புடினுடன் மக்ரோன் மீண்டும்தொலைபேசி வழியே பேச்சு ஐ. ஒன்றியத்தில் இணைந்திட உக்ரைன் அதிபர் ஒப்பமிட்டார்.
பெலாரஸ் நாட்டின் எல்லையோரம் ரஷ்ய – உக்ரைன் பிரதிநிதிகளுக்கு இடையே இன்று நடைபெற்ற அமைதிப்பேச்சுக்கள் முன்னேற்றகரமான முடிவுகள் எதனையும் எட்டாத போதிலும் இரு தரப்புகளும் மீண்டும் சந்தித்துப் பேசுவதற்கு இணங்கியுள்ளன.
உக்ரைன் நாட்டின் சமாதானப் பேச்சுக்குழுவின் மத்தியஸ்தர் ஒருவர் இத்தகவலை உறுதிப்படுத்தி உள்ளார். ரஷ்யாவின் தரப்பைச் சேர்ந்த பிரதிநிதி ஒருவர், அடுத்த கட்டப் பேச்சுக்கள் சில தினங்களில் போலந்து-பெலாரஸ் நாடுகளது எல்லையில் நடைபெறும் என்பதை அறிவித்துள்ளார்.
உக்ரைன் தலைநகரை ரஷ்யப்படைகள் நாலாபுறமும் வல்வளைப்புச் செய்ய முயன்று வருகின்றன. நகரிலிருந்து மாபெரும் சனத்திரள் வெளியேற்றம் தொடங்கியுள்ளது. இந்த நிலையில்இரு தரப்பினரிடையேயான முதலாவது சமாதானப் பேச்சுக்கள் இன்று திங்கள்பகல் பெலாரஸ் நாட்டின் எல்லையோரம் அமைந்துள்ள கோமல் (Gomel) பிராந்தியத்தில் நடைபெற்றது.
பேச்சுக்களை முடித்துக் கொண்டு இரு தரப்பினரும் தத்தமது தலைநகரங்களுக்குத் திரும்பிவிட்டனர் என்பதை பெலாரஸின் ‘பெல்ரா’ (Belta) செய்தி நிறுவனம் உறுதிசெய்தது. இன்றைய பேச்சுக்கள் தொடங்குவதற்கு முன்னராக யுத்த நிறுத்தம் ஒன்றை அறிவிக்குமாறு உக்ரைன் அரசு ரஷ்யாவிடம் கோரியிருந்தது.
இவ்வாறு சமாதான முயற்சிகள் ஒருபுறம் நடக்கையில் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஸெலென்ஸ்கி தனது நாடு ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்புரிமை பெற்றுக் கொள்வதற்கான உத்தியோகபூர்வ விண்ணப்பத்தில் இன்று மாலை ஒப்பமிட்டுள்ளார். இத்தகவலையும் அதிபர் ஒப்பமிடும் காட்சியையும் அரசாங்கம் வெளியிட்டிருக்கிறது.
இதேவேளை, பிரான்ஸின் அதிபர் மக்ரோன் இன்று மீண்டும் புடினுடன் சுமார் ஒன்றரை மணிநேரம் தொலைபேசி வாயிலாகப் பேச்சு நடத்தியுள்ளார் என்று எலிஸே மாளிகை தெரிவித்துள்ளது.
சிவிலியன் இழப்புகளைத் தவிர்ப்பது குறித்துக் கவனம் செலுத்தப்படும் என்று புடின் இந்தப் பேச்சின் போது மக்ரோனிடம் உறுதியளித்துள்ளார்.*2014 இல் ரஷ்யாவுடன் இணைக்கப்பட்ட கிரிமியாக் (Crimea) குடாவை ரஷ்யாவின் எல்லையாக அங்கீகரிக்க வேண்டும் -*இராணுவ மயப்படுத்தப்படாத (de militarization), – நாஸிக்களின் பிடியில் இருந்து நீக்கப்பட்ட (denazification) பக்கம் சாராத ஒரு நாடாக உக்ரைன் மாற்றப்படவேண்டும் -இந்தக் கோரிக்கைகள் ஏற்கப்பட்டால் உக்ரைனில் இருந்து தனது படைகள் விலக்கிக் கொள்ளப்படும் என்று அதிபர்புடின் மக்ரோனிடம் மீண்டும் வலியுறுத்தினார் என்று எலிஸே வட்டாரங்கள் தெரிவித்துள்ளன
.*படங்கள் :பேச்சு மேசையில் பிரதிநிதிகள் *ஜரோப்பிய விண்ணப்பத்துடன் உக்ரைன் அதிபர்.
——————————————————————- –
பாரிஸிலிருந்து குமாரதாஸன். 28-02-2022