ஹொங்ஹொங் பல்கலைக்கழகத்திலிருந்து தியானென்மென் சதுக்க படுகொலையை நினைவு கூரும் புகழ்பெற்ற தூபி அகற்றப்பட்டுள்ளது. 8 மீற்றர் உயரம் கொண்ட அந்த செம்பு ஸ்தூபி இரவோடு இரவாக கட்டுமானத் தொழிலாளர்களால் அகற்றப்பட்டுள்ளது.
1989ஆம் ஆண்டு ஜனநாயக ஆதரவாளர்கள், சீனப் படையினரால் கொல்லப்பட்ட நிகழ்வை நினைவுகூரும் வகையில் அமைக்கப்பட்ட இந்த தூபி ‘வெட்கக்கேட்டின் சின்னம்’ என அழைக்கப்பட்டது.
உயிரற்ற உடல்கள் ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கப்பட்டுக் கிடப்பதாக காட்டும் இந்த சின்னம் சிலைபோல வடிக்கப்பட்டிருந்த இந்த நினைவுச் சின்னத்தை அகற்றும்படி கடந்த ஒக்டோபர் மாதம் ஹொங்ஹொங் பல்கலைக்கழகம். ஆணையிட்டிருந்தது. அந்த ஆணையின்படி நேற்று இந்த சிலை அகற்றப்பட்டுள்ளது.
“இந்த முடிவு, வெளியிலிருந்து வந்த சட்ட அறிவுரை மற்றும் ஆபத்தை ஆராய்ந்து பல்கலைக்கழக நலனை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது எனவும் இந்த வலுவிழந்த சிலையால் ஏற்படக்கூடிய ஆபத்தையும் பல்கலைக்கழகம் கருத்தில் கொண்டது.” எனவும் பல்கலைக்கழகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டசின் கணக்கான உயிரற்ற உடல்கள் மற்றும் வேதனையான முகங்கள் கொண்ட இந்த சிற்பம், பெய்ஜிங்கில் நடைபெற்ற தியானென்மென் சதுக்க படுகொலையை நினைவுகூரும் ஒருசில பொது நினைவுச் சின்னங்களில் ஒன்றாக இருந்தது
ஹொங்ஹொங் பல்கலைக்கழகத்தில் கடந்த 24 வருடங்களாக இருந்து வரும் இந்த சிலையானது . நெதர்லாந்தை சேர்ந்த சிற்பி ஜென்ஸ் கால்ஷியோட்டால் செதுக்கப்பட்டது. இந்த சிலை அகற்றப்படுவது ‘மிருதத்தனமாக ஒரு செயல் என்றும் இது கல்லறையை அழிப்பதற்கு சமம் என்றும் சிற்பி ஜென்ஸ் தெரிவித்துள்ளார்.
1989ஆம் ஆண்டு சீனாவின் பெய்ஜிங் நகரில் அமைந்துள்ள தியானென்மென் சதுக்கத்தில் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் சீனப் படையால் கொல்லப்பட்டதனை நினைவுகூர இந்த சிலை நிறுவப்பட்டது.
அந்த சிலை அகற்றப்படும்போது அந்த பகுதியை பிளாஸ்டிக் தடுப்புகளை கொண்டு மூடிவிட்ட பல்கலைக்கழக அதிகாரிகள் செய்தியாளர்கள் அங்கு சென்று படம் பிடிக்கவும் மறுத்துவிட்டனர். எனினும் அந்த சிலை பத்திரப்படுத்தி வைக்கப்படும் என பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.