சுன்னாகம் தண்ணீரில் கழிவு எண்ணெய் பரப்பிய காரணம் தெளிவுபடுத்தப்படாத நிலையில் வடமாகாணசபை மக்களை ஏமாற்றும் அறிக்கையை வெளியிட்டு மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில் தெல்லிப்பழை பொதுச்சுகாதார பரிசோதகர் இராஜமேனகனால் பொதுமக்கள் நலன் சார்ந்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் 2016 மே 3 ஆம் திகதி பிறப்பித்த கட்டளை இங்கு பிரசுரமாகின்றது.
நீதிவான் நீதிமன்றம், மல்லாகம்
மாண்புமிகு நீதிவான் அ. யூட்சன் அவர்கள் முன்னிலையில்
வழக்கு இலக்கம் AR/1471/14
03.05.2016
கட்டளை
மல்லாகம் மற்றும் தெல்லிப்பளை பொதுச் சுகாதார பரிசோதகரால் நீதிமன்ற வளாகத்தில் காணப்படுகின்ற கிணறுகளில் நீருடன் ஓயில் கலந்துள்ளதை அவதானித்த நீதிமன்ற பதிவாளரினால் பொது சுகாதார பரிசோதகர்களுக்கு இவ்விடயம் தெரியப்படுத்தப்பட்டு அவர்களால் நீதிமன்ற வளாகத்தில் உள்ள கிணறுகளில் இருந்து மாதிரிகள் எடுக்கப்பட்டு இது தொடர்பிலான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு இந்த வழக்குத் தாக்கல் செய்யப்படுகின்றது.
இந்த வழக்கில் தொடர்ச்சியாக பல்வேறுபட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த நீதிமன்ற நியாயாதிக்கத்துக்குள் அமைந்த பிரதேசங்களில் உள்ள கிணறுகளில் கழிவு ஓயில், கிறீஸ் என்பன கலந்துள்ள விடயம் தொடர்பில் நீதிமன்ற அனுமதியைப் பெற்று சில அறிக்கைகளும் நீதிமன்ற அனுமதி பெறப்படாமல் பல்வேறுபட்ட தரப்பாலும் அறிக்கைகள் பெறப்பட்டு சில நீதிமன்ற வழக்கேட்டிலும், ஏனையவை பல்வேறு ஊடகங்களிலும் பிரசுரிக்கப்பட்டு வருகின்றன. அவை ஒன்றுக்கொன்று முரணானவையாகக் காணப்படுகின்றன. அதில் சில அறிக்கைகளின் நம்பகத்தன்மை குறித்து பல்வேறுபட்ட விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. ஆனால் இந்த அறிக்கைகள் எதுவும் குறிக்கப்பட்ட பிரதேசங்களில் உள்ள கிணறுகளில் காணப்படுகின்ற நீரை மக்கள் அருந்தலாமா? அருந்தக்கூடாதா? என்ற விடயம் தொடர்பில் தெளிவான ஒரு முடிவை எந்த அறிக்கைகளும் வழங்கவில்லை. அத்தோடு எந்த ஒரு அறிக்கையும் முழுமையான அறிக்கையாகவும் காணப்படவில்லை. பல்வேறுபட்ட அறிக்கைகள் பெறப்பட்டிருந்தாலும் இதுவரை இந்த கழிவு ஓயில் மற்றும் கிறீஸ் என்பன எங்கு இருந்து வந்து நீரில் கலந்துள்ளது என்பதோ? இவை எந்த நிறுவனங்களில் கழிவு அகற்றல் செயற்பாட்டில் காணப்பட்ட குறைபாடுகளின் காரணமாக இது நிலத்தடி நீரில் சேர்ந்துள்ளது என்பதை எந்தவிதமான அறிக்கைகளிலும் இதுவரை தெளிவுபடுத்தப்படவில்லை. ஆனால் பெரும்பாலான அறிக்கைகளில் நொதேண் பவர் மின்உற்பத்தி நிலையத்தினை அண்டிய பகுதிகளில் இருந்து ஓயில் மற்றும் கிறீஸ் என்ப நிலத்தடி நீரில் சேர்ந்திருக்க வாய்பு உள்ளதாக தெரிவிக்கின்றன. இந்த ஓயில் கலப்பானது எங்கு இருந்து அல்லது எந்த மூலத்தில் இருந்து நிலத்தடி நீரில் கலந்துள்ளது என்பதைக் கண்டறிய வேண்டியது மிகமுக்கியமான விடயமாகும்.
