இலங்கையில் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கக் கோரி முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பிரதேச சபையின் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் (ஈ.பி.டி.பி) உறுப்பினர் வைரமுத்து ஜெயரூபனால் பிரேரணை ஒன்று கொண்டுவரப்பட்டுள்ளது
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேசசபையின் 48வது அமர்வு நேற்றைய தினம் காலை 9 மணிக்கு சபையின் தவிசாளர் தலைமையில் நடைபெற்றது இதன்போது ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் (ஈ.பிடி.பி) பிரதேச சபை உறுப்பினர் வைரமுத்து ஜெயரூபனால் பயங்கரவாத தடை சட்டத்தை நீக்க கோரிய பிரேணையொன்று சபைக்கு கொண்டுவரப்பட்டது.
குறித்த பிரேரணை சபை உறுப்பினர்களால் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன் மேற்படி பயங்கரவாத தடை சட்டத்தை நீக்க கோரிய குறித்த பிரேரணையை நீதி அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் பிரதேச சபையில்; தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாத தடை சட்டத்தை நீக்க கோரி பல்வேறு பிரதேசங்களிலும் கையெழுத்து போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக பெருமளவான மக்கள் கிராமப்புறங்களிலும் ஏனைய இடங்களிலும் தங்களுடைய கையெழுத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் குறித்த மாந்தை கிழக்கு பிரதேசசபையின் 48வது சபை அமர்வின் போது மேற்படி தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது