வைரஸினை நம் வாழ்வில் இனி முழுவதுமாக தவிர்க்க முடியாது. ஆனால் அதன் தாக்கத்தினை குறைக்கலாம்!
கொரோனா வைரஸ் இனி வெவ்வேறு வடிவங்களில் நம்மோடு வாழவுள்ளது! அதன் நகர்வுகளை, இயல்புகளை கவனித்து வரும் மருத்துவ நிபுணர்கள் அதன் கடந்த காலத் தன்மைகள், நிகழ்கால உருமாற்றங்களை அவதானித்து நாம் எப்படி வாழ வேண்டும் என அறிவுறுத்துகிறார்கள்..!
1980களில் ஒரு பிரித்தானிய வைத்தியசாலையில், மருத்துவ ஆய்வுக்காக அங்குள்ள மருத்துவர்கள் கொரோனா வைரஸை ஏற்றினர். அக்காலத்தில் கோவிட்- 19 உருவாகவில்லை. அந்த மருத்துவ ஆய்வின் கருப்பொருள், கோவிட்-19 இன் குடும்பத்தைச் சேர்ந்த 229 E என்னும் சாதாரண சலதோசத்தை உருவாக்கும் வைரஸ். 229E நம்மிடையே பொதுவாகவுள்ள ஒரு வைரஸ். ஆனாலும், அதைபற்றிய தகவல் நம்மிடம் முழுமையாக இல்லை. நாம் அனைவருக்கும் இந்த வைரஸின் தாக்குதல் வாழ்வில் நடந்துள்ளது. குறிப்பாக சிறுவயதில் ஏற்பட்டுள்ளது. ஆனால் இது சாதாரணமாக இருந்ததனால் பெரிதாக கவனம் செலுத்த வில்லை. 229E ஏற்றப்பட்ட அந்த 15 நபர்களுள் 10 நபர்களுக்கு மட்டுமே சலதோசம் வந்தது. அதிலும் 8 பேருக்கு மட்டுமே சலதோசத்தின் அறிகுறிகள் தெரிந்தன.
அடுத்த வருடம் மீண்டும் ஆய்வு செய்தனர். அதே 15 நபர்களுள் 14 பேரை திரும்ப வரவைத்து மீண்டும் அவர்களுக்கு 229 E இனை ஏற்றினர். இம்முறை ஆறு பேருக்கு மீண்டும் சலதோசம் வந்தது. இம்முறை அவர்களுக்கு நோய் அறிகுறிகள் தென்படவில்லை. இதிலிருந்து மருத்துவர்கள் உணர்ந்தது,கொரோனா வைரஸால் நம் உடலின் எதிர்ப்பு சக்தி குன்றுகிறது என்றும், மீண்டும் அதன் தாக்கம் வரக்கூடிய சாத்தியப்பாடு அதிகம் என்றும், அப்படி வரும் மீள்தாக்கம் வேகமாகவும், அதே சமயம் பெரிதாக எந்த அறிகுறிகளும் இல்லாமல் வந்து போய்விடும் என்பதாகும். 229E நம் அனைவரையும் நம் வாழ்வில் பல முறை தாக்கியுள்ளது.
இந்தச் சிறிய ஆய்வு அந்த காலத்தில் பெரிதாக கவனம் பெறவில்லை. வைரஸ் சார் ஆய்வுகளுள் கொரோனா பற்றிய ஆய்வு 80களிலும் 90 களிலும் முக்கியத்துவமாக இல்லை. இதற்கு முக்கியக் காரணம், இது சாதாரண ஜலதோசமாக பார்க்கப்பட்டது. 2020ஆம் ஆண்டு தொடக்கத்தில் ‘புதிய’ கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி உருவாக்கும் ஆய்வினை மிக அவசரமாக மேற்கொண்ட அறிஞர்கள் இந்த ஆய்வினை மீண்டும் கண்டெடுத்தனர். சார்ஸ்-கோவ்-2 என்னும் கொரோனாவை உருவாக்கும் வைரஸின் வருகைக்கு முன் 229E உட்பட நான்கு கொரோனா வைரஸ்கள் நம்மிடையே இருந்தன. இவை நான்கும் சாதாரணசலதோசம் உருவாக்கும் வைரஸாகவே இருந்தன. நான் அறிந்த சில அறிவியல் அறிஞர்களின் கூற்றின்படி இந்த கொரோனா வைரஸும் மற்றவை போலவே சாதாரண ஜலதோசம் உருவாக்கும் வைரஸாகவே காலப்போக்கில் மாறும். இந்த கூற்றின் படி கோவிட்-19ம் 229 E போலவே மீண்டும், மீண்டும் தாக்கினாலும் சிறிய தாக்கம் மட்டுமே விளைவிக்கும் !
டெல்டா வைரஸ் பரவித் தீவிர சிகிச்சை மையங்கள் நிரம்பி வழியும் இச்சூழலில் இந்த எதிர்கால காட்சியைக் கற்பனை செய்வது சிறிது கடினமானது தான். ஆனால், இந்த பெருந்தொற்று ஒரு கட்டத்தில் ஏதோ ஒரு வழியாக முடியும். இக்காலத்தில் கொரோனாவினால் ஏற்படும் இறப்புகளுக்கு மூல காரணம், இது எதிர்ப்பு சக்தி இல்லாத உடல்களை பாதிப்பதே ஆகும். பெருந்தொற்றின் விரைவுப் பரவலினாலும் , தடுப்பூசிகளினாலும் இந்த நோயிலிருந்து பாதுகாக்கும் எதிர்ப்பு சக்தியுடைய உடல்களின் என்ணிக்கை கூடக்கூட, இந்த கொரொனா வைரஸ் நோய் பரவும் எல்லை குறுகும்.நோய் அறவே இல்லாமல் போகாது. ஆனால் நமது வாழ்வில் பெரிய அளவில் இடையூறுகள் ஏற்படுத்தாது.நோய்த் தொற்றுள்ளோரின் எண்ணிக்கை அவ்வப்போது அதிகரித்தும், குன்றியும் காணப்படும். ஆனால் மிகக் கொடுமையான விளைவுகள் தவிர்க்கப்படும்.
முந்தைய காலத்தில் இருந்த 4 வகை கொரோனா வைரஸ் எப்படி தொடங்கின என்பது பற்றிய தகவல் நம்மிடம் முழுமையாகவும், நம்பகமாகவும் இல்லை. ஆனால், இவற்றில் ஒன்று பெருந்தொற்றாகியது என்று கூறப்படுகிறது. பிற கொரோனா வைரஸ் போலவே இந்த வைரஸும் இருக்குமேயானால், இதனால் பரவும் நோய் மீண்டும், மீண்டும் உருவாகி, அதிலிருந்து பாதுகாக்கும் எதிர்ப்பு சக்தியும் கூடிக்கொண்டே வரும். அடுத்தடுத்த தொற்றுகள் பெரிதும் பாதிப்பு உருவாக்காதவையாக அமையும். அதனால் நாம் பிற கோவிட் வைரஸை போலவே, கோவிட்- 19ஐ கருத வேண்டும்.
ஒரு கொரோனா வைரஸானது நிரந்தரமாக தவிர்க்ககூடியது அல்ல. ஏதோ ஒரு கட்டத்தில் எல்லோருக்கும் தொற்றும் என்பதே யதார்த்தம். தொற்றும் நோய்கள் குறித்து சேயின்ட் ஜூட் நிறுவனத்தில் ஆய்வு செய்யும் ரிச்சர்ட் வெபி கூறியதாவது, “தொற்றுடன் நாம் வாழப் பழக வேண்டும். பொதுச்சுகாதார கட்டுமானத்தை முழுமையாக பாதிக்காத வரைக்கும், நம்மால் இதனுடன் வாழ முடியும்.” கொரோனா வைரஸ் நமது உடலின் எதிர்ப்பு சக்திக்கும், நமது சமூகத்துக்கும் புதியதொரு வைரஸாக தொடர்ந்து நிலைத்திருக்காது.