வடமாகாண சபையின் அமைச்சர் ஒருவருக்கு மன்றினால் அழைப்புக்கட்டளை விடுக்கப்பட்டு அவரிடம் சில விளக்கங்கள் கோரப்பட்ட பொழுது தான் தனிப்பட்ட முறையில் எந்த அறிக்கைகளையும் தயாரிக்கவில்லை என்றும், வடமாகாணசபையின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக தன்னால் அறிக்கைகள் பெறப்பட்டது என்றும், வடமாகாணசபையானது நிலத்தடி நீரில் கிறீஸ் மற்றும் ஓயில் கலந்த விடயத்தில் இந்த ஓயில் எவ்வாறு நிலத்தடி நீரில் கலந்துள்ளது என்பது தொடர்பில் ஆய்வு செய்வதற்காக ஏற்கனவே யாழ்ப்பாண மேல்நீதிமன்றப் பதிவாளருக்கு வடமாகாணசபையின் அவைத்தலைவரால் அனுப்பப்பட்ட கடிதம் ஒன்றில் நிலத்தடி நீரில் எங்கு இருந்து ஓயில் மற்றும் கிறீஸ் கலந்துள்ளது என்பது அறியப்பட வேண்டியது மிகவும் முக்கியமான ஒரு விடயமாகும். எனவே இன்று வடமாகாணசபையின் பிரதம செயலாளருக்கு மன்று பின்வருமாறு கட்டளை ஆக்குகின்றது.
குறித்த நிலத்தடி நீரில் ஓயில் மற்றும் கிறீஸ் கலந்த விடயமானது எவ்வாறு ஏற்பட்டுள்ளது என்பது தொடர்பில் றேடர் பரிசோதனைகளோ அல்லது அதைவிட மேம்பட்ட வேறு ஏதாவது பரிசோதனைகள் மூலமோ இந்த கலப்பு எவ்வாறு ஏற்பட்டுள்ளது என்பதைக் கண்டறிந்து அறிக்கையை மன்றில் தாக்கல் செய்யுமாறும் ஆரம்பத்தில் உள்ள அறிக்கைகளில் காணப்படுகின்ற ஓயில் மற்றும் கிறீஸ் செறிவானது தற்போது குறைந்துள்ளதா என்றும் பரிசோதனைகளினை மேற்கொள்ளுமாறும், அவ்வாறு குறைந்ததானது நீதிமன்ற கட்டளைக்கு அமைய நொதேண் பவர் மின் உற்பத்தி நிறுவனம் அதனது மின் உற்பத்தியை நிறுத்தி உள்ளதால் இந்த ஓயில் மற்றும் கிறீஸ் நிலத்தடி நீரில் கலக்கும் அளவு குறைவடைந்துள்ளதா? என்பதையும் குறித்த நொதேண் பவர் மின் உற்பத்தி நிறுவனம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு உரிமத்தினைப் பெறக்கூடிய வகையில் அதனது கழிவகற்றல் தொகுதிகள் செய்யப்பட்டுக் காணப்பட்டுள்ளனவா? என்பதையும் அறிக்கைகள் மூலம் மன்றுக்குத் தெரியப்படுத்துமாறும், தற்போது ஓயில் மற்றும் கிறீஸ் மற்றும் ஏனைய பார உலோகங்கள் நிலத்தடி நீரில் கலந்துள்ளனவா? என்றும் மேற்படி நீரை மக்கள் அருந்தலாமா? அருந்தக்கூடாதா? என்பது தொடர்பிலும் அறிக்கைகளை ஆகக்குறைந்தது ஏழு நிபுணர்களையாவது வைத்து அறிக்கையைத் தயாரிக்குமாறும், அதைவிடக் கூடிய எண்ணிக்கையில் நிபுணர்களை நியமித்து செய்வதை மன்று தடை செய்யவில்லை என்பதையும், குறித்த விடயங்கள் தொடர்பில் நீதிமன்றத்திலும், மக்கள் மத்தியிலும் ஏலவே தயாரிக்கப்பட்ட அறிக்கைகள் தொடர்பில் சில ஐயப்பாடுகள் காணப்படுவதால் புதிய நிபுணர்களை நியமித்து இந்த அறிக்கைகளைப் பெறுமாறும், மன்று வடமாகாணசபையின் பிரதம செயலாளருக்கு அறிவுறுத்துகின்றது.
