Home இலங்கை காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே? பொறுப்புக் கூறல் அவசியம்! பாதிக்கப்பட்டோர்க்கு நிவாரணம் – குற்றத்திற்கு தண்டனை!

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே? பொறுப்புக் கூறல் அவசியம்! பாதிக்கப்பட்டோர்க்கு நிவாரணம் – குற்றத்திற்கு தண்டனை!

by admin


முக்கிய அரசு நிறுவனங்களில் இன-மத தேசியவாதம் மேலும் வெளிப்படையாக தெரிகிறது; இதனால், சிறுபான்மை இனத்தவர் விளிம்பு நிலைக்குத் தள்ளப்படுவதும், அஞ்சுவதும் அதிகரித்து, நல்லிணக்கம் பாதிக்கப்படுகிறது என்று ஐ.நா. மனித உரிமை பேரவைக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார் ஐ.நா. மனித உரிமை உயர் ஆணையர் மிச்சல் பேச்சலெட்.

ஜெனீவாவில் ஐ.நா. மனித உரிமை பேரவையின் 49 வது கூட்டத்தின் ஒரு பகுதியாக வெள்ளிக்கிழமை (2022 மார்ச் 4) நடைபெற்ற ‘இலங்கை குறித்த பங்கேற்பு உரையாடல்’ என்ற நிகழ்வில் பேசிய அவர் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகளை அரசாங்கம் விரைவாக அங்கீகரிக்கவேண்டும். காணாமல் ஆக்கப்பட்டோர் எங்கே என்பதை விரைவாக முடிவு செய்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணமும், குற்றமிழைத்தவர்களுக்கு தண்டனையும் விரைவாக வழங்கவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

சர்வதேச குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்பேற்பதற்கான நீதிமுறையை உருவாக்காத இலங்கை அரசு அதோடு, போர்க்குற்றங்கள் தொடர்புடைய ராணுவ அதிகாரிகளை அரசாங்க உயர் பொறுப்புகளிலும் அமர்த்தியுள்ளதால், சர்வதேச அளவில் பொறுப்பேற்பை மேம்படுத்த மாற்று உத்திகளை மனித உரிமை கவுன்சில் கையாளவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐ.நா. மனித உரிமை உயர் ஆணையர் மிச்சல் பேச்சலெட்டின் உரை!

இலங்கை தொடர்பாக பெப்ரவரி 25ம் திகதி அனுப்பிய எழுத்துப்பூர்வமான அறிக்கையை பேரவை உறுப்பினர்கள் பெற்றிருப்பார்கள். 2021 பெப்ரவரியில் வெளியிடப்பட்ட முந்தைய அறிக்கைக்குப் பிறகான செயல்பாடுகளைப் பற்றியே இந்த அறிக்கை கவனம் செலுத்துகிறது. இந்த விஷயத்தை மனித உரிமை பேரவை தொடர்ந்து கண்காணிப்பதற்கான இன்றியமையாத தேவையை இந்த அறிக்கை காட்டுகிறது.

ஐ.நா. மனித உரிமை உயர் ஆணையர் அலுவலகத்துடன் இலங்கை அரசாங்கம் இணைந்து பணியாற்றுவது சமீப காலத்தில் அதிகரித்திருப்பதற்கும், சீர்திருத்தங்களை தொடங்குவதற்குமான அறிகுறிகள் தெரிகின்றன.

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் சில பிரிவுகளை திருத்துவதற்கும், இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களை விடுவிப்பதற்குமான முன்மொழிவுகள் வரவேற்கத் தகுந்த ஆரம்பகட்ட நடவடிக்கைகள்.

பயங்கரவாத தடுப்புச் சட்டம் தொடர்பான அடிப்படையான பிரச்னைகளை பரிசீலனை செய்ய மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அரசாங்கத்தை ஊக்குவிக்கிறேன்.

தவறிழைத்தவர்கள் தப்பித்துக்கொள்ளலாம் என்ற நிலையை முடிவுக்குக் கொண்டுவர, கடந்த கால அத்துமீறல்கள் மீண்டும் நிகழ்வதைத் தடுக்க ஆழமான சட்ட, நிறுவன, பாதுகாப்புத் துறை சீர்திருத்தங்களை மேற்கொள்ளவேண்டும்.

ஆனால், பொறுப்பேற்கும் விஷயத்தில் கடந்த ஆண்டும் மிகப்பரிய தடைகளும், பின்னடைவுகளும் ஏற்பட்டுள்ளன என்பது வருந்தத்தக்கது. பாதிக்கப்பட்டவர்களுக்கும், குடும்பத்தினருக்கும் தொடர்ந்து உண்மையும் நீதியும் மறுக்கப்படுகிறது.