பரவலாகும் பெருந் தொற்று என்பதிலிருந்து, குறும்பகுதியில் பரவும் தொற்று நோயாக கோவிட்-19 வைரஸ் மாறுவதே நமது இலக்கு. ஆனால், அந்த இலக்கினை அடைவதற்கான வழி தெளிவாக இல்லை. இந்த வழியானது தெளிவாக இல்லாததற்கு ஒரு காரணம், இந்த பாதை நம் கையில் உள்ளது என்பதுதான். எட் யொங் கூறியுள்ளது போல, எதோ ஒரு கட்டத்தில் இந்த கொரோனா வைரஸ் சிறிய தாக்கம் தரும் தொற்று நோயாக மாறும் என்பதற்காக, நாம் பாதுகாப்பு சார் செயற்பாடுகளை உதாசீனமாக கருதக் கூடாது. எந்த அளவு இப்பொழுது தொற்றினை குறைக்கின்றோமோ அந்த அளவு பொது சுகாதாரக் கட்டமைப்பின் பாரம் குறையும். அதோடு இதுவரை தடுப்பூசி பெறாதோருக்கு தடுப்பூசி இடுவதற்கான காலம் நமக்கு கூடுதலாக கிடைக்கும். தொற்றினை தவிர்க்காமல், பலரும் தொற்றிற்குள்ளாவதனால் நாம் இந்த இலக்கினை அடையக் கூடும். ஆனால், இந்த பாதையில் மிகுந்த உயிரிழப்பு ஏற்படும்.
குறும்பகுதி பரப்பு நோயாக கோவிட்-19 மாறுவதில் வைரஸினுள் ஏற்படும் வடிவ மாற்றங்களும் தாக்கம் செலுத்தும். ஆனால், இந்த வைரஸ் எவ்வளவுதான் மாறினாலும் நமது எதிர்ப்புசக்தியை முழுமையாக இல்லாமல் செய்யும் அளவிற்கு அது வளராது. இது ஒரு நற்செய்தி. சிகாகோ பல்கலைகழகத்தில் உள்ள பரிணாம உயிரியல் ஆய்வாளரான சாரா கோபி, “நமது எதிர்ப்பு சக்தி சார் செயற்பாடுகள் மிகவும் நுணுக்கமானவை. அதில் இருந்து முழுமையாக தப்புவது வைரஸுக்கு சாத்தியமல்ல” உதாரணத்திற்கு சார்ஸ் கோவ்-2விற்கு எதிரான பிறபொருள் எதிரி (antibodies) காலப்போக்கில் குறைவடைந்தாலும், அந்த வைரஸினை அடையாளங்காணக்கூடிய B மற்றும் T உயிரணுக்கள் நமது உடலில் தங்கி எதிர்ப்பினை உருவாக்கும். எதிர்ப்பு சக்தி குறைந்தாலும், தீவிர நோயோ, மரணமோ ஏற்படாமல் காக்கும்!
இப்படியான நோயின் தீவிரம் மற்றும் மரணத்திலிருந்து பாதுகாப்பதே தடுப்பூசிகளின் ஆரம்ப கால இலக்காக இருந்தது. சென்ற வருடம் தடுப்பூசி ஆய்வு செய்த விஞ்ஞானிகள் அனைவரும், ”பெரிய எதிர்பார்ப்புகள் ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள்” என்று கூறினர். ”மூச்சு உறுப்புக்களை பாதிக்கும் வைரஸ்களுக்கான தடுப்பூசிகள் தொற்றிலிருந்து முழுமையான பாதுகாப்பு அளிக்காது’‘ என அவர்கள் தெளிவாகக் கூறினர். இவ்வாறான தடுப்பூசிகள் நுரையீரலுக்குப் பாதுகாப்பு அளிக்குமே ஒழிய, மூக்கு பகுதியில்அளிக்காது. ஆனால், ஜான்ஹாப்கின்ஸ்பல்கலைக்கழகத்தின் நோய் எதிர்ப்பு சார் ஆய்வு மையத்தை சேர்ந்த ரூத் கார்ரோனின் கருத்தின்படி, தொடக்க காலத்தில் ‘அதிகப்பயன் தரும் தன்மை உடையது’ என்று சித்தரிக்கப்பட்டதனால், இந்தத் தடுப்பூசிகள் பற்றிய எதிர்பார்ப்புக்கள் வளர்ந்தன. ஃபைஸர் மற்றும் மொடெர்னா தடுப்பூசிகள் 95% பலன் தருபவை என்று கூறப்பட்டன!
