சுய பிரதிமைகள் எனுந்தலைப்பிலான காண்பியக்கலைக் காட்சியொன்று 26.01.2017 அன்று கொழும்பிலுள்ள சாஷ்க்கியா பெனான்டோ கலையத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இங்கே யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சித்திரமும் வடிவமைப்பும் துறையிற் பயின்று வெளியேறிய மூன்று பட்டதாரிகளின் கலைப்படைப்புக்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இலங்கையின் முன்னணி ஓவியக்கலைஞரும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நுண்கலைத்துறையின் சிரேஷ்ட விரிவுரையாளருமாகிய கலாநிதி. தா. சனாதனன் இக்காட்சியை எடுத்தாழுகை செய்திருந்தார்.
கணிசமான பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளதும் விதந்து பேசப்படுவதுமான இக்காட்சிப்படுத்தலில் வைக்கப்பட்டிருந்த பல படைப்புக்கள் விற்பனைக்காக முன்பதிவு செய்யப்பட்டிருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும். இந்த வகையில் இக்காட்சிப்படுத்தலின் பின்னாலுள்ள கோட்பாடுசார், கலை அனுபவம்சார் பின்னணிகள் குறித்த சிறியதொரு தொடுகையைச் செய்ய முனைகிறது இக்கட்டுரை.
காட்சிப்படுத்தலின் மெய்யுருவும் அதனைக் கட்டமைக்கும் விடயங்களும்.
கலையை இலகுவில் அரச உத்தியோகம் பெறுவதற்கான ஒரு கற்கையாக தெரிவு செய்பவர்களுக்கிடையே தமது வாழ்வின் ஒழுக்கமாகவும் தம்மைத் தரிசிக்கும் துறையாகவும் தெரிவு செய்பவர்கள் மௌனமாகத் தமது யாத்திரையைத் தொடர்ந்த வண்ணமே உள்ளனர். அவர்கள் ஆங்காங்கே சமூகத்தோடு தமது வெளிப்பாடுகளால் பேசிச்செல்கின்றனர். வாழ்வின் பாடலாய் ஓவியங்களைப் படைத்தலும் அவற்றைக் காட்சிப்படுத்தலும் அரிதாய் நிகழும் சமகாலத் தமிழ்ச் சூழலில் அண்மைய இக்காட்சிப்படுத்தலானது பல்வேறு அம்சங்களால் குறிப்பிட்ட அளவு முக்கியத்துவத்தை பெறுகின்றது.
இக்காட்சிப்படுத்தலின் பின்னணி குறித்து இதன் எடுத்தாழுநராகிய கலாநிதி தா. சனாதனன் தனது குறிப்பில் பின்வருமாறு பதிவு செய்கிறார்.
‘சமகாலப் படைப்பாளிகளுக்குக் கிடைக்கக்கூடிய புதிய மூலப்பொருட்சாத்தியங்களானவை, புதிய அணுகுமுறைகள் பயில்வுகள் தெரிவுகள் என்பவற்றைக் கொண்ட புதிய பரப்பொன்றைத் திறந்து வைத்துள்ளது. கலைஞர்களைக்கொண்ட வலையமைப்புக்களின் செயற்பாடுகள், கலைநூதனசாலைகள், தனியார் கலைக்கூடங்கள், ஈராண்டுக் கலைக்காட்சிகள் மற்றும் கலைச்சந்தைகள் என்பன சமகாலக்கலை பற்றிய உரையாடல்களை வடிவமைப்பதிற் செல்வாக்குச் செலுத்துகின்றன. இவை நவீனத்துவ மற்றும் பின் நவீனத்துவக் கலைபற்றிய உரையாடல்களுக்கும் மீள் சிந்தனைக்கும் எம்மை இட்டுச்செல்கின்றன. இந்த மாற்றங்களானவை, வினைத்திறன் பயிற்சியைக் குவிமையப்படுத்திய நிறுவனமயப்படுத்தப்பட்ட கலைக்கல்விமுறைக்குச் சவால் விடுவதோடு அதனை ஸ்திரமிழக்கவும் செய்துள்ளன. இதற்கப்பால் நிலவும் கேள்விகளாவன : கலைக்கல்விக்கும் கலையுலகிற்குமான இடைவெளியை இணைப்பதெங்ஙனம்..? சமகாலக் கலையுலகில் கலைக்கல்வியின் பங்கென்ன?