இந்த வழக்கினுடைய விடயப்பொருளுடன் சம்பந்தப்பட்ட இன்னொரு வழக்கானது பொலிசாரால் AR/1823/2014 என்ற இலக்கத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றது. எனவே ஒரு விடயப்பொருளுடன் சம்பந்தப்பட்ட இரு வழக்குகள் இந்த நீதிமன்றத்தில் காணப்படுவதால், பொலிசாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் பொதுத்தொல்லை தொடர்பில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றது. அதற்கு A அறிக்கை மூலம் மன்றில் அறிக்கை தாக்கல் செய்திருக்கின்றார்கள். இந்த விடயம் மிகவும் பாரதூரமான விடயமாகக் காணப்படுவதால் இந்த A அறிக்கையை B அறிக்கையாக மாற்றி குறிக்கப்பட்ட இந்த வழக்காகிய AR/1471 ஐயும் பொலிசாரால் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்ற வழக்குடன் இணைக்குமாறு மன்று கட்டளை இடுகின்றது. பெதாரிசாருடைய இந்த வழக்குடன் AR/1471 என்ற வழக்கானது சேர்க்கப்படுகின்ற பொழுது, இவ்வளவு காலமும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு அறிக்கைகள் மற்றும் தற்போது வடமாகாணசபையால் தாக்கல் செய்யப்பட இருக்கின்ற ஆய்வு அறிக்கைகளைக் கொண்டு இந்த பொதுத் தொல்லையை ஏற்படுத்தியது யார்? என்பதைப் பொலிசார் இலகுவாகக் கண்டறிந்து அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும் என மன்று கருதுவதால் இந்த இரண்டு வழக்குகளும் ஒன்றாக இணைக்கப்பட்டு B அறிக்கையாக மன்றில் தாக்கல் செய்யப்படுகின்றது.
அத்தோடு நீதிமன்றக் கட்டளைக்கு அமைவாக குடிநீர் விநியோகங்கள் ஒழுங்காக நடைபெறுகின்றதா? இல்லையா? என்பது தொடர்பில் நிலத்தடி நீர் மாசுபட்டிருக்கின்ற பகுதிகளைச் சேர்ந்த பொலிஸ் நிலையப் பொறுப்பு அதிகாரிகள் கண்காணிப்புக்களை மேற்கொள்ள வேண்டும் என்றும், நீர் விநியோகம் சரியாக நடைபெறாத பகுதிகள் தொடர்பில் மன்றுக்குத் தெரியப்படுத்துமாறும், பொலிஸ் அதிகாரிகளுக்கு மன்று பணிக்கின்றது.
05.02.2016ம் திகதி “X1” என்ற அறிக்கை தொடர்பில் அதன் பூரணமான அறிக்கையை மன்றில் தாக்கல் செய்யுமாறு குறித்த அதிகாரிக்கு மன்று பணித்திருந்தது. ஆனால் இதுவரையில் இந்த அறிக்கை மன்றில் தாக்கல் செய்யப்படவில்லை. குறித்த அறிக்கையைத் தயாரித்த அதிகாரிக்கு பூரணமான அறிக்கையை ஒரு மாத காலத்திற்குள் தாக்கல் செய்யுமாறு மன்று கட்டளையிடுவதோடு, “X1’’ என்ற அறிக்கை ஒரு மாத காலத்திற்குள் தாக்கல் செய்யாதவிடத்து குறித்த அறிக்கையைத் தயாரித்த நிறுவன அதிகாரிக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டு அந்த அறிக்கைகள் மன்றுக்கு தாக்கல் செய்யக் கட்டளை பிறப்பிக்கப்படும் என மன்று அறிவுறுத்துகின்றது.
குறித்த கட்டளையின் பிரதிகளை வடமாகாணசபை பிரதம செயலாளருக்கும், “X1” என்ற ஆவணத்தைத் தயாரித்த அதிகாரிக்கும், நீர் மாசு பட்டிருக்கின்ற பிரதேசங்களைச் சேர்ந்த அனைத்துப் பொலிஸ் நிலையப் பொறுப்பு அதிகாரிகளுக்கும், குறித்த பிரதேசங்களில் இருக்கின்ற பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களுக்கும் அனுப்பி வைக்கவும்.
ஒப்பமிடப்பட்டுள்ளது.
(அ. யூட்சன்)
நீதிவான்
நீதிவான் நீதிமன்றம்,
மல்லாகம்.
03.05.2016.
பதிவு – (திருமதி) பி. றெமிஆனந்த்.