ஆனால், கூடிய சீக்கிரமே மாற்றமடைந்த வைரஸால் – பீடா, காமா, மற்றும் இப்பொழுதுள்ள டெல்டாஆகியவை புதிதாக கிளம்பின. இவை, அனைத்தும் தடுப்பூசிகளின் பாதுகாப்பினை குறைத்தன. ஒரு வருடத்திற்கு முன் வரும் எனஎதிர்பார்த்த நிலைமையை நாம் இப்பொழுது தான் அடைந்துள்ளோம். தடுப்பூசிகள் தீவிர நோயிலிருந்து பாதுகாக்கின்றன. ஆனால், ஒட்டுமொத்த சமூகத்திற்கான தடுப்பு சக்தி இன்னும் சவாலாகவே உள்ளது. வைரஸ் நம்மிடையே இருந்தாலும், அதனால் தீவிர நோயிற்குள்ளாக்கப்படுவோர் மற்றும் இறப்போரின் எண்ணிக்கை குறையும். தடுப்பூசிக்கு பிறகும் தொற்றுக்குள்ளான அமெரிக்காவின் மாசசூசெட்சில் உள்ள ப்ரொவின்ஸ் டவுனில் இத்தகைய நிலைமையே தென்படுகின்றது. அதேபோல, அதிக தடுப்பூசிகள் பெற்றுள்ள சமூகங்களான இங்கிலாந்து, ஐஸ்லாந்து மற்றும் இஸ்ரேல் போன்ற நாடுகளில் நோய் தொற்றுக் கூடினாலும், தடுப்பூசிக்கு முன் ஏற்பட்ட மரணங்களுடன் ஒப்பிடுகையில் குறைந்த அளவே இப்பொழுது ஏற்பட்டு வருகின்றது.
குறும்பகுதி பரவல் நோயாக கோவிட்-19 மாறிய பிறகு, தொற்றின் தீவிரமும், குறிப்பிட்ட பகுதியில் புதுவடிவ வைரஸின் தாக்கமும் நமது எதிர்ப்பு சக்தியின் பாதுகாப்புதன்மை குன்றுவதற்கு எடுக்கும் காலத்தை பொறுத்துள்ளது. அது ஸார்ஸ் கோவ்-2 அடிப்படை வைரஸுக்கு எதிரான நமது எதிர்ப்பு சக்தி குன்றும் காலத்தை பொருத்தும், வைரஸ் தன்னை மாற்றி அமைக்க எடுக்கும் காலம் பொறுத்தும் அமையும். பழைய எதிரியிடம் போரிட நமது உடலின் எதிர்ப்பு சக்தியை ஊக்குவிப்பது கடினம். ஆனால், புது எதிரியினால் நிகழும் தாக்குதல்களுக்கு எதிராக உடலின் எதிர்ப்பு சக்தி இலகுவாக ஊக்குவிக்கப்படும். பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த எதிர்ப்பு சக்தி நிபுணர் லோரா சூ கூறியது, “புது வடிவ வைரஸின் முதல் தாக்கமானது தடுப்பூசிக்கு கொடுக்கும் ஊக்க ஊசி (Booster) போன்ற தன்மையை உடலுக்கு அளிக்கும்.” உதாரணமாக, சலதோசம் உருவாக்கும் 22Eஉ வைரஸ் தொடர்பாக செய்த ஆய்வினில், முதலாண்டில் தொற்றுக்குள்ளாகாதோர், அடுத்த வருட ஆய்வினில் தொற்றுக்குள்ளாகிய வீதம் அதிகமாக அமைந்தது. கடந்த வருடம் உருவான எதிர்ப்புசக்தியே முதல் ஆண்டில் தொற்றுக்குள்ளானவரை பாதுகாத்தது.
அதிகளவு மக்கள்தொகை தடுப்பூசி மற்றும் நோய்தொற்றின் காரணமாக எதிர்ப்பு சக்தியை வளர்க்க வளர்க்க, வைரஸ் தன்னைத்தானே மாற்றியமைத்து, இந்த எதிர்ப்புசக்தியினிடையே ஊடுருவி தாக்கமுயற்சி செய்யும். இது வைரஸுடன் வாழ்தலின் இயல்பான விளைவாகும்.வருடாவருடம் வரும் தாக்கம் உருவாக்கும் வைரஸும், முந்தைய வருடம் உருவான, உடலின் எதிர்ப்புசக்தியை தாண்டி தொற்று உருவாக்கத் தன்னைத் தானே மாற்றியமைக்கும். ஆனால், பலருக்கு எதிர்ப்புசக்தி இருப்பதனால் அதிக அளவிலான மக்களை இந்த வைரஸ் தாக்காது.
