இன்று முதல் கொவிட் தொற்றாளா்களுக்கு வீடுகளில் வைத்தே சிகிச்சை மேற்கொள்வதற்கான நடைமுறை ஆரம்பமாகிறது. முதற் கட்டமாக மேல் மாகாணத்தில் மட்டுமே நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த இந்த முறை இன்று முதல் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன் அடிப்படையில் 2 முதல் 65 வயதிற்குட்பட்டவர்களுக்கு தென்படும் அறிகுறிகளுக்கமைய மருத்துவ மேற்பார்வையின் கீழ் வீட்டில் வைத்து சிகிச்சை வழங்கப்படும் எனத் தொிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் கொவிட் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாலும், வைத்தியசாலைகளில் கூட்டம் அதிகமாக இருப்பதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மருத்துவ அதிகாரிகளால் வழங்கப்படும் சுகாதார வழிகாட்டுதல்களின் கீழ் நோயாளர்களுக்கு வீட்டில் சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் செய்யப்படுவதாகவும், தொலைபேசி மூலம் பதிவு செய்த பின்னா் நோயாளர்கள் மருத்துவ அதிகாரிகளின் மேற்பார்வையில் வைக்கப்படுவார் எனவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.