ராஜிவ் காந்தி படுகொலை வழக்கில் 30 ஆண்டு காலம் சிறையில் உள்ள நளினிக்கு ஒரு மாதம் பரோல் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
ஆயுள் தண்டனை அனுபவிக்கும் நளினியை ஒரு மாதம் பரோலில் வெளியிட கோரி அவருடைய தாயார் பத்மா மனு தாக்கல் செய்திருந்தார். அதில், கடந்த 2018 ஆம் ஆண்டு நளினி உள்ளிட்ட 11 பேரை விடுவிக்கக்கோரி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுனரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அது நிலுவையில் உள்ளதை குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், தன்னுடைய உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளதால், தன்னை கவனித்துக்கொள்ள ஏதுவாக மகள் நளினிக்கு ஒரு மாதம் பரோல் வழங்க கேட்டு கடந்த மே மற்றும் ஓகஸ்ட் மாதங்களில் தமிழக உள்துறை செயலாளருக்கு அனுப்பிய மனு மீது எந்த முடிவும் எடுக்காததால் பரோல் வழங்க உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில் அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் முன்னிலையாகி ஒரு மாதம் பரோல் வழங்கி உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார். இதையடுத்து நீதிபதிகள் வழக்கை முடித்து உத்தரவிட்டனர்.
நளினியின் தாயார் நேற்றைய தினம் முதல்வரின் தனிப்பிரிவில் அளித்த மனுவில், வயது மூப்பின் காரணமாக உடல் மற்றும் உளவியல் பிரச்சினையால் அவதிப்பட்டு வருகிறேன். என் இறுதி காலத்திலாவது மகள் நளினி என்னுடன் வாழ ஏங்குகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
நளினி, 31 ஆண்டுகள் சிறைவாசத்தால் மன அழுத்தம், உடல் உபாதைகளால் அவதிப்பட்டு வருகிறார். எனவே மனிதநேய அடிப்படையில் அவருக்கு பரோல் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.
7 பேர் விடுதலையில் ஆளுநர் முடிவெடுக்கலாம் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளதாக அறிந்தேன். அதன்படி ஆளுநரிடம் தாங்கள் நினைவூட்டி விடுதலைக்கு ஆவன செய்ய கேட்டுக் கொள்கிறேன் என்று உருக்கமாகக் குறிப்பிட்டிருந்தார். அதனை ஏற்று நளினிக்கு ஒருமாதம் பரோல் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.