குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
மக்கள் பாத யாத்திரை செய்து வரும் நிலையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ வாகன சவாரி செய்வதாக ஜே.வி.பி.யின் மத்திய செயற்குழு உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
ஆட்சியில் இருக்கும் போது லம்போகினி கார்களைக் கொண்டு தலதா மாளிகைக்கு எதிரில் கார் பந்தயங்களை நடத்திய மஹிந்த தற்போது ஆட்சி மாற்றித் தருமாறு தலதா மாளிகையில் வழிபாடு செய்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த பாத யாத்திரையின் ஊடாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை இரண்டாக பிளவடையச் செய்ய மஹிந்த முயற்சிக்கின்றார் என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த முயற்சிக:கு விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில போன்றவர்கள் ஒத்துழைப்பு வழங்கி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்ஸ ஆட்சி அமைக்க முயற்சிப்பது நாட்டு மக்கள் மீதான நேசத்தினால் அல்ல எனவும் அதிகார மோகத்தினாலேயாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நல்லாட்சியை ஏற்படுத்துமாறு மக்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நியமித்த போதிலும் அவரை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவே வழிநடத்தி வருகின்றார் என அவர் தெரிவித்துள்ளார்.
சுதந்திரக் கட்சி பிளவடைந்தால் அதன் நன்மைகளை ரணில் விக்ரமசிங்கவே பெற்றுக்கொள்வார் என அவர் தெரிவித்துள்ளார்.