முரண்நகையாக, இலங்கையிற் கலைக்கல்வி முறைமையானது அரச உத்தியோகத்தைப் பாதுகாப்பதற்கான ஒரு படிக்கல்லாக உருவாகியுள்ளது. பயில்நிலைப்படுத்தப்படாத படைப்பாளிகளின் உற்பத்தி முகவராக இருப்பதற்கான கலைக்கல்வியின் வீச்சை இது குறைத்துள்ளது. கல்வியிலுள்ள இச்சங்கட நிலமையானது கலைக்கல்வியில் பூரணத்துவமற்ற நிலையினை மிக மிக ஊக்குவித்துள்ளது. இதற்கப்பால் இங்கிருக்கும் கேள்வி, விமர்சனப்பண்புமிக்க கலைப்பயில்விற்கு அனுசரணை செய்யும் கலைக்கல்வியின் புதிய முறைகளை மதிப்பிடுதல் எங்ஙனம்? என்பதே. முன்னரைப் போலல்லாது நாட்டின் இலவசக்கல்வியானது சமூகத்தின் கீழ் நிலையினர் அணுகத்தக்கவாறு கலைக்கல்வியை உருவாக்கியுள்ளது. தேசியவாதங்கள், மதஅடிப்படைவாதம், பொருளாதார ஏற்றத்தாழ்வுகளின் குறுக்கோட்டங்களினுள் கலையைச் சிக்க வைத்துள்ளது.
ஆனால் இங்குள்ள கேள்வி, சமூகத்தின் கீழ் நிலையிலுள்ள சலுகை பெறாத இப்பிரிவினர், புதிய முகவராண்மையைப் பெறுவதற்கான கருவியாகக் கலையின் சாத்தியங்களைக் கண்டடைந்திருக்கின்றனரா இல்லையா என்பதாகும். இல்லையெனின் ஒரு கலைஞனின் மாறுந்தன்மையுடைய வகிபாகத்தோடு இணைந்ததான கலைப்பயில்வுகளைக் கணிப்பிடுவது எவ்வாறு? மிகப்பெரிய சமூகயதார்த்தத்தை விளங்கிக் கொள்வதிலும் அணுகுவதிலும் தனிப்பட்ட வரலாறுகள் எந்த அளவிற்கு இன்றியமையாவை? மறுபுறத்தில் முதலாளித்துவ நலன்களாலும் மேட்டுக்குடி அழகியலாலும் கட்டுப்படுத்தப்படுகின்ற ஒரு பெருநகரம் சார்ந்த கலைச்சந்தையானது மரபார்ந்த அணுகுமுறைகளைத்தொடர்ந்தம் ஆதரித்து வருகிறது. இது கலை வெளிப்பாட்டின் வீச்சை சிறியதொரு கலைச்சமூகத்திற்குள் வரையறை செய்கிறது. சமகால உலகின் சமூக யதார்த்தங்களுக்கும்;, சமகாலக் கலைச்சந்தைகளின் அழகியல் எதிர்பார்ப்புக்கும் நடுவிலான இடைவெளியை இணைப்பதென்பது எந்த வகையிற் சாத்தியமாகிறது? தனிப்பட்ட நலன்கள் சமூகப் பொறுப்புக்கள் மற்றும் சந்தை எதிர்பார்ப்புக்களுக்கிடையில் ஒருதனித்தன்மையை அடைந்துகொள்வதெப்படி?
மேற்படி கேள்விகளைக் கவனத்திலெடுப்பதால் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப்பட்டதாரிகள் மூவரின் இக்காண்பியக் கலைக்காட்சிப்படுத்தலானது, 2015 இன் இறுதியில் நாம் தொடங்கிய யாத்திரையின் ஒருகட்டத்தை அடையாளப்படுத்துகிறது..’
மெய்யுருக்களும் காண்பிய அனுபவமும்.
இக்காட்சியில் வரைதல்களும் (Drawings) பூத்தையல் (Embroidery) வேலைகளின் மீதானபரிசோதனைகளும், சிற்பங்களும் (Sculpturs) காட்சிப்படுத்தப்பட்டன. இவை புதிய மூலப்பொருட்களின் சாத்தியங்களையும் உத்திநுட்பங்களையும் கையாள்வதன் மூலம் உருவாக்கப்பட்டிருந்தன.
நிலானியும் அவரது மெய்யுருக்களும்.
நிலானி ‘வேலிகள்’ என்ற தலைப்பிலான வரைதற்தொடரைக் காட்சிப்படுத்தியுள்ளார். இவை பேனாவும் மையுங்கொண்டு வரைதலின் சாத்தியங்களால் உருவாக்கப்பட்டவை வடக்கிலங்கையில் போர்க்காலத்திலும் போருக்கு முன்னும் பின்னும் மக்களின் குடியிருப்பைச்சுற்றி உருவாக்கப்பட்டதும் உருவாக்கப்படுவதுமான வேலிகளின்மீதான காண்பிய மாற்றங்களைச் சித்தரிப்பதனூடு, அதன் பின்னால் மறைந்துள்ள சமூக நிலவரங்களையும் அரசியலையும் பதிவு செய்துள்ளார்.