அதோடு, தாக்கப்பட்டவர் உடலில் இருந்துகொண்டு தம் உருவத்தை மாற்றியமைக்கவும் முடியாது. கோபி கூறுகிறார், “எந்தளவு ஸார்ஸ் கோவ்.-2 எனப்படும் அடிப்படை வைரஸ் உலகில் உள்ளதோ, அந்தளவு அதன் உருமாற்றத் தன்மைக்கான காலம் குறையும்”. அதாவது வைரஸின் உருமாற்றம் என்பதனை லாட்டரி டிக்கெட் போல கற்பனை செய்வோம். பல மாற்றங்கள் நடந்தாலும், அதில் ஒரு சில மட்டுமே தொற்றினை பெரிதாக்கும். இருக்கும் லாட்டரி டிக்கெட் எண்ணிக்கையை குறைத்தால், தொற்று பெரிதடைய செய்யும் சாத்தியப்பாடு குறையும். உயிர் மற்றும் உடல் சேதம் உருவாக்கும் வைரஸின் புதிய வடிவங்கள் உருவாகும் நேரம் அதிகரிக்கும். இதனால் அதிலிருந்து நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள நமக்கு நேரம் கிடைக்கும்.
இதுவரை நாம் அறிந்தவற்றை ஒன்றிணைத்துப் பார்த்தால், ஒரு தெளிவு உருவாகிறது. நான்கு வகை கொரோனா வைரஸும் நமது எதிர்ப்புசக்தி குன்றல் மற்றும் வைரஸ் உருமாற்றம் ஆகியவற்றால் தொடர்ந்து நம்மை தாக்குகின்றன. இதிலிருந்து நாம் அறிவதாவது: இந்த 4 வைரஸில் ஒன்றேனும் நமக்கு சிறுவயதிலேயே தொற்றியிருக்கும். ஆனால், அதிக தாக்கம் செலுத்தியிருக்காது. இந்த தொற்றினால் உருவான எதிர்ப்புச் சக்தி நம்முள் காலப்போக்கில் குன்றும். வைரஸும் காலப்போக்கில் உருமாறும். மீண்டும் தொற்று உண்டாகும். மீண்டும் நமது எதிர்ப்புச் சக்தி குன்றும். மீண்டும் நோய் நம்மை தாக்கும். இப்படியே இந்த சுழற்சி தொடரும்.
வைரஸ் இந்த படிவத்தின்படியே நகரும் என்று அறிஞர்கள் நம்புகிறார்கள். கொலம்பியா பல்கலைகழக நோய்க்கிருமி ஆய்வுவிஞ்ஞானி ஸ்டீபன் மோர்ஸ் கூறுவதாவது: “நோயின் தாக்கம் பெரிதாக இல்லையென்றால், நாம் அதனை பெரிதாக பொருட்படுத்துவதில்லை.” சாதாரண சலதோசம்கூட சிலரை மரணிக்கச் செய்யும். தடுமன் வைரைஸ் தொற்று,முதியோர் விடுதிகளில் வந்துள்ளது. வருடாவருடம் அமெரிக்காவில் 12,000-61,000 மக்களை கொல்லும் ஃப்ளு நோய் போலவும் கோவிட்-19 மாறலாம். ஆனால், கோவிட் தாக்கத்தை இறப்பினால் மட்டும் கணக்கிடக் கூடாது. நீண்ட கோவிட் நோயிலிருந்து தடுப்பூசிகள் எந்தளவு பாதுகாப்பு அளிக்கின்றன என்பது பற்றி நமக்கு போதிய அளவு ஆய்வுசார் தகவல் இல்லை. ஆனால், பெரும்பாலான விஞ்ஞானிகளின் கூற்றின்படி உடலில் எதிர்ப்பு சக்தி இருந்தால் பாதிப்புகள் தவிர்த்து வைரஸை எதிர்க்க முடியும்.
