கர்ப்பப்பையை அகற்றி துணியை வைத்து சத்திரசிகிச்சை செய்ததால் பெண் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த நீதவான், “உயிரிழந்த பெண்ணுக்கு சத்திரசிகிச்சை முன்னெடுத்த மருத்துவ குழுவினரின் விவரம் உள்ளிட்டவற்றை எதிர்வரும் ஜனவரி 18ஆம் திகதி,மன்றில் முன்வைக்கவேண்டும் என்றும் அன்றைய தினம் பிற்பகல் 2 மணிக்கு விசாரணை முன்னெடுக்கப்படும்” என்று நீதிவான் பொன்னுத்துரை கிரிசாந்தன் உத்தரவிட்டுள்ளார்.
பருத்தித்துறை யாக்கருவைச் சேர்ந்த 60 வயதுடைய மனோன்மணி குலவீரசிங்கம் என்ற பெண்ணுக்கு கர்ப்பப்பையில் ஏற்பட்ட புற்றுநோய் காரணமாக அதனை அகற்றுவதற்கு மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டது.
அதனால் நெல்லியடியில் உள்ள ரூபின்ஸ் தனியார் மருத்துவமனையில் கடந்த டிசெம்பர் 10ஆம் திகதி பெண்நோயியல் சத்திரசிகிச்சை வல்லுநர் ஒருவரினால் பெண்ணின் கர்ப்பப்பை அகற்றும் அறுவைச் சிகிச்சை இடம்பெற்றது.
இந்த நிலையில் அந்தப் பெண்ணுக்கு திடீரென ஏற்பட்ட சுகயீனம் காரணமாக பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு நேற்று முன்தினமிரவு 10 மணியளவில் உயிரிழந்தார்.
மந்திகை ஆதார மருத்துவமனை சட்ட மருத்துவ வல்லுநர் கனகசபாபதி வாசுதேவா முன்னிலையில் பெண்ணின் சடலம் நேற்று உடற்கூற்றுப் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டது.
சத்திரசிகிச்சையின் போது பெண்ணின் உடலுக்குள் 50 சென்ரிமீற்றர் நீளம் 10 சென்ரிமீற்றர் அகலமுள்ள துணி ஒன்று வைத்து தையலிடப்பட்டமை கண்டறியப்பட்டது.
அவரது உயிரிழப்புக்கு அந்த துணியினால் ஏற்பட்ட கிருமித்தொற்றே காரணம் என்று சட்ட மருத்துவ அறிக்கையில் வழங்கப்பட்டது.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பருத்தித்துறை நீதிமன்ற நீதிவான் பொன்னுத்துரை கிரிசாந்தன், தனியார் மருத்துவமனை பணிப்பாளர், மந்திகை ஆதார மருத்துவமனை சட்ட மருத்துவ வல்லுநர் உள்ளிட்டோரை இன்று மன்றில் முன்னிலையாக உத்தரவிட்டார்.
பெண்ணின் உடலை உடற்கூற்றுப் பரிசோதனைக்கு உள்படுத்திய மந்திகை ஆதார மருத்துவமனை சட்ட மருத்துவ வல்லுநர் கனகசபாபதி வாசுதேவாவிடம் இன்று முற்பகல் வாக்குமூலம் பெறப்பட்டது.
தொடர்ந்து இன்று பிற்பகல் ஒரு மணியளவில் தனியார் மருத்துவமனை சத்திரசிகிச்சை கூடத்துக்குச் சென்ற நீதிவான் விசாரணைகளை முன்னெடுத்தார்.
அதனை அடுத்து , “உயிரிழந்த பெண்ணுக்கு சத்திரசிகிச்சை முன்னெடுத்த மருத்துவ குழுவினரின் விவரம் உள்ளிட்டவற்றை எதிர்வரும் ஜனவரி 18ஆம் திகதி,மன்றில் முன்வைக்கவேண்டும் என்றும் அன்றைய தினம் பிற்பகல் 2 மணிக்கு விசாரணை முன்னெடுக்கப்படும்” என்று நீதிவான் பொன்னுத்துரை கிரிசாந்தன் உத்தரவிட்டுள்ளார்.