விமர்சனங்கள் மீதான அரசாங்கத்தின் பதில் நடவடிக்கை ஜனநாயக, குடிமை செயல்பாடுகளுக்கான வெளியை சுருக்குவதாக உள்ளது. குறிப்பாக மனித உரிமை நடவடிக்கைகளுக்கான வெளி சுருங்குகிறது

குறிப்பிட்ட சில போக்குகள் மனித உரிமைகளுக்கு அச்சுறுத்தலாக இருப்பது 2021 பிப்ரவரி அறிக்கையில் அடையாளம் காணப்பட்டது. இந்த போக்குகள் தொடர்ந்து அதிகரிக்கின்றன.

அரசாங்கத்தின் குடிமை செயல்பாடுகள் ராணுவ மயமாவது தொடர்ந்து ஆழமடைந்துவருகிறது என்று தெரிவித்துள்ளார் மிச்சல் பேச்சலெட்.

குடிமை பதவிகள் ராணுவ அதிகாரிகள் கையில் குவிவது குறித்து நான் ஆழமாக கவலை கொண்டிருக்கிறேன். அந்தப் பதவிகள் தரப்படுகிற சிலர் சில மோசமான மனித உரிமை மீறல்களில் குற்றம்சாட்டப்பட்டவர்கள்.

2020 இறுதியில் இருந்து புத்தமத மரபு பாதுகாப்பு, வனப்பாதுகாப்பு தொடர்பில் நிலம் தொடர்பான தகராறுகள் அதிகரித்துள்ளன. இதனால், சிறுபான்மை சமூகங்களின் குறைகள் தீவிரமைடந்துள்ளன. புதிய பதற்றங்களை இது தோற்றுவிக்கிறது.

அரசமைப்புச் சட்டத்தின் (யாப்பு) 20வது திருத்தத்துக்குப் பிறகு இலங்கை மனித உரிமை ஆணையம் உள்ளிட்ட நாட்டின் சில ஆணையங்கள், நிறுவனங்களின் சுதந்திரத் தன்மை செல்லரித்துப் போவது கண்டு வருத்தம் கொள்கிறேன்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட பல பத்தாயிரம் பேர் தொடர்பில் விசாரணை செய்வதற்காக அமைக்கப்பட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தின் மீது பாதிக்கப்பட்டோருக்கு போதிய நம்பிக்கை இல்லை.

வரவிருக்கிற அரசமைப்புச் சட்ட மறு வரைவு நடவடிக்கை முக்கிய நிறுவனங்களின் சுதந்திரம் காக்கப்படுமா என்பதற்கான முக்கியச் சோதனையாக இருக்கும். இந்த மறுவரைவு நடவடிக்கை, அதிகாரப் பகிர்வுக்கும், மனித உரிமைக்கும் முக்கியத்துவம் தரவேண்டும்.

உள்நாட்டிலேயே வடிவமைத்து செயல்படுத்தப்படும், எல்லோரையும் உள்ளடக்கும் நல்லிணக்க மற்றும் பொறுப்பு ஏற்பு செயல்முறை தொடர்பாக இந்த கவுன்சிலில் வாக்குறுதி அளித்து இரண்டாண்டுகள் ஆகிறது. ஆனால், இன்னும் பொறுப்பேற்பதற்கும், நல்லிணக்கத்துக்கும் இட்டுச் செல்வதற்கான நீதிமுறை ஒன்றுக்கான நம்பத்தகுந்த செயல்திட்டம் எதையும் அரசாங்கம் வழங்கவில்லை.

காணாமல் ஆக்கப்பட்டோர் விஷயத்தில் பாதிக்கப்பட்டவர்கள், குடும்பங்கள் ஆகியோரின் தொடர் வேதனைகளையும், மன உளைச்சலையும் கண்டு கவலை கொண்டுள்ளேன்.

அவர்களது உரிமைகளை அரசு அங்கீகரிக்கவேண்டும். அவர்களுக்கு என்ன நேர்ந்தது அல்லது எங்கே இருக்கிறார்கள் என்பதை அவசரமாக உறுதி செய்யவேண்டும். தவறிழைத்தவர்களை நீதியின் முன் நிறுத்தவேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் செய்யவேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

ஈஸ்டர் வெடிகுண்டு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களும், மத தலைவர்களும் தொடர்ந்து நீதிக்காக, நிவாரணத்துக்காக, எப்படி அந்த தாக்குதல் நடந்தது என்ற உண்மையைக் கேட்டு குரல் கொடுக்கிறார்கள். குறிப்பாக பாதுகாப்பு அமைப்பின் பங்கு அதில் என்ன என்பதை அவர்கள் கேட்கிறார்கள்.