இங்கு வரைதலானது (Drawing) ஒரு தேசப்பட வரைதலாக (Drawing) உருப்பெறுகிறது. அதுவே இவரது வெளிப்பாடுகளின் பிரதான உத்தியுமாகிறது. இங்கு வேலிகளை வரைதலானது இன்னொரு வகையில் எல்லைகள் பற்றிய அனுபவங்களையும, சித்தாந்தங்களையும் வரைதலாகிறது. இதன் மூலம் படைப்பாளி தனது இருப்பினை மீள எல்லைப்படுத்தகிறார். மறுவளமாகத் தனது தேசத்தின் எல்லையினையும் மீளவடிவமைக்கிறார். தன்னைச்சுற்றி உருவாக்கப்படுவதும். தொடர்ந்தேர்ச்சையான மாற்றங்களை உள்வாங்கிக்கொண்டிருப்பதும் தனக்குள் உணரப்படுவதுமான எல்லைகளை வரைவதன் மூலம் அவற்றைக் கடந்து இறுதியில் தனது மெய்யுருவை வந்தடைகிறார். நிலானி வேலிகளை வரைந்திருக்கும் விதம் தேசப்படவரைதலாக உருப்பெற்று நிலவுருவரைதலாக மாறுகிறது. இந்த இரு வேறுபட்ட காண்பிய வரைதல்களுக்கிடையில் நிலானி தனது மெய்யுருவையும் வரைந்து செல்கிறார்.
தர்சியாவும் அவரது மெய்யுருக்களும்.
தர்சியாவின் கலைவேலைப்பாடுகள் சித்திரப் பூத்தையல்களாக உள்ளன. இத்தையல் வேலைகள், தர்சியாவின் பால்நிலை அந்தஸ்த்திலிருந்த வரும் அடையாளத்தின் அரசியலைத் திலைவிலக்குவதாக கலாநிதி சனாதனன் தனது குறிப்புரையில் எழுதுகிறார். பெண்ணிலை சார்ந்த ஊடகமாக அடையாளப்படுத்தப்பட்டிருக்கும் பூத்தையல் முறையாளது உயர்குடிப்பெண்களின் பொழுதுபோக்குகளையும் பொருளாதார ரீதியில் நலிவுற்ற பெண்களின் சீவனோபாயத்தையும் கூட்டிணைக்கின்றதென அவர் மேலும் குறிப்பிடுகிறார்.
தர்சியாவின் இந்த வெளிப்பாடுகள் ஒரு வகையிற் புதிய பரிசோதனைகளாகும். ஏனெனில் பூத்தையல் வேலைகள் பெரும்பாலும் கைவினை வெளிப்பாடுகளாகவே அடையாளங்காணப்பட்டு வருகின்றன. தர்சியா இவற்றைக் கலைகளாக மாற்றமுனைகிறார். இவர் தனது கலையாக்கச் செயற்படிமுறைகளில் வட்டவடிவச் சட்டகத்தில் பொருத்தப்பட்ட துணியின் மீது சிலவேளைகளில் பன்னிற நூல்களாற் தையலிடுகிறார்;;. பின்னியிழைக்கிறார். பல்வேறு இழைமங்களை உருவாக்குகிறார். சிலவேளைகளில் அலங்கார வடிவங்களுக்கு உணர்ச்சியேற்றுவதன்மூலம் அவற்றை அதன் அடுத்ததளத்திற்குக் கொண்டு செல்கிறார்.இதன்மூலம் புதிய கலப்பு வெளியைக் கண்டுபிடிக்கிறார். பூத்தையல் வேலையின் பின்னுள்ள சமூக அரசியல் அழகியல் அர்த்தங்களையும் தான் கண்டுபிடித்த உதவு பொருட்களின் அர்த்தங்களையும் மாற்றுவதன் மூலமும் தனது தொடுகைகளின் மூலம் தனது வெளிப்பாட்டு ஊடகத்தில் புதிய பரிசோதனைகளைச் செய்துபார்க்கிறார். இதன் மூலம் இங்கு ஊடகக்கடப்பு நிகழ்கின்றது. கைவினையாக அடையாளப்படுத்தப்பட்ட பூத்தையல் முறை கலை வெளிப்பாடாகி புதிய அடையாளத்தைப் பெறுகிறது.
தனது பெண்ணிய அடையாளத்தினூடும் புதிய தொடுகைகளூடும் பூத்தையல் முறையில் கைவினைக்குரிய வரையறைகளைக் கடந்து செல்வதன் மூலம் தர்சிகா தனது புதிய மெய்யுருவைக் கண்டுபிடிக்கிறார். நூலிழை கொண்டு செய்யப்பட்ட வட்டவடிவ வெளிக்குள் அவர்தன் மெய்யுருவைத் தரிசிக்கிறார்.
