“அண்மையில் சந்தைக்குச் சென்றிருந்தேன், பொருட்களின் விலைகள் தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேட்டிருந்தனர், “பெயில், பெயில்” (fail) என்றேன் அவ்வளவுதான் இராஜாங்க அமைச்சர் பதவியிலிருந்து என்னை நீக்கியுள்ளனர்” என முன்னாள் இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
“மூன்று ஜனாதிபதிகளின் கீழ் பணியாற்றியுள்ளேன். நாடாளுமன்றத்துக்கு முதன்முறையாக தெரிவுசெய்யப்பட்டவுடன் 2000ஆம் ஆண்டு அமைச்சராக நியமிக்கப்பட்டேன்” என்றும் சுட்டிக்காட்டினார்.
கல்விச் சீர்திருத்தங்கள், திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைதூரக்கல்வி மேம்பாடு இராஜாங்க அமைச்சிலிருந்து, நேற்று (04) காலை வெளியேறிய போதே இவ்விடயத்தை அவர் அறிவித்தார். அதன்பின்னர், முச்சக்கர வண்டியொன்றை வாடகைக்கு அமர்த்தி, அமைச்சிலிருந்து புறப்பட்டு சென்றார்.
பதவியிலிருந்து நீக்கியதற்கான காரணத்தை தனக்குத் தெரிவிக்க வேண்டிய
அவசியமில்லை. ஜனாதிபதி, தனக்கு இருக்கும் அதிகாரங்களை பயன்படுத்தி ஒருவரை நீக்கலாம் மற்றுமொருவரை நியமிக்கலாம். ஆனால், தான் எனது பழைய தொழிலான சட்டத்தரணி தொழிலை இன்று (05) முதல் முன்னெடுக்க உள்ளதாக தெரிவித்தார்.
இராஜாங்க அமைச்சர் பதவியிலிருந்து தன்னை நீக்கியமை, எதிர்கால அரசியலுக்கு கிடைத்த ஆசீர்வாதமாகும் எனத் தெரிவித்த சுசில் பிரேமஜயந்த, பொருளாதார ரீதியில் நாடு எங்கு செல்கின்றது என்பது எல்லோருக்கும் நன்கு தெரியும் எனக் குறிப்பிட்டுள்ளார்.