பொலினேசியாத் தீவுக்கு விஜயம் மேற்கொண்ட அதிபர் மக்ரோன் அங்கு பிரான்ஸ் நீண்ட காலம் நடத்திய அணு ஆயுத சோதனைகளுக்காக அங்குள்ள மக்களிடம் மன்னிப்புக் கோரவில்லை. ஆனால் அந்தச் சோதனைகளால் பொலினேசியாவிடம் பிரான்ஸ் “ஒரு கடன்”(“a debt”) பட்டுள்ளது என்று அவர் தனது உரையில் தெரிவித்துள்ளார்.
“நாங்கள் அந்தச் சோதனைகளை பிரான்ஸுக்குள்ளே(La Creuse or in Brittany) நடத்தவில்லை என்ற உண்மையை நான் உங்கள் முன் ஒப்புக் கொள்கிறேன். ஆனால் ஒன்றைத் தெளிவாகச் சொல்ல விரும்புகிறேன். அதாவது அந்த சோதனைகளை நடத்திய இராணுவத்தினர் உங்களுக்குப் பொய் கூறவில்லை.
பாதிக்கப்பட்டவர்களில் அவர்களும் உள்ளடங்கியிருந்தனர்.பொய்கள் அல்ல ஆபத்துக்களே அன்று இருந்தன.அந்த ஆபத்துகள்தான் சரியாக மதிப்பிடப்பட வில்லை..” உங்களோடு உண்மையையும் வெளிப் படைத் தன்மையையும் விரும்புகிறேன். அணுச் சோதனைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடுகள் வழங்கப்பட வேண்டியது அவசியம்” – என்றும் அவர் பொலினேசிய அதிகாரிகள் மத்தியில் குறிப்பிட்டார்.
பிரெஞ்சுப் பொலினேசியா (French Polynesia) என்று அழைக்கப்படுகின்ற சுமார் நூறு சிறு தீவுகள் உள்ளடங்கிய தேசம் பசுபிக்கில் அமைந்திருக்கிறது. அவற்றில் பெரிய தீவான தஹிட்டியில் அமைந்துள்ள பப்பீற்(Papeete) என்றநகரமே பொலினேசியாவின் தலைநகர் ஆகும். கடந்த நான்கு தினங்கள் அங்கு விஜயம் செய்த மக்ரோன்,கடைசி நாளாகிய இன்று பப்பீற் நகரில் முக்கிய உரை
யாற்றினார்.
மக்ரோனை வரவேற்பதற்காகப் பல தீவுகளிலும் இருந்து வந்த பூர்வீகமக்கள் தங்கள் பாரம்பரிய முறைப்படி அவருக்கு மலர்மாலைகளை அணிவித் ததுடன், சுமார் அறுநூறு பேர் ஒன்று கூடி
தங்கள் பண்பாட்டு நடன நிகழ்வு ஒன்றினையும் நடத்தினர்.
பொலினேசியாவின் தீவுகளில் வாழ்ந்த மக்கள் மத்தியில் அணுக்கதிரியக்கம் ஏற்படுத்திய – ஏற்படுத்தி வருகின்ற- பாதிப்புகளுக்காக பிரான்ஸ் அரசினது உத்தியோக பூர்வமான வருத்தத்தையும் மன்னிப்பையும் இந்த விஜயத்தின் போது மக்ரோன் வெளியிடுவார் என்ற தீவிர எதிர்பார்ப்பு பல தரப்புகளிடமும் காணப்பட்டது. ஆனால் அரசுத் தலைவர் வெளிப்படையாக மன்னிப்புக் கோருவ தைத் தவிர்த்து விட்டார்.
?பின்னணி என்ன?
பிரான்ஸின் ஆளுகைக்குட்பட்ட பசுபிக்தீவுக் கூட்டங்களில் 1966 முதல் 1996 வரையான சுமார் மூன்று தசாப்த காலப் பகுதியில் அணு ஆயுதச் சோதனைகள் நடத்தப்பட்டு வந்தன. பிரான்ஸ் தனது அணுவாயுதங்களைச் சோதிப்பதற்காக சுமார் 193 வெடிப்புகளை அங்கு மேற் கொண்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
தனது நாட்டுக்கான சோதனைகளை நாட்டுக்கு வெளியே கடல் கடந்து-பல்லாயிரக்கணக்கான மைல்கள் தொலைவில் – பசுபிக்கில் அமைந்துள்ள தீவுகளில் நடத்தியமை அன்று முதல் இன்று
வரை பெரும் சர்ச்சைக்குரிய விவகாரமாக இருந்து வருகிறது.
