இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரும், பாஜி என்று அழைக்கப்படுபவரான ஹர்பஜன் சிங் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக நேற்று (டிசம்பர் 24) அறிவித்துள்ளாா்.
பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் பகுதியில் பிறந்து, 1998ஆம் ஆண்டு இந்திய அணிக்குள் அறிமுகமான ஹர்பஜன் சிங் ஏறக்குறைய 23 ஆண்டுகள் இந்திய கிரிக்கெட்டு்ன் பயணித்துள்ளாா்.
ஹர்பஜன் சிங் ருவிட்டரில் பதிவிட்ட கருத்தில், “அனைத்து நல்ல விஷயங்களும் இன்றுடன் முடிவுக்கு வந்தது. என்னுடைய வாழ்க்கையில் ஒவ்வொன்றையும் வழங்கிய கிரிக்கெட்டிலிருந்து இன்றுடன் ஓய்வு பெறுகிறேன். 23 ஆண்டுக் கால அழகான, நினைவில் நிற்கும் பயணத்தில் அனைவருக்கும் நான் நன்றி கூற விரும்புகிறேன். அனைவருக்கும் என் இதயம் கனிந்த நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.
ஹர்பஜன் சிங் கடந்த 1998ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவுக்கு எதிரான பெங்களூரு டெஸ்ட்டில் இந்திய அணியில் தனது 17 வயதில் அறிமுகமாகியிருந்தாா். டெஸ்ட் போட்டிகளில் 100 போட்டிகளுக்கு மேல் விளையாடிய நான்காவது இந்திய வீரர் என்ற பெயரெடுத்த ஹர்பஜன் சிங் 103 போட்டிகளில் 417 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
236 ஒருநாள் போட்டிகளில் ஆடியவர் 269 விக்கெட்டுகளையும், 28 இருபதுக்கு 20 போட்டிகளில் ஆடி 25 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். டெஸ்ட் போட்டியில் 2,224 ஓட்டங்களையும் அடித்துள்ளார்; இதில் இரண்டு சதங்கள், ஒன்பது அரைசதங்கள் அடங்கும். ஒருநாள் போட்டியில் 1,237 ஓட்டங்களை சேர்த்துள்ளார்.
2007ஆம் ஆண்டு தோனி தலைமையில் இந்திய அணி இருபதுக்கு 20 உலகக் கிண்ணத்தினை வென்ற இந்திய அணியிலும், 2011ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கிண்ணத்தினை வென்ற இந்திய அணியிலும் ஹர்பஜன் சிங் இடம் பெற்றிருந்தார்.