திற்கான குடிநீரை இரணைமடுக் குளத்தில் இருந்து பெற்றுக்கொள்ளும் ஒரு திட்டம் முன்பு தயாரிக்கப்பட்ட போதும் பல்வேறு காரணங்களால் அத்திட்டம் முழுமை பெறவில்லை. அதன் காரணமாக பூநகரிப் பிரதேசத்திற்கான குடிநீர் விநியோகம் தற்காலிகமாக தடைப்பட்டிருந்தமை நீங்கள் அனைவரும் அறிந்தவையே.
எனினும் எமது மக்களின் தேவையை கொழும்பில் நிலைகொண்டிருக்கும் ஸ்ரீ சத்திய சாயி பாபா மத்திய நிலையம்,சத்யசாயிபாபாஅறக்கட்டளையகம்  மற்றும் சீரடி சாயி பாபா மத்திய நிலையம் ஆகியன உணர்ந்துகொண்டு இப்பகுதி மக்களுக்கான நீர்த்தேவையை நிறைவு செய்வதற்காக சுமார் 5.5 மில்லியன் ரூபாய் செலவில் தண்ணீர் சுத்திகரிப்புத் தாங்கி ஒன்றை நிறுவ முன்வந்திருப்பது பாராட்டுக்குரியது.  அத்துடன் இந்நிகழ்வை ஆரம்பித்து வைப்பதற்காக மேற்படி சாயி ஸ்தாபனங்களின் தலைவர் திரு.எஸ்.என்.உதயநாயகன் அவர்கள் தமது நிலையத்தின் அனுசரணையாளர்களுடன் இங்கு நேரடியாக வருகை தந்து இந்த நீர் சுத்திகரிப்பு நிலையத்தை திறந்து வைக்கும் இந்நிகழ்வில் கலந்துகொண்டு உங்கள் முன் உரையாற்றி இருப்பது உண்மையிலேயே பெருமகிழ்வைத் தருகின்றது. உங்கள் யாவருக்கும் எமது மனமார்ந்த நன்றியறிதலினை முதற்கண் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இறைபணி என்பது வெறுமனே ஆலயங்களை அமைப்பதோ அல்லது தியான மண்டபங்களை அமைப்பதோ அல்ல. மாறாக ஆலயங்களை நடத்திக் கொண்டு,  தியான மண்டபங்களைப் பராமரித்துக் கொண்டு, அறநெறி வகுப்புக்களை நடாத்திக் கொண்டு சமய நிகழ்வுகளுடன் இணைந்து பொதுமக்கள் பணியிலுந் தம்மை ஈடுபடுத்திக்கொள்வதே இறைபணியாகும்.உங்கள் சமய நிலையங்கள் இவ்வாறான சிறந்த கைங்கரியங்களில் ஈடுபட்டுவருவதுஎமது சமய சிந்தனைகளுக்கும் நடவடிக்கைகளுக்கும் மேலும் மெருகூட்டுவதாக அமைகின்றது.
கடுமையான போருக்;குப்பின் வடமாகாணம் முற்றுமுழுமையாக நிர்மூலமாக்கப்பட்ட நிலையில் மக்கள் பல்வேறு தேவைகளை உடையவர்களாகக்காணப்பட்டதை நீங்கள் யாவரும் அறிவீர்கள். தமது சொத்துக்கள், வீடு, வாசல், பொருள், பண்டம், வாகனங்கள், ஜீவனோபாய தொழில் முயற்சிகள் என அனைத்தையும் இழந்த எம் மக்கள் பலரை, எவ்வாறு கரையேற்றுவது என்று திக்குமுக்காடிக்கொண்டிருக்கும் வடமாகாணசபைக்கு இவ்வாறான உதவிகள் மற்றும் புலம்பெயர்ந்த மக்களின் உதவிகள் என்பன வலுவூட்டுகின்றன்; நம்பிக்கையைத் தருகின்றன.
கடந்த வருடங்களில் வட பகுதியில் உள்ள பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் மற்றும் பாடசாலை மாணவ மாணவியர்கள் ஆகியோருக்கு கல்விசார் உதவிகளையும் விவசாய நடவடிக்கைகளுக்கான உதவிகளையும் புரிவதற்காக கொழும்பு மயூராபதி அம்மன் ஆலய நலன்புரிச்சங்கம், மற்றும் ஜெயச்சந்திரன் நிறுவனத்தினர் இணைந்து கொண்டு பல்வேறு பெறுமதி மிக்க உதவுப்பொருட்களை நாம் கேட்டவுடனேயே உதவினார்கள். இவ்வருடமும் கிளிநொச்சியில் 500 மாணவ மாணவியர்க்கு கல்விசார்ந்த உதவி ஊதியங்கள் வழங்கியுள்ளார்கள். அவர்கள் நேரடியாக வட பகுதிக்கு விஜயம் செய்து எமது மக்களுக்கான உதவிகளை தமது கரங்களினாலேயே எம் மாணவர்களுக்கும் மற்றும் பெண் தலைமைத்துவ குடும்பத்தினருக்கும் வழங்கிச் சென்றார்கள். அவர்களுடன் இணைந்து கொண்டு கொழும்பு மத்திய லயன்ஸ் நிறுவனத்தினரும் சுமார் 50 தையல் இயந்திரங்களை எமக்கு வழங்கியிருந்தமை இங்கு குறிப்பிடற்பாலது. இவ்வாறாக எமது மக்களுக்கு எத்துணை இடர் வரினும் அவர்களை தாங்கிக் கொள்வதற்கு எமது உறவுகள் இலங்கை பூராகவும் உலகம் பூராகவும் பரந்து விரிந்து வியாபித்திருக்கின்றமை எமது கஸ்டங்கள் அனைத்தும் தற்காலிகமானவையே என எண்ண வைக்கின்றது.
