சுவிஸ் மக்கள் இன்று நடத்தப்பட்டஒரு கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பில் சிறுவர்களினதும் இளையோரினதும் பார்வைபடும் இடங்களில் சிகரெட் விளம்பரங்களைத் தடைசெய்வதற்கு ஆதரவாக வாக்களித்திருக்கிறார்கள். சிகரெட் புகைத்தலுக்கு எதிராக எதிர்காலத்தில் மேலும் உறுதியான சட்டங்களை உருவாக்குவதற்கு இந்தத் தீர்ப்பு வழிசமைத்துள்ளது.
நாட்டின் 26 கன்ரன்களிலும் (cantons) நடந்த வாக்கெடுப்பில் தடைக்கு ஆதரவாக 56.6%மக்கள் வாக்களித்திருக்கின்றனர். சிறுவர்கள் கூடும் இடங்கள்,அவர்களது பார்வை படுகின்ற இடங்களில்விளம்பரங்கள் செய்வதும், சிறுவர்களை இலக்கு வைத்து அவர்களைக் கவரும் விதமாக சிகரெட் விளம்பரங்களை -குறிப்பாக எலெக்ரோனிக் சிகரெட் விளம்பரங்களைச்- செய்வதைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்டும் இந்த மக்கள்கருத்தறியும் வாக்கெடுப்பு முன்னெடுக்கப்பட்டது.
சுவிற்சர்லாந்து பிலிப் மொறிஸ் (Philip Morris International) பிரிட்டிஷ் அமெரிக்கன் (British American Tobacco) போன்ற பிரபலமான சர்வதேச சிகரெட் கம்பனிகளின் தாயகம். ஐரோப்பாவில் சிகரெட் விளம்பரங்களைக் கட்டுப்படுத்துவதில் மிகப் பலவீனமான சட்டங்களைக் கொண்டநாடாகவும் அதுவே உள்ளது.
அங்கு நால்வரில் ஒருவர் புகைப் பழக்கம் கொண்டவர்கள். புகைபிடிப்பவர்களில் 57 வீதமானவர்கள் தங்களது சிறு பராயத்திலேயே அந்தப் பழக்கத்தை ஆரம்பித்தவர்களாக உள்ளனர். சமீபகால ஆய்வுகள் சிறுவயதினர் புகை பிடிப்பது அதிகரித்து வருவதைக் காட்டுகின்றன. நாட்டின் பொருளாதாரத்தில் புகையிலைதொழில் வருடாந்தம் ஐந்து பில்லியன் ஈரோக்கள் பங்களிப்புச் செலுத்தி வருகிறது.
இதேவேளை, ஆய்வுகூடப் பரிசோதனைகளில் விலங்குகளைப் பயன்படுத்திச் சித்திரவதை செய்வதை அடியோடு நிறுத்துவதற்கும் இன்றைய வாக்கெடுப்பில்மக்களின் ஆதரவு கோரப்பட்டிருந்தது.ஆனால் சுமார் 80 வீதமான வாக்காளர்கள் அதனை நிராகரித்துவிட்டனர் என்ற வருத்தமான தகவலும் வெளியாகியிருக்கிறது.
———————————————————————-
குமாரதாஸன். 13-02-2022பாரிஸ்.