அகதிகளை ரஷ்யாவுக்குள் இழுக்க வழிகளைத் திறக்கிறது மொஸ்கோ !
பிரான்ஸ் உக்ரைன் மக்களுக்காக 2.5 மில்லியன் அயோடின் டோஸ் அடங்கிய
மருத்துவ உதவிப் பொருள்களை அனுப்பியிருக்கிறது.வெளிவிவகார அமைச்
சர் Jean-Yves Le Drian அதனை உறுதிப்படுத்தியிருக்கிறார்.
உக்ரைன் நாட்டின் அணு மையங்கள் போரில் தாக்கப்படக் கூடிய பேராபத்து
நிலை தொடர்ந்து காணப்படுகிறது. இதனால் அங்குள்ள மக்கள் எந்த நேர
மும் அணுக் கதிர்வீச்சு ஆபத்தை எதிர் கொண்டுள்ளனர். அதனைக்கருத்திற்
கொண்டே பிரான்ஸ் அயோடின் மாத்திரைகளை அங்கு அனுப்பியிருக்கிறது.
அதிபர் மக்ரோன் அணுப் பாதுகாப்புத் தொடர்பாக உக்ரைன் அதிபருடன் ஞாயிறன்று தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு பேசியிருந்தார்.
இதேவேளை, அணு அனர்த்தம் ஒன்றை எதிர்பார்த்து ஐரோப்பிய மக்கள் அயோடின் மாத்திரைகளை வாங்கிச் சேமிக்கத்தொடங்கியிருப்பதால் அதன் விற்பனைசடுதியாக உயர்ந்திருக்கிறது.
இதற்கிடையில் – தாக்குதல் பகுதிகளிலிருந்து வெளியேறுகின்ற உக்ரைன் மக்களுக்குப் பாதுகாப்பான வழிகளைத் திறப்பதாக உறுதியளித்திருந்த மொஸ்கோ, இப்போது அகதிகள் தனது நாட்டுக்குள்ளும் பெலாரஸினுள்ளும் செல்வதற்கான வழிகளைமாத்திரமே அறிவித்திருக்கிறது. பல லட்சக்கணக்கான அகதிகள் மேற்கே போலந்து நோக்கியும் அங்கிருந்து ஏனைய ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கும் நகர்ந்துவரும் நிலையில் அவர்களைரஷ்யாவுக்குள் வரவழைக்க மனிதாபிமான வழிகளைத் திறந்துள்ளார் புடின்.
இது அவரது தார்மீக மற்றும் அரசியல்ரீதியான இழிவான தன்மையையே காட்டுகிறது என்று அதிபர் மக்ரோன் கண்டித்திருக்கிறார்.
அதிபர் மக்ரோன் இன்று திங்கள் மாலைஉக்ரைன் நிலைவரம் தொடர்பாக ஜோ பைடன், பொறிஸ் ஜோன்சன் ஆகியோருடன் வீடியோ வழியான உரையாடல் ஒன்றினை நடத்துகின்றார். அதேசமயத்தில் பெலாரஸ் தலைநகர் மின்ஸ்க்கில் உக்ரைன் மற்றும் ரஷ்யா சமாதானப் பேச்சுக் குழுவினர் தங்கள் மூன்றாவது கட்டசந்திப்பினை இன்று நடத்தியுள்ளனர்.
குமாரதாஸன். பாரிஸ்.
07-03-2022