பசித்தவனுக்கு ஆத்மீகம் பற்றிப் பேசுவதில் பயனில்லை என்றார் சுவாமி விவேகானந்தர். அதே நேரத்தில் எம்மைச் சுற்றி வறுமையும் இயலாமையும் தாண்டவமாடும் போது நாம் ஆத்மீகவாதிகள் என்று ஒதுங்கி இருப்பதும் உசிதமாகாது. ஆத்மீகம் என்பது அன்பு வழியது. அந்த அன்பை நடைமுறையில் நாங்கள் வெளிப்படுத்தத் தானமே சிறந்த வழி. பல ஆலயங்கள், கோயில்கள், வணக்கஸ்தலங்கள் ஆகியன தமக்குக் கிடைக்கும் பணத்தை சேமித்து வைக்கின்றார்கள். அவை வட்டி போட்டாலும் குட்டி போட்டாலும் அப் பணத்தால் மக்களுக்குக் கிடைக்கும் நன்மைகள் எதுவுமில்லை. எப்போதோ வரும் தேவைக்காகச் சுற்றியுள்ள மக்களின் தேவைகளைப் புறக்கணிக்கின்றார்கள்எமது கோயில் தர்மகர்த்தாக்கள். இது தகாத ஒரு செயல். சோழர் காலத்தில் ஆலயங்கள் கலைக் கூடங்களாகவும்,கல்விக் கூடங்களாகவும் செயல்ப்பட்டன. சமய நிறுவனங்கள், கோயில்கள் போன்றவை தமது கட்டிடங்களைப் புதுப்பித்து சுத்தமாக, சுகாதாரத்துடன் அவற்றைப் பராமரிக்கும் அதே வேளையில் மக்கள் பணியில் ஈடுபடவும் முன்வர வேண்டும்.பணமானது மக்களிடையே புழங்க இடமளிக்க வேண்டும்.
ஒருமுறை ஒரு கோயில் தர்ம கர்த்தா என்னிடம் கேட்டார். ‘எமது வைப்புக் கணக்குகளில் கைவைக்கவா சொல்கின்றீர்கள்?’என்று. நான் கூறினேன் ‘இல்லை. வைப்புக் கணக்குகளைப் பிணையமாக வைத்து வங்கியில் கடன் எடுத்து மக்கள் சேவை செய்யுங்கள். வங்கிக் கடனை மாதாந்தம் வரும் வருமானத்தில் அடைத்துவிடுங்கள். உங்கள் சேமிப்பும் மிஞ்சும். மக்கள் சேவைகளும் நடைபெறுவன’ என்றேன். மனமிருந்தால் மார்க்கம் இல்லாது போகாது. அன்பானது மனதில் வேரூன்றி விட்டதென்றால் மற்றவையெல்லாம் தாமாகவே நடைபெறுவன.
சத்திய சாயி நாதரின் அன்பும், சீரடி சாயி நாதரின் அரவணைப்புமே உங்களை இந்தப் புனித கைங்கரியத்தில் ஈடுபட வைத்துள்ளது. குருநாதரின் ஆசியிருந்தால் செய்ய முடியாதது ஒன்றில்லை. அவர்களின் ஆசியும் அன்பும் உங்கள் யாவரையும் மேலும் மேலும் மக்கள் பணியில் திளைத்திட ஆசீர்வாதம் நல்குவதாக! உங்களைப் போன்ற நிறுவனங்களுந் தனிமனிதர்களும் எமக்குத்தரும் உதவிகளைக் கொண்டே ‘உதவிப்பாலம்’ ஊடாக நாம் எம் மக்களுக்கு சேவை செய்கின்றோம். அரசாங்கம் எமக்குத்தரும் நிதி மிகச் சொற்பமே. அதற்காக நாங்கள் தலையில் கைவைத்துக் கொண்டு தள்ளியிருக்கத் தயாரில்லை. எம்மால் முடியுமானவற்றை செய்து கொண்டு போகின்றோம்.
இன்றைய இந்த நல்ல நிகழ்வில் தண்ணீர் சுத்திகரிப்பு நிலையத்தினை எமக்கு வழங்கியுதவிய ஸ்ரீ சத்திய சாயி மத்திய நிலையத் தலைவர் மற்றும் தொடர்புடைய அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளை மீண்டும் ஒருதடவை தெரிவித்து எனது உரையை நிறைவு செய்கின்றேன்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More