நிலவும் நெருக்கடியை முடிவிற்கு கொண்டு வருவதற்கு 18 மாதங்களுக்கு இடைக்கால தேசிய ஐக்கிய அரசாங்கமொன்றை ஸ்தாபிக்க வேண்டும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL) தெரிவித்துள்ளது.
அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையை உருவாக்குவதற்கான 13 யோசனைகளை இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் முன்வைத்துள்ளது.
நிறைவேற்று அதிகாரம் தொடர்பில் அர்த்தமுள்ள பாராளுமன்ற கண்காணிப்பு இல்லாமை, அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் பொறுப்புக்கூறல் மற்றும் வௌிப்படைத்தன்மை இல்லாமை என்பன தற்போதைய அமைதியின்மைக்கு காரணமாக அமைந்துள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய ஐக்கிய இடைக்கால அரசாங்கம் 18 மாதங்கள் மாத்திரமே ஸ்தாபிக்கப்பட வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு ஸ்தாபிக்கப்படும் அரசாங்கம்
தேர்தலொன்றை நடத்த வேண்டும் எனவும் பொதுத்தேர்தல் நிறைவடைந்த பின்னர் அரசாங்கத்தின் காலம் நிறைவிற்கு வரும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசியலமைப்பு பேரவையின் அனுமதியின் படி மத்திய வங்கியின் ஆளுநரும் நிதிச்சபையும் நியமிக்கப்பட வேண்டும் எனவும் சட்டத்தரணிகள் சங்கம் சிபாரிசு செய்துள்ளது.