குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு:-
நல்லிணக்கத்திற்கு கடந்த கால சம்பவங்களை தடையாகக் கொள்ளக் கூடாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கடந்த கால அனுபவங்களைப் பாடமாகக் கொண்டு தமிழ் சிங்கள அடையாளத்திற்கு பதிலாக இலங்கையர் என்ற அடையாளம் கட்டியெழுப்பப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் நாடு பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கியதாகத் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் ஹார்ட்லி கல்லூரி ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் பல்வேறு இன மற்றும் மத மக்களுக்கு இடையில் மோதல்கள் இடம்பெற்றிருந்தாகவும், தமிழீழ விடுதலைப் புலிகள் வடக்கு தெற்கு அரசியல்வாதிகளை கொலை செய்தனர் என அவர் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதம் காரணமாக நிதி மற்றும் குடும்ப பிரச்சினைகள் எழுந்ததாகத் தெரிவித்துள்ளார்.
இராணுவத்திற்கு யுத்தம் செய்ய நேரிட்டதாகவும் சிவிலியன் கொல்லப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் அவை கடந்த கால நிகழ்வுகளாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
யார் தாக்குவது யாருடைய உயிர் அச்சுறுத்தலுக்கு உள்ளானது என அடையாளம் காண முடியாத காலமொன்று காணப்பட்டது எனவும், சிங்கள ஊடங்களிலும் தமிழ் ஊடகங்களிலும் இது பற்றிய செய்திகள் வெளியிடப்படுகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் இந்த விடயங்கள் கடும்போக்குவாதமாக அமையக் கூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அனைத்தையும் நினைவில் வைத்துக் கொண்டு நாம் நல்லிணக்கத்தை நோக்கிப் பயணிக்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் ஏற்பட்ட காயங்களுக்கு நாம் மருந்து போட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.