ஐங்கரனும் அவரது மெய்யுருவும்
ஐங்கரன் இறுதிக்கட்ட வன்னியுத்தத்தில் பாதிக்கப்பட்டவராகவும் அந்த யுத்தத்தின் சாட்சியாகவும் நின்று தனது சிற்பங்களை உருவாக்குகிறார். மரணத்தை வாழ்ந்து கடந்தவராக தனது அனுபவங்களைப்பாடுகிறார். ஐங்கரன் தனது உடலை, துன்பியல் நிறைந்த வெளியில் முடிவற்று உருட்டிச் செல்லப்படும் ஒரு திண்மக்கோளமாகவும் உயிரற்ற வன்கூடாகவும் உணர்கிறார். நீடித்த போர்ச்சூழலாலும் தொடர்ச்சியாக நிகழ்ந்த இடப்பெயர்வுகளாலும் நிச்சயமற்றிருந்த தனது இருப்பை சிற்பங்களால் அடையாளப்படுத்துகிறார். போரினாற் பெற்ற காயங்களை திறந்து அவற்றைச் சிற்பமாக்குவதன் மூலம் அக்காயங்களை ஆறவைக்கிறார்.
மனித உடலும் போர் அனுபவங்களுமே ஐங்கரனின் சிற்பங்களின் பிரதானபாடுபொருள் சிற்ப உருவாக்கற் படிமுறையில் இவர் மனித உடலின் காட்சி வடிவத்தையும் கட்டமைப்பையும் எளிமைப்படுத்துகிறார்.உருமாற்றுகிறார்.அரூபமாக்குகிறார் இறுதியில் தனது வெளிப்பாட்டிற்குகந்த மாறா வடிவத்தைக் கண்டுபிடிக்கிறார். இவரது சிற்ப உருவாக்கற் படிமுறையானது மாறும் இருப்பில் இருந்து மாறாத மூல இருப்பைக்கண்டுபிடிப்பதாகும். இதுவே இவரது சிற்பங்களின் வெளிப்பாட்டு முறையும் பிரதான அடையாளமுமாகும்.
காகிதக்கூழினைப் பயன்படுத்துவதன் மூலம் உருவாக்கப்படும் இவரது சிற்பங்கள் போர்க்காலத்தில் காயமாற்றுவதற்காக உபயோகிக்கப்பட்ட கட்டுந்துணிகள், சாரங்கள், வேட்டிகள் போன்ற இன்ன பிற பொருட்களை ஒட்டுவதனால் முழுமைப்படுத்தப்படுகின்றன. அப்பொருட்களின் அர்த்தங்களை சிற்பங்களுக்கு ஏற்றுவதன் மூலம் சிற்பங்கள் கவினுறச்செய்யப்படுகின்றன. மொத்தத்தில் ஜங்கரன் அரூபவாத அணுகுமுறையினாலும் கவித்துவ அழகினாலும் தனது மெய்யுருவைச் செதுக்குகிறார்.
ஆகவே நிலானியின் மெய்யுருவானது வரைதலினாற் பெறப்படுகிறது. பேனாவும் மையும் இவரது பிரதான உத்திகள்; தர்சியாவின் மெய்யுருவானது கலைக்கும் கைவினைக்குமான ஊடாகக் கடப்பினால் பெறப்படுகிறது. பூத்தையல் முறை இவரது பிரதான உத்திமுறையாகும். ஜங்கரனின் மெய்யுருவானது அரூபவாத அணுகுமுறையாலும் கவித்துவ அழகினாலும் சிற்பத்தை வடிப்பதாற் பெறப்படுகிறது. இது தொட்டுணரக்கூடிய மெய்யுருவாகவும் உள்ளது. ஒட்டுமொத்தத்தில் மெய்யுரு(Pழசவசயவை) என்பது ஒரு நபரின் பௌதீகத் தோற்றத்தை மட்டும் வெளிப்படுத்தாது அந்நபர் பற்றிய அனுபவங்களை வெளிப்படுத்துவதாகக் காணப்படுகிறது. இதுவே மெய்யுரு பற்றிய சமகால அர்த்தமுமாகிறது.
ஆகவே இக்காட்சியானது இலங்கையின் காண்பியப்புலத்துக்கு உள்ளுறையும் ஆற்றல் கொண்ட இளம்படைப்பாளிகளையும் படைப்பில் புதிய பரிசோதனைகளையும் இயங்கு திசைகளையும் அறிமுகம் செய்து வைத்துள்ளது. அத்துடன் அவர்களிடம் இருந்து இடைவிடாத ஆர்வத்தோடு கூடிய தொடர்ந்தியங்குதலையும் கோரிநிற்கிறது.
தவ.தஜேந்திரன்,
05.02.2017