இலங்கைப் பிரஜைகள், வௌிநாட்டவரைத் திருமணம் செய்வதற்கு பாதுகாப்பு அமைச்சிடம் விசேட பாதுகாப்பு அறிக்கையைப் பெற வேண்டும் என பதிவாளர் நாயகம் திணைக்களம் அறிவித்துள்ளது.
இலங்கைப் பிரஜைகள், வௌிநாட்டவரை திருணம் செய்யும்போது முதலில் வௌிநாட்டவர் தமது நாட்டு பாதுகாப்புப் பிரிவின் சான்றிதழைப் பெற வேண்டும் என பதிவாளர் நாயகம் திணைக்களம் வௌியிட்டுள்ள புதிய சுற்றுநிருபத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
⭕ இலங்கையர் திருணம் செய்யும் வௌிநாட்டவர், இறுதி 06 மாதங்களுக்குள் எவ்வித குற்றவியல் குற்றச்சாட்டையும் எதிர்நோக்கவில்லை என்பது அந்தச் சான்றிதழில் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
⭕ அதனைத் தொடர்ந்து இலங்கைப் பிரஜை அல்லது அவர் சார்பான ஒருவரால் மாத்திரம், அந்தச் சான்றிதழ் பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் சிவில் பதிவுகள் பிரிவில் ஒப்படைக்கப்பட வேண்டும்.
⭕ பின்னர் அந்தச் சான்றிதழ் பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் சிவில் பதிவுகள் பிரிவூடாக பாதுகாப்பு அமைச்சுக்கு அனுப்பப்படும்.
⭕ பாதுகாப்பு அமைச்சு வழங்கும் அறிக்கைக்கு அமைய பதிவாளர் நாயகத்தினால் திருமணத்திற்கான அனுமதி, மேலதிக மாவட்ட பதிவாளருக்கு அனுப்பி வைக்கப்படும்.
இதனையடுத்து, திருமணப் பதிவிற்கான அனுமதி கிடைப்பதுடன் இந்தச் சட்டத்திற்கு அமைய மேலதிக மாவட்டப் பதிவாளர் நாயகத்திற்கு சில ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
- செல்லுபடியாகும் கடவுச்சீட்டு, அதன் பிரதி மற்றும் செல்லுபடியாகும் வீசா
- வௌிநாட்டவரின் சிவில் நிலைமையை உறுதிப்படுத்தும் அந்நாட்டு சான்றிதழ்
- பதிவாளர் நாயகத்தினால் வழங்கப்படும் அனுமதிப் பத்திரம்
- வௌிநாட்டவரால் தயாரிக்கப்பட்ட தமது சுகாதார நிலைமை தொடர்பான அறிக்கை
- பிறப்புச் சான்றிதழ் மற்றும் அதன் பிரதி
தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக பாதுகாப்பு அமைச்சினால் இந்தப் புதிய நிபந்தனை அறிவிக்கப்பட்டுள்ளதாக பதிவாளர் நாயம் W.M.M.B. வீரசேகர தெரிவித்தார்.
போதைப்பொருள் கடத்தல் மற்றும் நிதித்தூய்தாக்கலுடன் தொடர்புடைய வௌிநாட்டவர்கள், இலங்கையர்களைத் திருமணம் செய்வதைத் தடுப்பதற்காக புதிய நிபந்தனை அறிவிக்கப்பட்டுள்ளதாக பதிவாளர் நாயகம் மேலும் கூறினார்.