ஆரம்பத்தில் தரைக்கு மேலே செய்யப்பட்ட சோதனைகள் கதிரியக்கத் தாக்கம்சூழலில் ஏற்படுத்திய பாதிப்புகளால் எழுந்த கடும் கண்டனங்களை அடுத்து 1976 ஆம் ஆண்டின் பின்னர் நிலத்தடியில் நடத்தப்பட்டன.
ஜப்பானின் ஹீரோஷீமா – நாஹாசாக்கி நகரங்கள் மீது அமெரிக்கா வீசிய அணுகுண்டுகளைப் போன்று நூறு மடங்குஅதிக வலுக் கொண்ட குண்டுகளைப் பிரான்ஸ் பொலினேசியாவில் பரிசோதித்தது என்று தகவல்கள் உள்ளன.
அணுவாயுத சோதனைகள் நடந்த சிலஆண்டுகளுக்குள் அங்கு வசிக்கின்ற பூர்வீக மக்கள் மத்தியில் புற்றுநோய் போன்ற பல கதிரியக்க நோய்த் தாக்கங்கள் ஏற்பட்டன. சுற்றுச் சூழலிலும் உயிரினங்களிலும் கூடப் பாதிப்புகள் அவதானிக்கப்பட்டன.
சோதனைகள் நடத்தப்பட்ட சமயத்தில் சூழலில் அவற்றின் தாக்கங்கள் தொடர் பாக பிரான்ஸ் அரசு வெளியிட்டிருந்த மதிப்பீட்டு அறிக்கைகளில் காட்டப்பட்டவீதத்தை விடவும் அதிகமான கதிர்வீச்சு
சூழலில் பரவியிருந்ததைப் பின்னர் நடத்தப்பட்ட சில ஆய்வுகள் வெளிக் கொணர்ந்தன. பிரெஞ்சு இராணுவத்தின் பழைய ஆவணங்கள் பலவற்றை ஆய்வு செய்த நிபுணர்கள் அணுச் சோதனைகள் நடந்த சமயம் தீவுகளில் வாழ்ந்த சனத்தொகையினர் (110,000) முழுமையாகப் பாதிக்கப்படும் அளவுக்கு கதிர்வீச்சின் தாக்கம் இருந்ததைக் கண்டறிந்தனர்.
பொலினேசியா அரசியல் இயக்கங்களும் அங்குள்ள மக்கள் அமைப்புகளும் அணுச் சோதனைகள் தங்களுக்கு ஏற்படுத்திய உடனடியான மற்றும் நீண்டகாலப் பாதிப்புகளுக்காக நீதி கோரிப் போராடிவருகின்றன. பிரான்ஸ் நடத்திய 193 சோதனைகளினதும் பாதிப்புக்கு இழப்பீடாக ஒரு பில்லி
யன் டொலர்கள் நஷஈட்டுத் தொகையை தரவேண்டும் என்று பொலினேசியா நாடாளுமன்றம் ஒருதடவை தீர்மானம் நிறைவேற்றியது.
தனது பாதுகாப்புக்கான அணு ஆயுத சோதனைகளை நடத்தியதன் மூலம் பொலினேசியா மக்களுக்கு இழைத்த சேதங்களுக்காக பிரான்ஸிடம் இருந்து உத்தியோகபூர்வமான மன்னிப்பை அங்குள்ளவர்கள் மிக நீண்டகாலமாக எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். பிரான்ஸ் தனது செயலுக்காக மன்னிப்பு கோர வேண்டும் என்று உலகளாவிய அணுவாயுத எதிர்ப்பு இயக்கங்களும் குரல் கொடுத்து வருகின்றன.
நீண்டகாலமாக இழுபடும் இந்த விவகா ரம் பிரான்ஸுடனான பொலினேசியாவின் உறவுகளில் பெரும் விரிசலை ஏற்படுத்தி வந்துள்ளது. இத்தகைய ஒரு பின்புலத்திலேயே அதிபர் மக்ரோன் அங்கு தனது முதலாவது விஜயத்தை மேற்கொண்டார். பாதிப்புகளுக்காகப் பரந்த அளவில்- பெரும் எண்ணிக்கையானோருக்கு நஷ்ட ஈடுகளை வழங்க வேண்டி வரும் என்பதாலேயே உத்தியோக பூர்வமானமன்னிப்புக் கோரலைப் பிரான்ஸில் ஆட்சியில் இருந்த அரசுகள் தவிர்த்து வந்தன என்று குற்றச்சாட்டுக்கள் கூறப்படுகின்றன.
இதேவேளை – பொலினேசியா தீவுக் கூட்டங்கள் கால நிலை மாறுதல்களாலும் பெரும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்றன. கடல் நீர் மட்டம் அதிகரிப்பதால் சிறிய தீவுகள்
நீரில் மூழ்கும் ஆபத்தின் விளிம்பில் உள்ளன.
- பாரிஸிலிருந்து குமாரதாஸன்
28-07-2021
5