இராணுவத்தினரால் உரம் விநியோகிக்கப்படுகிறது என்றால் விவசாய அமைச்சர் எதற்கென கேள்வியெழுப்பிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, உரம் விநியோகிக்கும் பணியை இராணுவத் தளபதியிடம் ஒப்படைத்தால் இந்த நாட்டில் விவசாய அமைச்சரோ, உர அமைச்சரோ எதற்காக என்றார்.
புந்தல பிரதேசத்தில் நேற்று (9.12.21) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் உரத்தை விநியோகிக்க முடியாத அரசாங்கம் அதனை இராணுவத் தளபதியிடம் ஒப்படைத்துள்ளது என குறிப்பிட்டுள்ளார். ஆனால் நாட்டில் வரி செலுத்தும் மக்கள் பணத்தில் அமைச்சர்கள் செயற்படுவது பாரிய குற்றமென தெரிவித்த அவர், தமது விவசாய அமைச்சர், உர அமைச்சர் மற்றும் சகல அதிகாரிகளினதும் தோல்வியின் சமிக்ஞையையே ஜனாதிபதி இங்கு வெளிப்படுத்தியுள்ளார் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரச ஊழியர்கள் மீது அரசாங்கத்திற்கு நம்பிக்கை இல்லையென்றாலும் தமக்கு
முழு நம்பிக்கை இருப்பதாக தெரிவித்த அவர், சிறந்த முறையிலான
நிர்வாகத்துடன் அவர்களின் சேவையை நாடு பெற்றுக்கொள்ள வேண்டியதே
தற்போது செய்யக் கூடிய ஒன்றாகும் என்றார்.
விவசாயத்தை ஆரம்பிக்க அரசாங்கம் மேற்கொள்ளும் இந்த பொறுப்பற்ற மற்றும்
தன்னிச்சையான செயற்பாடுகளினால் நாட்டில் மிக விரைவில் பஞ்சம்
ஏற்படுவதை தடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.