குறும் பகுதி தொற்று நோயாக கோவிட்-19 மாறுவது ஒரு உளவியல் ரீதியான மாற்றத்தையும் அவசியப்படுத்தும். அனைவருக்கும் ஓரளவு எதிர்ப்புசக்தியுள்ளசூழலில், ஒருவருக்கு கோவிட்-19 நோய் உள்ளது என்பது ஒரு சாதாரண விடயமாக மாறும். அது நற்செய்தி அல்ல.
ஆனால், அதே சமயம் அளவிற்கதிகமான அச்சுறுத்தலோ அல்லது சமூக அளவிலான அவமானத்தையோ உண்டாக்க கூடியதாக இதை கருத வேண்டியதில்லை. இந்த பயமும், சமூக அளவில் ஒருவரையொருவர் உளரீதியாக ஒதுக்கும் பழக்கங்கள் இல்லாமல் செய்ய வேண்டும். ”இது சாதாரண நோய் அல்ல” என்னும் அச்சுறுத்தலை மாற்ற வேண்டும். அமெரிக்காவில் போன வருடம், ”முகக்கவசம் தேவையில்லை’’ என்று சொல்லபட்ட பொழுது மக்கள்மத்தியில் பீதி உண்டானது. ஆக,, இந்த உளவியல் மாற்றம் சிக்கலான ஒன்றே என்பது தெளிவானது.
சிலருக்கு இந்த தெளிவு வேகமாக உருவாகிறது. மற்றவர்களுக்கு இது மிகத் தாமதமாக உருவாகிறது. “நோயின் தாக்கத்தை எதிர்கொள்ளும் மனப்பான்மையில் ஒருவருக்கொருவர் வேறுபட்டுள்ள சூழலில், பரஸ்பர புரிதல் சிக்கலானதாகவே உள்ளது” என்று கார்னெகி மெலன் பல்கலைகழகத்தில் உளவியல் அறிஞரான ஜூலீ டவுன்ஸ் கூறுகிறார்.
ஃப்ளு நோயின் அபாயத்தை எதிர்கொள்ளும் வழி பற்றி, ஒரு பொதுவான புரிதலுக்கு நாம் அனைவரும் வந்துள்ளோம். ஆனால் கோவிட்-19ஐ பொருத்த வரை அந்த பொதுப் புரிதலோ, ஒத்த கருத்தோ இன்னும் நம்மிடையே உருவாக வில்லை. இப்பொழுது உள்ளதைவிட, காலப்போக்கில், டெல்டா நம்மிடையே இருந்தாலும், தொற்றிற்கான அபாயம் குறைந்து கொண்டு வரும். ஆனால், வைரஸ் முழுமையாக போகாது. டவுன்ஸ் கூறுகிறார், “முழுமையாக போகாதென்றாலும், நாம் சமூகமாக, இலகுவாகத் தாங்கக் கூடிய அளவிற்கு இந்த வைரஸின் தாக்கம் மாறும் என்பதை மக்களுக்கு வலியுறுத்துதல் அவசியம்”. இன்னும் நல்ல தடுப்பூசிகளும், வைத்திய முறைகளும் கோவிட்டின் பாதிப்பை மேலும் குறைக்கும்.
இந்த அனுபவத்தின் விளைவாக எந்தவொரு மூச்சுறுப்பு சார் வைரஸ் தொற்றினையும் நாம் சற்று எச்சரிக்கையாக அணுக பழகுவோம் . முகக்கவசம் அவசியம்! மூச்சுப் பயிற்சிகளில் அதிக கவனம் செலுத்துவோம். குறும் பகுதி தொற்றாக கோவிட் 19 மாறியதும், அதனுடன் நாம் வாழ்வதற்கு புதிய வழிமுறைகளை கண்டுபிடிப்பது அவசியம். முதலில், அது சற்று வினோதமாகத்தான் இருக்கும். காலப்போக்கில் அதுவே யதார்த்தமாக மாறும்.
ஆங்கில மூலம் சாரா சாங்க்
தமிழ் வடிவம், பொன்னி அரசு
ஆங்கில மூலத்தை வாசிக்க..,
https;//www.theatlantic.com/science/archive/2021/08/how-we-live-coronavirus-forever/619783