குடிமை அமைப்புகள், மனித உரிமைப் பாதுகாவலர்கள், பத்திரிகையாளர்கள் ஆகியோர் கண்காணிப்புக்கும், தொந்தரவுக்கும், அச்சுறுத்தலுக்கும் உள்ளாவதாக தொடர்ந்து வரும் செய்திகளால் ஆழமான கவலை கொள்கிறேன். தொடரும் காவல் மரணங்கள், போலீஸ் என்கவுன்டர்கள் திரும்பத் திரும்ப நிகழ்வது எச்சரிப்பதாக உள்ளது. போலீஸ், ராணுவம் மோசமாக நடத்துவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் வருகின்றன. பாதுகாப்புத் துறை சீர்திருத்தம் வேண்டும் என்பதை இது எடுத்துக்காட்டுகிறது.

இலங்கையில் நடந்த சர்வதேசக் குற்றங்கள், மோசமான மனித உரிமை மீறல்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதில், நீதிமுறையை கடைபிடிப்பதில் அடுத்தடுத்து வந்த இலங்கை அரசாங்கங்கள் தவறிவிட்டன என்பதை கவுன்சிலில் சமர்ப்பித்த முந்தைய அறிக்கைகள் விவரிக்கின்றன.

தற்போதைய அரசாங்கம், பொறுப்பேற்கும் நிலையை உருவாக்க விரும்பாதது மட்டுமல்ல போர்க்குற்றங்கள் தொடர்புடைய ராணுவ அதிகாரிகளை அரசாங்கத்தின் உயர் பதவிகளிலும் அமர்த்தியுள்ளது. இது தண்டனை குறித்து கவலை தேவையில்லை என்ற நிலையை இது மேலும் மோசமாக்குகிறது.

இந்த காரணங்களாலும், பாதிக்கப்பட்டவர்கள் குறையை ஏதோ ஒரு வகையில் தீர்ப்பதற்கும், சர்வதேச அளவில் பொறுப்பேற்கும் நிலையை மேம்படுத்துவதற்காக மாற்று உத்திகளை கையாள வேண்டும் என்று கவுன்சிலை கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

46/1வது தீர்மானத்தின் பொறுப்பேற்பு குறித்த அம்சங்களை செயல்படுத்துவது தொடர்பாக தயாரிப்பு வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன.

குற்றங்களுக்கு நீதி வழங்கல் என்ற பார்வையில், மேற்கொண்டு தகவல் திரட்டுவதில் உள்ள ஓட்டைகளை, முன்னுரிமைகளை கண்டறிவது என்ற நோக்கத்தில், பாதிக்கப்பட்டவர்களை மையப்படுத்திய அணுகுமுறையில் ஆதாரக் களஞ்சியத்தில் உள்ள தகவல்களை எங்கள் குழு ஆராயும்.

இதற்கு என் அலுவலகம் குறிப்பிடத்தக்க அளவு வேலை செய்யவேண்டும். இதற்கு நேரம், போதிய மனித, நிதி வளம், அரசுகளின் ஒத்துழைப்பு ஆகியவை தேவை. இலங்கையில் சர்வதேசக் குற்றங்களுக்கு உதவியாக இருந்த அனைத்துத் தரப்பையும் விசாரணைக்கு உட்படுத்தி, நீதி முறையில், உரிய எல்லையில், சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான ஒத்துழைப்பு இதில் அடங்கும்.

ஏற்றுக்கொள்ளப்பட்ட, பிராந்தியம் கடந்த, உலகளாவிய நீதியெல்லை என்ற கோட்பாட்டின் கீழ் இந்த நடவடிக்கை அமைய வேண்டும்.

மோசமான சர்வதேசக் குற்றங்கள் தொடர்பில் பொறுப்பேற்பை உறுதி செய்ய தீர்மான எண் 46/1-ன் கீழ் வழங்கப்பட்ட உரிமை ஒரு வாய்ப்பை அளிக்கிறது. இது இன்றியமையாத பணி. தண்டனை பற்றிய கவலை இல்லாத நிலை நீடிக்கும் வரையில் இலங்கை உண்மையான நல்லிணக்கத்தையோ, நீடித்த அமைதியையோ அடையாது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More