யாழ்.தெல்லிப்பளை வைத்தியசாலையில் உள்ள குழந்தை வைத்திய நிபுணர் ஒருவரை எந்தவிதமான மாற்று ஒழுங்குகளும் இல்லாமல் யாழ்.போதனா வைத்திய சாலைக்கு இடமாற்றுவதில் வைத்தியசாலை நிர்வாகம் விடாப்பிடியாக நிற்பது ஏன்? என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.
இது குறித்து வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் யாழ்.தெல்லப்பளை கிளை அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் அதிதீவிர முயற்சியின் பலனாக கடந்த மாதம் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலைக்கு உள்ளக பயிற்சிக்காக வைத்தியர்கள் நியமிக்கப்பட்டார்கள்.
இச்செயற்பாடானது தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையின் வளர்ச்சியில் மக்களுக்கு சேவையை வழங்குவதில் ஒரு படிக்கல்லாகும்.
இந்த மாற்றத்தை கொண்டு வருவதற்காக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தெல்லிப்பளை கிளையானது தாய் சங்கத்துடன் இணைந்து பொது மருத்துவம், சத்திரசிகிச்சை, குழந்தை வைத்தியம், பெண் நோயியல் மற்றும் மகப்பேற்றியல் ஆகிய நான்கு துறைகளுக்கும் தனித்தனியே இரு வைத்திய நிபுணர்கள் வீதம் நியமிப்பதில் பெரும் பங்காற்றியது.
வடமாகாணத்தில் சில மாவட்ட வைத்தியசாலைகளில் வைத்திய நிபுணர்களின் பற்றாக்குறை இருந்தும் இலங்கை மருத்துவ அதிகார சபையின் உள்ளகப் பயிற்சி வைத்தியர்கள் நியமனத்திற்கான அடிப்படை தகுதியை பூர்த்தி செய்வதற்காக கடும் முயற்சியின் பின்னராக இத்தேவை பூர்த்தி செய்யப்பட்டது.
இதன் மூலம் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலைக்கு சிகிச்சை பெற வரும் நோயாளர்களின் சிகிச்சையின் தரத்தை உயர்த்துவதே எல்லோருடைய இலக்காகும்.
ஆயினும் வைத்தியசாலை நிர்வாகம் சிரேஸ்ட குழந்தை வைத்திய நிபுணர் ஒருவரை எமது வைத்தியசாலையிலிருந்து யாழ்.போதனா வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்வதில் அதீத அக்கறை காட்டிவருகிறது.
எமது வைத்திய சாலையில் இரு குழந்தை வைத்திய நிபுணர்களிற்கான தேவை கருதி மத்திய சுகாதார அமைச்சும் இரு வைத்திய நிபுணர்களிற்கான ஒப்புதல் அளித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையின் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் கிளையானது பலமுறை வேண்டுகோள் விடுத்திருந்தும் வைத்தியசாலை நிர்வாகம் குறிப்பிட்ட குழந்தை வைத்திய நிபுணரை பொருத்தமான தகுதியுடைய வைத்திய நிபுணர் நியமிக்கப்படாமல் இட மாற்றம் செய்வதற்கு வலியுறுத்தி வருகிறது.
இச்செயற்பாடானது தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக நாடிவரும் குழந்தைகள் மற்றும் சிறார்களின் சிகிச்சை தரத்தை குறைக்கும்.
அது மட்டுமன்றி எதிர்காலத்தில் உள்ளக பயிற்சிக்காக தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் நியமனம் பெறுபவர்களின் தரத்தையும் தெரிவையும் கேள்விக்கு உள்ளாக்கி இருக்கின்றது.
வைத்தியசாலை நிர்வாகத்தின் கண்மூடித்தனமான இச் செயற்பாட்டிற்கு தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலை அரச வைத்திய அதிகாரிகளின் சங்க கிளையானது கடும் அதிருப்தியையும் எதிர்ப்பையும் தெரிவிக்கின்றது.
இப் பின்னணியில் வைத்தியசாலை நிர்வாகம் அக்குழந்தை வைத்திய நிபுணரை இடமாற்றம் செய்தால் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலை அரச வைத்திய அதிகாரிகள் சங்ககிளையானது பணிப்புறக்கணிப்புக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படலாம் என்பதை மனவருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.
இதனால் நோயாளர்களிற்கு ஏற்படும் அசௌகரியங்களிற்கு வைத்தியசாலை நிர்வாகமே பொறுப்பேற்க வேண்டிவரும் என்பதனையும் சுட்டிக்காட்டுகின்றோம்.